இப்போதே அரசியல் கட்சிக் கூடாரங்களிலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான விறு விறுப்பு தொடங்கி விட்டது. வெளிநாடு சென்றிருக்கும் முதல்வர் எடப்பாடி, அங்கிருந்து திரும்பியதும் தேர்தல் வேலைகளில் ஜரூராவார் என்கிறது ஆளும்கட்சித் தரப்பு. தினகரனின் அ.ம.மு.க.வில் மிச்சம் மீதி இருக்கும் பெரும்புள்ளிகளையும் அவர் ஸ்பெ ஷல் மேஜிக் மூலம் தங்கள் பக்கம் அழைத்துக்கொள்வார் என்கிறார்கள்.
தி.மு.க. தரப்பிலும் பரபரப்பு தொடங்கி விட்டது. இந்தமுறை சென்னை மேயருக்கு இளைஞரணி உதயநிதியைக் களமிறக்க வேண்டும் என்று அங்கே பரவலாகக் குரல் கேட்கிறது. இதையறிந்த ஆளும்தரப்பு, தி.மு.க.வுக்கு செக் வைக்க... சென்னை மேயர் பதவியையே மறு சீரமைப்பின் சாக்கில் தலித்துக்கான பதவியாக மாற்றிவிட யோசிப்பது பற்றி நக்கீரனில் எழுதியிருந்தோம்.
இதற்கிடையே பெண்களுக்கான திருச்சி மாநகர மேயர் பதவியை ஆண்களுக்கான பதவியாக மாற்றவும் ஆளும் தரப்பு பரபரக்கிறது. இதையறிந்த மாஜி மந்திரியான தி.மு.க. நேரு, அப்படி திருச்சி மேயர் தொகுதி ஆண் தொகுதியாக மாற்றப்பட்டால், ந.செ.அன்பழகனை நிறுத்த வியூகம் வகுக்கிறாராம். இது குறித்து அன்பழகனை வைத்துக்கொண்டே கட்சிப் பிரமுகர்களிடம் பேசிய நேரு, "மேயர் சீட்டுக்கு "10 ’சி'’தேவைப்படும். ஆளும்கட்சி ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தால், நாம் 500-ஆவது கொடுக்கவேண்டும்''’என்றவர், அன்பழகனைப் பார்த்து, ""அதுக்கு நீ தயாராகு'' என்றாராம். அதேபோல், பகுதிச்செயலாளரான மண்டி சேகரைப் பார்த்து, ’’நீதானே கோட்டத் தலைவர். உன்னை சுத்தியிருக்கிற 5 வார்டுக்கும் நீதான் செலவு பண்ணணும்''’என்று சொன்னதோடு, ஏரியாப் பிரமுகர்களான முத்துசெல்வம், அலெக்ஸ் ராஜா ஆகியோரை தேர்தலில் நிற்க ரெடியாகும்படி சொல்லியிருக்கிறார். எனவே அவர்களும் பரபரப்பாக களமிறங்கத் தொடங்கிவிட்டனர்.
ஒருவேளை திருச்சி மேயர் பதவி, இப்போது இருப்பதுபோல் பெண்ணுக்கான பதவியாகவே நீடிக்குமானால், அதற்கு புதுமுகமான கவிஞர் செல்வராணி நிறுத்தப்படலாம் என்கிறார்கள். காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றிய செல்வராணி, கலைஞர் மறைந்தபோது இரங்கல் கவிதை எழுதினார் என்பதற்காக, அவரை சஸ்பெண்ட் செய்து விட்டனர். இதனால் கொதிப் படைந்த அவர், "நான் அப்பா போல் மதிக்கும் ஒரு தலைவருக்கு இரங்கல் தெரிவிப்பது கூட குற்றமா? எனக்கு இந்த போலீஸ் வேலையே வேண்டாம்'' என்று வெளியேறிவிட்டார். இதையறிந்த ஸ்டாலின், திருச்சி விசிட்டின் போது அவர் வீட்டிற்கே சென்று, ’தங்கையே, கவலை வேண்டாம். உனக்கு அண்ணனான நான் இருக்கிறேன்''’என்று சொல்லி விட்டு வந்தார். எனவே செல்வராணிக்கு மேயர் சீட் தரப்படலாம் என்கிறார்கள் அழுத்தமாய். இதேபோல் தமிழகம் முழுக்கத் தேர்தல் காய்ச்சல் ஆரம்பித்துவிட்டது.