Skip to main content

மாட்டுக்கறி சாப்பிட்டால் தமிழன் இல்லை என்பதெல்லாம் மிகப்பெரிய அசிங்கம் - சிவ யோகி பதில்!

Published on 25/02/2020 | Edited on 26/02/2020

ஆன்மிக தேடல், தனக்கான ஆன்மிக பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் முதலியவை எல்லாம் நெடுங்காலமாகவே தமிழ் மரபில் இருக்கக் கூடியது. சிலர் அவர்களின் வழிபாட்டு முறையை அவர்களுக்கு தகுந்த முறைகளில் அமைத்துக்கொள்கிறார்கள். தற்போது உணவு வாயிலாக கடவுளை வரையறுக்கும் நிகழ்வுகளையும் நாம் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு வருகிறோம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுதான் நீங்கள் என்று சொல்கின்ற போக்கு இருக்கின்ற காலகட்டத்தில் உணவு வேறு ஆன்மீகம் வேறு என்று புரட்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தும் ஐயா சிவயோகி அவர்களை இன்று நாம் சந்திக்க இருக்கிறோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

jk



தற்போது குறிப்பாக சிலர், மாட்டுக்கறி என்பது தமிழர் உணவே இல்லை என்றும், மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் தமிழர்களே அல்ல என்றும் தற்போது பேச துவங்கியுள்ளார். இதை பற்றிய உங்களின் கருத்து என்ன?

மிகப்பெரிய அசிங்கம் இது, தவறான தகவல்களை குறிப்பிட்ட சிலர் பரப்புகிறார்கள். நண்டு சாப்பிட்டு இருக்கிறார்கள். ஒளவையார் கள் குடித்துள்ளதாக புறநானூற்றுப் பாடலில் கூறியிருக்கிறார்கள். யானை கறியை விரும்பி சாப்பிட்டு இருக்கிறார்கள். மாட்டுக்கறி பற்றி மயானத்தில் பாடப்படும் பாடலில் கூட சொல்லப்பட்டிருக்கும். மாட்டுக்கறி சாப்பிட்டால் தமிழன் இல்லை என்பதெல்லாம் மிகப்பெரிய அசிங்கம். உணவுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது. சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் சொல்கிறோம். அவர்கள் வேட்டையாடித்தான் பிழைத்தார்கள். அப்படி என்றால் அவர்கள் மாட்டை சாப்பிடாமல் எப்படி இருந்திருப்பார்கள்.

அப்படி என்றால் தமிழர் உணவு என்பது எது? திருக்குறள் புலால் மறுப்பு பற்றி பேசுகிறதே? 

திருவள்ளுவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை. அவரின் கருத்துக்களை தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. ஊண் என்றால் ஒரு உயிரினத்தின் உடம்பு என்று பொருள். வேர்க்கடலை சாப்பிடுவது கூட ஒரு ஊண் தான். ஔவையார் ஊண் பல விரும்பி உண் என்று கூறுகிறார். அப்படி என்றால் என்ன பொருள். அந்த காலத்தில் மாட்டுக்கறியை பதப்படுத்தி சாப்பிட்டுள்ளார்கள் என்பதற்கு நம்மிடம் பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றது. திருவள்ளுவர் ஊண் என்று குறிப்பிட்டு சொல்வது உடம்பை சாப்பிடுவதையே ஒரு வேலையாக வைத்துக்கொள்ளாதே என்று வேர்கடலையில் ஆரம்பித்து அனைத்திற்கும் சேர்த்து சொல்வதாகவே நாம் கருத வேண்டும். கற்களை செய்து மாடுகளை வெட்டி சாப்பிட்ட வரலாறு எல்லாம் நிறைய இருக்கின்றது. 

ஆரிய கலாச்சாரத்திலும் ஊண் உண்டதற்கான சான்று நிறைய இருப்பதாக சொல்லப்படுகின்றதே?

அவர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள், ஆனால் காலப்போக்கில் தங்களை பெரிய ஆட்களாக காட்டி கொள்வதற்காக அவர்கள் புலால் உண்பதை தவிர்த்தார்கள். உதாரணத்துக்கு அவர்கள் திருமணம் செய்யும் போது இரண்டு பூப்பந்துகளை வைத்து உருட்டி விளையாடுவார்கள். அது எல்லாம் மாட்டுதலைகளை உருட்டுதல் தான். காலப்போக்கில் மாறி அவர்கள் மாட்டுக்கு பதில் பூப்பந்துகளை உருட்டி விளையாடுகிறார்கள். பந்தாடுதல் என்பதே அந்த காலகட்டத்தில் ஒரு ராஜா மற்றொரு ராஜாவை வெற்றிபெற்று தோற்றவரின் தலையை வெட்டி பந்தாடியதில் இருந்தே வந்தது. அதனால்தான் வெட்டி பந்தாடினான் என்று பழங்கால புராணங்களில் கூறப்படுகின்றது. மனிதனையே வெட்டி சாய்த்த காலங்கள் எல்லாம் இருக்கின்றது. நரபலி கொடுத்துள்ளார்கள். பிள்ளை கறி சாப்பிட்ட வரலாறு இருக்கின்றது. பிள்ளை கறி சாப்பிட்டவர்கள் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்களா? ஆதலால் தமிழன் என்பவன் புலால் மறுத்தவனாக எப்போதும் இருந்தவன் இல்லை என்பதற்கு நிறைய உதாரணம் இருக்கின்றது.