இந்தி மாத நிறைவு கொண்டாட்டம் சமீபத்தில் டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றிருந்தார். ஆளுநர் உட்பட அங்கிருந்த பலரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், உள்ளிட்ட பலர் ஆளுநரை கண்டித்துப் பேசியிருந்தனர். ஆனால் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆளுநர் குறித்த எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் ‘திராவிடநல் திருநாடும்’ என்ற சொல்லை வைத்து தி.மு.க.விற்கு எதிராகப் பேசியிருந்தார்.
இது தொடர்பாக, திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீரை நக்கீரன் வாயிலாக பேட்டி கண்டோம். அப்போது அவர் பேசியதாவது, “டிடி தமிழ் அலுவலகத்தில் ஆளுநர் திட்டமிட்டபடியே தமிழ்த்தாய் வாழ்த்தில் அந்த வரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சி பற்றிய நிரல் பெற்றுக் கொண்ட பிறகே ஆளுநர் மாளிகையிலிருந்து அந்த நிகழ்ச்சிக்கு ஒப்புதல் வழங்கப்படும். எனவே இது திட்டமிட்ட செயல்தான். ஆளுநருக்கு நன்றாகத் தமிழ்த்தாய் வாழ்த்து தெரிந்திருந்தால் மேடையிலேயே அதைத் திருத்தி பாடியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இனவாதம் பேசுகிறார்கள் என்று முதலமைச்சரைக் குறை பேசிக்கொண்டிருக்கிறார். ஆரியத்திற்கும், திராவிடத்திற்கு எதிராக நீண்ட காலமாக நடக்கும் யுத்தம்தான் இது. முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே நடப்பது அல்ல. ஆர்.என்.ரவி, சாதாரண மனிதர்தான். அவர் வகித்திருக்கும் ஆளுநர் பதவியிலிருந்து ஆரியராக செயல்படக்கூடாது என்பதற்காகத்தான் எதிர்க்கிறோம்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகளைக் கலைஞர் நீக்கியதிற்கு உயர்ந்த நோக்கம் இருந்தது. ஒரு மொழியை வாழ்த்திப் பாடும்போது மற்றொரு மொழி அழிந்து வருகிறது என்று சொன்னால் அந்த மொழியைக் கற்றுக்கொள்பவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதற்காகத்தான் அதை நீக்கினார். ஆனால் நீக்கப்பட்ட வரிகளில் சொல்லப்பட்டது எல்லாம் உண்மைதான். டிடி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலிலுள்ள வரிகள் புறக்கணிக்கப்பட்டதிற்கு முன்பே சீமான் அந்த வேலையைச் செய்திருந்தார். ‘நந்தன்’ திரைப்பட நிகழ்ச்சியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் வேண்டுமென்றே ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தையை சீமான் புறக்கணித்துப் பாடியிருந்தார். சீமானை வைத்து ஒத்திகை பார்த்த பின்னரே ஆளுநரும் அந்த வரிகளைப் புறக்கணித்துப் பாடத் திட்டமிட்டிருக்கிறார். சீமான் பேசியபோதே கண்டித்திருந்தால் இந்த பிரச்சனையை ஆளுநர் செய்திருக்க மாட்டார். திராவிடத்திற்குத் தாய் மொழியாக இருப்பதே தமிழ்தான். இது சீமானுக்கும் நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு கங்காணியாகச் செயல்பட்டு வருகிறார். இந்தி விழாவை தமிழ்நாட்டில் ஏன் நடத்தினார்கள்? என்று ஆளுநருக்கு எதிராகக் கேட்க சீமானால் முடியாது. ஏனென்றால், அதற்கான திராணியும் தெம்பும் சீமானிடம் இல்லை.
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்ற பெயரை சூட்டினார். அந்த பெயரை தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்னபோது கள்ள மெளனத்துடன் இருந்தவர்தான் சீமான். அதை எதிர்த்து ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. இந்தி விழாவை தமிழ்நாட்டில் நடத்தியதற்கு தி.மு.க. மாணவர் அணி எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினர். இதே போல் சீமான் எதாவது எதிராக பேசினாரா? லைம் லைட்டில் வருவதற்காக எதாவது தி.மு.க.வை பற்றி பேசி அடிக்கடி விளம்பரம் தேடிக்கொள்வார். இதுதான் அவரின் நோக்கம். 1994க்கும் முன்பாக விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக சுப. வீரபாண்டியனை கைது செய்தனர். அப்போது அவரை பிரபல பத்திரிகை நிறுவனம், விடுதலை புலிகளின் முகமாக மாறுகிறாரா? என்று எழுதியிருந்தனர். அதற்கு சுப. வீரபாண்டியன், நான் முகமாக மாறவில்லை என்னுடைய முகவரியாக விடுதலை புலிகள் மாறியிருக்கிறார்கள் என்றார். அண்மையில் மறைந்த கணேஷன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் கைதாகும் போது பத்திரிகையாளர்கள் கணேஷனிடம், இந்த பிரிவில் கைதானால் 1 வருடத்திற்கு மேல் ஜாமீன் கிடையாது என்றனர். அதற்கு அவர் தயார்தான் என்று சில வரிகளை கூறியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஆனால் போருக்கு முன்பாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சீமான் பேசிய வரலாறு இருக்கிறதா? ஈழத் தமிழர்கள் குறித்து அவர் பேசுவதற்கு யோக்கியதை இல்லாதவர்” என்றார்.