Skip to main content

கேள்விக்கு பணம் முதல் பறிபோன எம்.பி பதவி வரை!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
From impeachment to impeachment against Mahua Moitra mp

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது. 

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. அதில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரை அறிக்கை தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு அதிக உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தால் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “துர்க்கை வந்துவிட்டார்; பொறுத்திருந்து பார்ப்போம். துணிகளை உருவ துவங்கிய இவர்கள், தற்போது மகாபாரத போரை பார்ப்பார்கள்” என்று தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய அவர் புகழ்மிக்க கவிஞரும், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினருமான ராம்தாரி சிங் தினகரின் வரியை மேற்கோள் காட்டி, “ஒரு மனிதன் அழியும் போது முதலில் மனசாட்சி மரணிக்கிறது” என்று தெரிவித்துவிட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

இதையடுத்து மக்களவை மதியம் கூடிய பிறகு அவையில் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி.பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார். 

நாடாளுமன்ற வாளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மஹுவா மொய்த்ரா, “அதானிக்காக மட்டுமே ஒட்டுமொத்த அரசும் இயங்கி வருகிறது; அதானி மீதான ரூ.13,000 கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் புகாரில், சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் என்ன செய்தது; எனது பதவியை பறித்து வாயை அடைப்பதன் மூலம், அதானி விவகாரத்தை மறைக்க முடியாது; சி.பி.ஐ. நாளை என் வீட்டிற்கு அனுப்பப்படும்; அடுத்த ஆறு மாதத்திற்குள் என்னை கைது செய்வார்கள்; இது நிச்சயம்; எனக்கு 49 வயதாகிறது. இன்னும் 30 வருடங்களுக்கு நான் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும், வீதிகளிலும் போராடுவேன். தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வரும் பாஜக அரசின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம்; மஹுவா மொய்த்ரா காட்டம்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Mahua Moitra condemns about law flowing over writer Arundhati Roy

அதிகாரத்திற்கு எதிராக மக்கள் படும் இன்னல்களை நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்து அவர்களின் வலியைக் கட்டுரை மூலமாகவும், தனது பேச்சின் மூலமாகவும் அருந்ததி ராய் என்ற எழுத்தாளர் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு புனைவு இலக்கியத்திற்காக எழுத்தாளர்களுக்காகக் கொடுக்கப்படும் உலகின் மிக உயரிய விருதான ‘புக்கர் விருது’ கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்று, ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. வலுக்கட்டாயமாகக் காஷ்மீர் இந்திய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில சுதந்திரத்திற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று அருந்ததி ராய் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த மாநாட்டில் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைனும் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும்  ஷேக் சவுகத் ஹுசைன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கு குறித்த விசாரணை டெல்லி மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வருகிறது. இதனிடையே, இவர் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) நடவடிக்கை எடுக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

Mahua Moitra condemns about law flowing over writer Arundhati Roy

எழுத்தாளர் அருந்ததி ராய் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததன் மூலம் அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள் என்பதை நிரூபிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆனால், அதுதான் இல்லை. அவர்கள் முன்பு இருந்ததைப் போல ஒருபோதும் திரும்பி வர முடியாது. இந்தப் பாசிசத்திற்கு எதிராகத்தான் இந்தியர்கள் வாக்களித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பரபரப்பான சூழலில் ஜூன் 24 ஆம் தேதி கூடுகிறது மக்களவை!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
 lok sabha session to meet on june 24

நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் பாஜக அமைத்துள்ளது. அதன்பிறகு நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவர்களுடன் ஏற்கனவே இருந்து அமைச்சரவையில் சில மாற்றங்களுடன் கேபினெட் அமைச்சர்களும் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களும் மொத்தம் 72 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் கூடிய மக்களவை கூடுவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கரன் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற மக்களவை கூட்டம் வரும் 24 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். 

இது தொடர்பான அறிவிப்பில், ஜூன் 24 மற்றும் 25 ஆம் தேதி இடைக்கால சபாநாயகர் மூலம் வெற்றிபெற்ற எம்.பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து செய்து வைக்கப்படும். 26 ஆம் தேதி சபாயாநகர் தேர்வு நடைபெறும். பின்னர் 27 ஆம் தேதி மக்களவை, மாநிலங்களவை மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூட்டுத்தொடரில் உரையாற்றுவார். அதன்பிறகு மக்களவை, மாநிலங்களைவை என இரு அவைகளிலும் தனித்தனியே அமர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல்முறையாகக் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் அரசின் கொள்கை முடிவுகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.