
நடிகர் விஜயின் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் ரஜினியைப் போல பல ஆண்டுகளாகவே கருத்துத் தெரிவித்து வந்தார். ஆனால் எஸ்.ஏ.சியின் நலம் விரும்பிகள் சிலர் ரஜினியைப் போல வாய்ச் சொல் வீரராக இருக்காதீர்கள் என்று அட்வைஸ் சொல்ல, அதன்படி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர். அதில் சில வெற்றிகளும் கிடைத்தது.
இந்த நிலையில்தான், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குவதற்கு முன்னோட்டமாக, தற்போது திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், பெரிய சர்ச்சைக்கு உள்ளானதோடு, விஜய் அரசியலுக்கு வரும் முன்னோட்டம்தான் என்று பேசும்படி ஆகியது.

வழக்கமாக விஜய் பிறந்த நாள் அன்றோ அல்லது திரைப்படம் வெளியாகும் அன்றோதான் போஸ்டர்களை அடித்துக் கலக்கி எடுப்பார்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் இப்பொழுதோ, இதில் இருந்து மாறுபட்டு விஜய்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லும் வகையில், முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு ஈடாக விஜய் புகைப்படத்தை அச்சடித்து அதில்,
இருபெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வரும்
இளம் தலைவரே, நாளைய தமிழக முதல்வரே
2021 உங்கள் தலைமையில் அமையட்டும்
தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும்
என்கிற வாசகங்களுடன் திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கத்தினர், திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி கலக்கி எடுத்துள்ளனர்.

நாம் இது சம்பந்தமாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, தலைமை ஒப்புதலுடன் தான் தற்போது திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளோம். விரைவில் சென்னை, மதுரை உள்ளிட்ட... ஏன் தமிழகம் முழுவதும் இதுபோன்ற போஸ்டர் ஒட்டப்படவுள்ளதாகத் தெரிவித்தனர்.
நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பா.ஜ.கவில் சேரவுள்ளதாக அண்மையில் வந்த தகவலை அவர் மறுத்த நிலையில்தான், திருச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒட்டிய போஸ்டர் முக்கியத்துவம் பெற்றதாக ஆகிவிட்டது.

இந்த போஸ்டர் விவகாரம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு வர, விஜயின் பனையூர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது அரசியல் கட்சி குறித்த எதிர்பார்ப்பு, களநிலை ஆலோசனைகள் குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளதாகவும் விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

திருச்சியில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியது மாவட்டத் தலைவர், ராஜா தரப்பு ஆதரவாளர்கள். ஆனால், அவர்களை இதுவரை விஜய் மற்றும் சந்திரசேகர் சந்தித்துப் பேசவில்லை. பிற்பகலுக்கு மேல் அவர்களைச் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.