பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் எந்த அளவுக்கு காரணமோ அதற்கு சற்றும் குறையாத அளவு ஆர்எஸ்எஸ்சின் ஆதி வேரான இந்துமகா சபையும் காரணம் என்றும், மோடிக்கு அந்த வரலாறு தெரியவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கோபண்ணா தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா கூறியது...
ஒரு நாட்டினுடைய பிரதமர் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்தில் லாவணிக் கச்சேரி நடத்தக் கூடாது. ஒரு பொறுப்புள்ள பிரதமராக இருக்கக் கூடியவர், பொறுப்பற்ற முறையில் பேசி அரசியல் சர்ச்சைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமே தவிர, காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வதில் நேரத்தை செலவழிப்பதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.
இந்த நாட்டில் பிரிவினை எப்படி ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட துன்பங்கள் குறித்தெல்லாம் நரேந்திரமோடி பேசுகிறார். பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்துவதற்கு ஜின்னா எப்படி முக்கிய காரணமோ, அதேபோல் இந்துமகா சபையும் ஒரு காரணம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அன்றைக்கு மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் ஜின்னா ஈடுபட்டபோது, அதற்கு இணையாக மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் இந்து மத வெறியர்களும் ஈடுபட்டார்கள். குறிப்பாக இந்து மகாசபை ஈடுபட்டது. ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டது.
இந்த நாட்டில் மத கலவரமும், அதனால் மிகப்பெரிய பாதிப்புகளும் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸால் வளர்க்கப்பட்ட நரேந்திரமோடி, பாகிஸ்தான் பிரிவிணை பற்றி, இந்த நாட்டில் ஏற்பட்ட துன்பங்கள் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. இந்த பிரச்சனைக்கு ஒரு காரணமாக இருந்த, அந்த பாரம்பரியத்தில் இருந்து வந்த நரேந்திர மோடி இத்தகைய பேச்சை தவிர்க்க வேண்டும். காங்கிரஸ் தலைமையையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சிப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார்.