Skip to main content

பரிசு கிடைத்தது, பாசம் கிடைக்கவில்லை!!! குழந்தை ஜெயலலிதா...

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

சிறுவயதிலேயே செல்வி ஜெயலலிதாவுக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். அதனால் அவருக்கு அவரது தாயார் காமிக்ஸ் புத்தகங்கள், கதைப்புத்தகங்கள் என்று நிறைய வாங்கிக் கொடுப்பார். 

 

jayalalithaa


 

 

 


சென்னை சர்ச்பார்க் கான்வென்டில் அவர் படித்த காலத்தில் சிறந்த மாணவியாக விளங்கினார். அப்போது பள்ளியில் நடந்த கட்டுரைப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அவரது வகுப்பு ஆசிரியர் மிகவும் பெருமிதத்துடன் அந்தக் கட்டுரையை வகுப்பு மாணவர்களுக்குப் படித்துக் காட்டினார். அத்தோடு ஷேக்ஸ்பியரின் அனைத்து நாடகங்களும் அடங்கிய தொகுதி ஒன்றினையும்  மாணவி ஜெயலலிதாவுக்குப் பரிசாக வழங்கினார் வகுப்பு ஆசிரியர்.

 

 

 



இந்த மகிழ்ச்சியை தன்னுடைய அன்பு தாயாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று துடித்தார். அப்போது அவரது தாயார் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம். எனவே இரவு அம்மாவின் வருகைக்காக காத்திருந்தார். வெகு நேரமாகியும்  அம்மா வரவில்லை. அப்படியே தூங்கிப் போனார். காலை எழுந்தவுடன் அம்மாவைத் தேடினார். அம்மா படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். இரண்டு தினங்கள் இப்படியே கடந்து போக மூன்றாம் நாள் இரவு அம்மாவைப் பார்த்துவிட்டுத்தான் படுக்கைக்குச் செல்வது என்று பிடிவாதமாக கண்விழித்துக் காத்திருந்தார். நள்ளிரவு தாண்டிவிட்டது. சோபாவில் சாய்ந்தபடி அப்படியே தூங்கிவிட்டார். அம்மா வந்து எழுப்பிய போதுதான் கண் விழித்தார்.

 

 


அம்மாவிடம் தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார். அம்மாவின் கண்கள் கலங்கின, கட்டுரைக்குப் பரிசு கிடைத்ததையும், ஷேக்ஸ்பியரின் தொகுதியையும் காட்டி, கட்டுரையை எடுத்துப் படித்துக் காட்டவும் ஆரம்பித்து விட்டார். அன்னை சந்தியாவும் மேக்கப்பைக் கூட கலைக்காமல், மகள் கட்டுரைப் படிக்கும் அழகை ரசித்துப் பார்த்தார். கட்டுரையில் எழுதப்பட்டிருந்த விஷயங்கள் மட்டுமல்ல, கட்டுரையின் தலைப்பே அம்மாவின் உள்ளத்தை தொட்டு நெகிழவும், பெருமையால் மகிழவும் செய்தது.