நேற்று பிப்ரவரி 14 மதியம் 1:30 மணிக்குத்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஹட்சன் ஹோட்டலில் செப்டிக் டேங் சுத்திகரிக்க வந்த முருகேசனும், மாரியும் அதே ஹோட்டலில் வேலைபார்த்தவருமான ரவியும் செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் இறந்துள்ளனர். சுமார் 10 அடி ஆழம் இருக்கும் அந்த தொட்டியை மாதம் ஒருமுறை சுத்திகரித்து வந்துள்ளனர் ஹோட்டல் உரிமையாளர்கள்.
காவலர்கள் இந்த சம்பவத்தை பற்றி விளக்கும்போது, "கெம் எத் சொலுஷன் என்னும் நிறுவனத்தில் இருந்து ஐந்து ஆட்களை கொண்டு செப்டிக் டேங் சுத்தம் செய்துள்ளனர். சுத்தம் செய்துக்கொண்டு இருக்கும்போதே, வேலை பார்த்துக்கொண்டிருந்த இருவர் விஷவாயுவினால் மயங்க, மீதம் இருந்த இரண்டு பேர் வெளியே வந்துவிட்டனர். இதை பார்த்துக்கொண்டிருந்த ஹட்சன் ஹோட்டலில் வேலைபார்க்கும் ஊழியர் மயங்கி கிடப்பவர்களை காப்பாற்ற உள்ளே குதித்து அவரும் பலியாகியுள்ளார்" என்கின்றனர்.
தமிழகத்தில் மட்டுமல்ல கடந்த மாதம் ஜனவரி 7ஆம் தேதி பெங்களூருவிலும் துப்புரவு தொழிலாளிகள் மூன்று பேர் மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும்போது இறந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் செய்தித்தாள்களில் வந்தவண்ணம் உள்ளதே தவிர, சற்றும் குறைந்தப்பாடில்லை. விண்வெளிக்கு ராக்கெட்டை கச்சிதமாக விடும் நாட்டில் மனித கழிவை அள்ள மனிதனே பயன்படுகிறான் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
இந்த துப்புரவு தொழிலாளிகளுக்காக இந்திய அரசாங்கம் என்னதான் செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்ப்போம். 1993 ஆம் ஆண்டில் துப்புரவுத் தொழிலாளிகளை வைத்து மனிதக்கழிவுகளை சுத்தம் செய்ய தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்பு, 2013ல் அந்த சட்டத்துடன் கூடுதலாக சுகாதாரமற்ற கழிப்பறைகள், சாலைகளில் செல்லும் கழிவுநீர், குப்பைத்தொட்டிகள் போன்ற எல்லாவற்றையும் மனிதர்களை கொண்டு சுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு புனர்வாழ்வு கொடுக்க வேண்டுமென்றது.
இத்தனை தடைச்சட்டம் கொண்டுவந்து என்ன பயன், இன்றும் இப்பொழுது கூட இந்தியாவில் எங்கோ ஒரு துப்புரவு தொழிலாளியை வைத்து கழிவுகளை அகற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதையெல்லாம் அரசாங்கம் பார்ப்பதில்லையா என்றால் அரசாங்கம் கொடுத்த சீருடையை போட்டுக்கொண்டு காலை வேளைகளில் சாலையில் ஓடும் கழிவுநீரை சுத்தம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.
இந்தியாவில் மனித கழிவுகளை அள்ளும் துப்புரவு தொழிலாளிகளை வைத்து பல கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் சில, 2011ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 1,80,657 துப்புரவு தொழிலார்களின் குடும்பம் இருக்கின்றது. அதே ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மனிதக்கழிவுகளை அள்ளுவதற்காக 7,94,000 வழக்குகள் இருந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் தான் அதிக துப்புரவுத்தொழிலாளியின் குடும்பங்கள் இருப்பதாகவும், இந்த மாநிலத்தை தொடர்ந்து மத்தியப் பிரேதசம், உத்திரப்பிரேதசம், திரிபுரா போன்ற மாநிலங்கள் இடம்பெற்றிருக்கிறது. 2011ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 72 சதவீதத்திற்கு மேல் சுத்தமற்ற கழிவறைகளை கொண்ட மாநிலங்களில் ஆந்திரப் பிரேதசம், அஸ்ஸாம், தமிழ்நாடு போன்றவை இடம்பெற்றுள்ளது. தடைகள் அனைத்தும் பெயருக்கு மட்டும் இருந்தால் இப்படித்தான் நடக்குமோ?