தமிழக அரசியல் சூழல் என்பது ஆள்பவர்களுக்கு சீரியஸாக இருந்தாலும், மக்களுக்கு அவர்களின் செயல்கள் காமெடியாகவும் அதன் விளைவுகள் டிராஜெடியாகவும் உள்ளன. அமைச்சர் செல்லூர் ராஜு தெர்மாகோல் வைத்து வைகை ஆற்றை மூடியதிலிருந்து, ஜெயலலிதா சிலைக்கு வந்து பின் சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யச் சொன்ன விளம்பரம் வரை அனைத்தும் மக்கள் மத்தியில் சிரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கியது. இவர்கள் செயல் இப்படி. செயல் தலைவர், சட்டமன்றத்தில் கைகலப்பு, சட்டை கிழிப்பு என முயற்சி செய்தாலும் முழு பெர்ஃபாமன்ஸாக அது இல்லை.
எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் அவ்வப்போது கருத்துக் கலவரம் உண்டு செய்கிறார்கள். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். விஷால், ஆர்.ஜே.பாலாஜி, ஜூலி எல்லாம் வர இருக்கிறார்கள். தமிழகத்தின் அரசியல் மேடை இப்படி நிரம்பி வழிந்தாலும் ஒரு பவர்ஃபுல் பெர்ஃபார்மரை தமிழ் மக்கள் மிகவும் 'மிஸ்' பண்ணுகிறார்கள். அவர்தான் கேப்டன். தேமுதிக தலைவரான விஜயகாந்த், கடந்த ஒரு வருடமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, மெல்ல மீண்டு வந்தாலும் முன்பு போல் செய்தியாளர்களை சந்திப்பதோ, மேடையில் பேசுவதோ இல்லை. ஒரு காலத்தில் செய்திகள், சமூக ஊடகங்கள், மீம்ஸ்கள், படங்கள் என அனைத்து ஊடக வடிவங்களிலும் பார்த்துப் பார்த்து 'ரசித்த' மனிதனை இப்பொழுது பார்க்காமல் இருப்பது, அரசியல் வெளியில் அவரது பங்களிப்பு குறைந்திருப்பது மக்களை மிகவும் 'மிஸ்' பண்ண வைக்கிறது.
தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க...
இப்பொழுது அவர் கொடுக்கும் ஒன்றிரண்டு பேட்டிகளிலும் கூட அவரது குரலோ, பேச்சோ பழைய நிலையில் இல்லை. திடீரென விமான நிலையத்திலோ வேறு இடங்களிலோ அவரைப் பார்க்கும் செய்தியாளர்கள், பழைய நினைவுகளுக்கு செல்கிறார்கள். ஒரு காலத்தில் எத்தனை ஆக்ஷன், எத்தனை பன்ச்கள்... நல்லதோ கெட்டதோ செய்தியாளர் சந்திப்புகளே த்ரில்லிங்காகத்தான் போகும் என்கிறார்கள். அப்பொழுதெல்லாம் விஜயகாந்த் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்றால் செய்தியாளர்கள் முன்னெச்சரிக்கையாகத்தான் இருப்பார்களாம். அவர் திடீரென கோபப்பட்டு 'நீ எந்த சேனல்?' 'தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க', 'இந்த கேள்விய அந்த அம்மாட்ட கேப்பிங்களா?' 'என்ன கேட்டீங்க இங்க வாங்க, நான் உங்கள அடிக்க மாட்டேன் வாங்க' என்று செய்தியாளர் சந்திப்பில் 'அவன் இவன்' விஷால் போல நவரசங்களையும் காட்டுவார். இவ்வாறு நடந்துகொண்டு ஊடகங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் சம்பாதித்தார். தனது தொண்டர்களை அன்பாகத் தட்டுவது, வேட்பாளரை வெளுப்பது என எப்பொழுதும் அதிரடிதான். அவரது ஒவ்வொரு பிரஸ் மீட்டையும் அரசியல் விமர்சகர்கள் கவனித்தார்களோ இல்லையோ மீம் கிரியேட்டர்கள் விடாமல் ஃபாலோ செய்தார்கள். அந்த அளவுக்கு மீம் மெட்டீரியல் கொடுத்த ஒருவரை நாம் மிஸ் பண்றோம்.
சட்டமன்றத்திலும் சண்டைபோடுவோம்
அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 2011ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியடைந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் புகழ் பாடுவதும், கவிதை எழுதி வாசிப்பதும், பாடல் பாடுவதும், திருக்குறள் சொல்வதுமாக இருந்தனர். சட்டமன்றத்தை ஒரு கல்ச்சுரல் ஈவன்ட் போல் நடத்தி வந்தனர். அதை ஒரு ஸ்டண்ட் ஷூட்டாக மாற்றிய பெருமை நம் புரட்சிக்கலைஞரையே சாரும். ஒரு விவாதத்தில் அமைச்சர் விஸ்வநாதனை நோக்கி நாக்கைத் துருத்தி, முஷ்டியை மடக்க, சட்டமன்றத்தின் மாட்சிமை குறைந்ததாகக் கண்டனங்கள் எழுந்தன. இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூட சொல்லலாம். துதி பாடிய இடத்தில் தல தில்லா நாக்கைத் துருத்தியதும், ஜெயலலிதாவே சற்று தடுமாறி விட்டார். இன்றும் திமுக வலுவான எதிர்க்கட்சியாக இருந்து பல பிரச்சனைகளை செய்தாலும் அந்த அளவுக்கு எண்டெர்டெயின்மென்டை இவர்களால் தரமுடிவதில்லை.
மேடைப் பேச்சு, சிரிச்சா போச்சு
முன்பெல்லாம் "ஏ புள்ள" என்று கண்ணடித்துத் தொடங்கும் மிமிக்ரி கலைஞர்கள் இப்பொழுதெல்லாம் "மக்களே" என்றுதான் விஜயகாந்த் குரலை தொடங்குகிறார்கள். இது விஜயகாந்த் மேடையில் பேசும்போது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. மேடையில் அவர் பேசுவது அரசியல்வாதிகள் பேசுவது போல் இருக்காது. எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை கோபமாகவும், சிரித்துக்கொண்டும் சுமத்துவார். அவர் உரையாற்றிய பல மேடைகள் இன்றும் மக்கள் மனதில் நின்றிருக்கிறது. "இது என்னது இது" என்று அவர் மைக் வயரைப் பிடித்து இழுத்தது எவர்க்ரீன் நினைவு. பேசும்போது யாராவது கூட்டத்தில் ஏதாவது செய்தால் உரிமையோடு திட்டுவார். ஆனால், அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சில நடவடிக்கைகள் மக்களின் மத்தியில் அவரின் புகழை சீர்குலைத்து அவரை நகைச்சுவையாக்கும் அளவுக்கெல்லாம் சென்றிருக்கிறது.
கேப்டனின் பஞ்ச் வசனங்கள் எங்கே?
முன்பெல்லாம் கம்மியான வார்த்தைகளில் வசனங்கள் இருந்தால், 'மணிரத்னம் படமா?' என்று கேட்பார்கள். இப்பொழுதெல்லாம் பல படங்களில் வசனங்கள் குறைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமாகவே வைக்கப்படுகின்றன. ஆனால், ஒரு காலத்தில் இவருக்காகவே அடிஷனல் ஷீட் வாங்கி வசனம் எழுதினார்கள் வசனகர்தாக்கள். 'கேப்டன் பிரபாகரன்' கிளைமாக்ஸ் காட்சியும் ரமணா பட 'நம்ம நாட்டுல மொத்தம் எட்டு லட்சம்...' வசனமும் இன்னும் பலர் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. பன்ச் வசனங்களும், பாகிஸ்தான் தீவிரவாதியை தேடித் தேடிப் பிடிப்பதும் விஜயகாந்த் படங்களின் பாணி. தமிழ் சினிமாவில் யார் அதிக போலீஸ் வேடங்கள் ஏற்று நடித்தார்கள் என்று பார்த்தால் அது கேப்டன் விஜயகாந்த்தான். சண்டையிலும் வித்தியாசத்தைக் காட்டியவர் இவர். கைகளில் சண்டைபோட்டதை விட சுவற்றில் கால் வைத்து எதிரிகளை துவம்சம் செய்ததுதான் அதிகம். இவரது வாரிசு சண்முக பாண்டியன் அந்த ஸ்டைலை 'மதுர வீரன்' படத்தில் முயற்சி செய்தாலும், குட்டி குறைந்த அடிகளே பாய முடிந்தது. இவர் பேசினால் கண் சிவக்கும், கரன்ட்டு கம்பம் வெடிக்கும். "மன்னிப்பு, தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை, துளசி வாசம் மாறும் இந்த தவசி வார்த்தை மாறமாட்டான், பூட்டி வச்ச தோட்டா இங்க இருக்கு, நான் புடிச்சுக்கொடுத்த நாலுபேர் எங்க?" போன்ற வசனங்கள் காலம் மாறினாலும் காரம் மாறாதவை.
நடிகர் சங்கத்தில் அவரது நிர்வாகத் திறமையும், நடிப்பில் அவரது பாணியும், திரையுலகில் அவர் செய்த உதவிகளும் இன்றும் பலராலும் நினைவு படுத்தப்படுகின்றன. 'கரன்ட்ட தொட்டா சாதாரண மனுஷனுக்குதான் ஷாக் அடிக்கும், நான் நரசிம்மா, என்னைத் தொட்டா அந்த கரன்டுக்கே ஷாக் அடிக்கும்' என்று அவர் மீண்டு வந்தால், மீண்டும் வந்தால், மகிழ்ச்சியடையும் கோடி பேரில் நானும் ஒருவன்.