Skip to main content

“உண்மையான ஃபாரின் ரிட்டன் நான்தான்" -பிரபாகரன் பிறந்தநாளில் கலகலத்த சீமான்

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
jkl

 

 

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த தின பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரபாகரன் குறித்து உணர்ச்சி பூர்வமாக பேசினார். அவரின் பேச்சு வருமாறு, "அலெக்சாண்டர் பிறந்ததால் கிரேக்க இனம் பெருமை அடைந்தது. செங்கிஸ்கான் பிறந்ததால் மங்கோலிய இனம் சிறந்தது.  ஜூலியட் சீசரால் ரோமானிய மக்கள் பெருமை அடைந்தார்கள். அதை போல பிரபாகரன் என்ற என்ற தலைவன் பிறந்ததால் தமிழ் இனமே பெருமை அடைந்தது. இன்றைக்கும் தலைவருடைய போர்க்குணத்தை பார்த்து உலகம் வியந்து கொண்டிருக்கிறது. தலைவரை பார்த்து பயப்படுவதை கூட விட்டுவிடுங்கள், அவருடைய தம்பியை பார்த்தும் இன்றைக்கு பயப்படுகிறார்கள். எங்கேயும் போக விடமாட்டேன் என்கிறார்கள், எந்த நாட்டுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்கிறார்கள். 

 

அப்படி சென்றாலும் கைது செய்து உடனடியாக அனுப்பி விடுவார்கள். உண்மையிலேயே நான்தான் ஃபாரின் ரிட்டன். இதே மாதிரி பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். உடனடியாக திரும்பி வந்துள்ளேன். பிரபாகரன் இந்த இனத்திற்கு நூறு சதவீதம் உண்மையாக இருந்தார். ஆனால் இந்த இனம் அவருக்கு உண்மையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை அவருக்கு துரோகம் செய்தது. இந்த மாதிரி ஒரு துரோகத்தை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். மற்ற இனத்தில் இந்த மாதிரி ஒரு தலைவன் பிறந்திருந்தால் அந்த இனமே அவரை கொண்டாடி தீர்த்திருக்கும். ஆனால் இந்த இனம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டது. இதற்கெல்லாம் மன்னிப்பு என்பதே கிடையாது. அதனால் தான் இன்றைக்கு நாம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். 

 

எங்கேயாவது சொந்த இனத்தின் மகனை பயங்கரவாதி, தீவிரவாதி என்று ஒரு இனத்தின் மக்கள் பேசி திரிவதை எங்கேயாவது பார்த்துள்ளீர்களா? இது எவ்வளவு பெரிய கொடுமை. யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் வருவதற்கு முன்னர் இதை தொடர்ந்து பேசி வந்தார்கள். ஆனால் இன்றைக்கு பிறக்கின்ற குழந்தைகள் எல்லாம் பிரபாகரன், பிரபாகரன் என்று பிறக்கிறார்கள். யாராவது இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சின்ன குழந்தைகள் எல்லாம் அவரை மாமா, பெரியப்பா என்று கொண்டாடி தீர்க்கிறார்கள். இது பிரபாகரனின் யுகம். பிரபாகரனின் பிள்ளைகளின் காலம். அடக்க நினைக்க முடியாது, அடங்கவும் மாட்டோம்.

 

இன்றைக்கு தமிழீழம் என்ற ஒரு நாடு இருந்திருந்தால் இந்தியாவிற்கு ஒரு பெரிய பாதுகாப்பாக இருந்திருக்கும். ஒரு செல்ல மகன் போல அவர் இருந்திருப்பார். ஆனால் விட்டார்களா? எங்களை ஒழிக்க வேண்டும் என்று மொத்தத்தையும் சீனா கையில் கொடுத்துவிட்டு பாதுகாப்பு அற்று இந்தியா நின்று கொண்டு இருக்கிறது. சிங்களர்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். அவர்கள் சீனாவுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். இந்தியாவிற்கு எதிராகத்தான் இயங்குவார்கள். இதற்கு கடந்த கால வரலாறு இருக்கிறது. நம் தலைவன் இருக்கிற வரை ஒரு அந்நிய கப்பல், படை என்று எதுவும் ஊடுறுவவில்லை. ஆனால் தற்போது அந்நிய கப்பல் நங்கூரம் இட்டு நம் கடற்கரையில் நிற்கிறது. இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். அந்த இடத்தில் நிச்சயம் நாம் இருப்போம்" என்றார்.