சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா கூட்டத்தில் கலந்தகொண்ட உதயநிதி ஸ்டாலின் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது "இன்று நாம் கழகத்தின் முப்பெரும் விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளோம். அண்ணா மற்றும் பெரியார் பிறந்த தினம், கழகத்தின் பிறந்த தினத்தை உங்களோடு இணைந்து கொண்டாடி மகிழந்தது சிறப்பாக இருந்தது. இங்கே நிறைய மூத்த கழக முன்னோடிகள் இருக்கிறீர்கள். நான் பெரியாரை பார்த்தது கிடையாது, அண்ணாவோடு பேசியது கிடையாது, தலைவர் கலைஞரை பார்த்து வளர்ந்தவன். நீங்கள் எல்லாம் பெரியார் அண்ணாவோடு பழகியவர்கள், பேசியவர்கள். எனவே உங்களை வாழ்த்தி பேச அனுபவமோ, வயதோ இல்லை. எனவே உங்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளையும், பொற்கிழிகளையும் வழங்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதற்காக அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்துவிட்டு சென்றுவிடுங்கள் என்றுதான் முதலில் என்னிடம் அவர் கேட்டார். நான்தான் இல்லை, முழு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்தரங்கத்தையும் கேட்டுவிட்டு செல்கிறேன் என்று கூறினேன்.
இந்த கரோனா காலமாக இருப்பதால் அவர் என்னை விரைவாக வீட்டிற்கு அனுப்ப பார்க்கிறார். ஆனால் அனைவரும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக நானும் இருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் லஞ்சம் கொடுக்க முடியாத காரணத்தால் தன்னுடைய ஆட்டோவை எரித்த சம்பவத்தை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த சம்பவத்தின் வீடியோவை நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி இருந்தார். நான் அந்த வீடியோவை அண்ணன் சேகர் பாபு அவர்களுக்கு அனுப்பி ஆட்டோகாரரை சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தேன். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஊரடங்கு இருந்த காலகட்டம் அது. அதனால் திங்கள் கிழமை சந்தித்தாலும் பரவாயில்லை என்று கூறினேன். இருந்தாலும் அடுத்த நாள் காலை அண்ணன் அவர்கள் ஆட்ரோகாரரை அழைத்து என் நேரில் நிறுத்தினார். நான் அவருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று விரும்பினேன், அண்ணன் சேகர்பாபு அவர்களே நிதியினை என்னிடம் வழங்கி இளைஞரணி சார்பாக கொடுப்பதாக நினைத்துக்கொண்டு கொடுங்கள் என்று என்னிடம் உரிமையாக கூறினார். பிறகு நான் அவருக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அடுத்த இரண்டு நாட்களில் ஆட்டோ வாங்கி அதனை தலைவர் கையால் கொடுக்க வைத்தவர்தான் அண்ணன் சேகர்பாபு. அத்தகைய செயல் வீரராக அவர் கழகத்திற்கு இருந்து வருகிறார்.
என் மனதில் மிகப்பெரிய குறை நீண்ட நாட்களாக இருக்கிறது. தற்போதைய தலைமுறையினரிடம் பெரியார், அண்ணா மற்றும் நம்முடைய கொள்கைகளை கொண்டு சேர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உண்டு. அதை அண்ணன் சுப.வீ போன்றவர்கள் நீக்கி வருகிறார்கள். தற்போது அவர் திராவிட பள்ளி போன்ற அமைப்பை ஏற்படுத்தி நிறைய மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வருகிறார். அதில் இளைஞர் அணியை சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் பயில இருக்கிறார்கள். பெரியார் இருந்தபோது நாடு அப்படி அடிமைப்பட்டு கிடந்ததோ இதை போல ஒரு நிலைமையை ஆளும் அடிமை அதிமுக அரசு உருவாக்கி உள்ளது. அதற்கு மிக சிறந்த உதாரணம் நீட் தேர்வு. இந்த நான்கு வருடங்களில் 13 மாணவர்களை நாம் இழந்திருக்கிறோம். தொடர்ந்து நீட் தேவையில்லை என்று வலியுறுத்தி வருகிறோம். இந்த நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நாங்கள் கூறினால் எப்படி செய்வீர்கள் என்று எங்களிடமே ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள். அந்த ரகசியத்தை தற்போது சொல்கிறேன். அதற்கு ஆட்சியாளர்களுக்கு மானம்,ரோஷம், மாணவர்கள் மீது அக்கறை இருக்க வேண்டும். அது எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் அதனை கண்டிப்பாக செய்வோம்" என்றார்.