Skip to main content

இரட்டை கொலையில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும்! -உச்சநீதிமன்றத்தில் வழக்கு! 

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

eps

 

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை படுகொலை இந்தியாவை கடந்து உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின்படி, இந்த இரட்டை கொலையை விசாரித்து வருகிறது முதல்வர் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ். படுகொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களில் பலர் கைது செய்யப்பட்டிருகிறார்கள்.

 

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆட்சியாளர்களை அதிர வைத்துள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி, “மூச்சுத் திணறலால் அவர்கள் மரணமடைந்தனர்’’ என்று கூறியிருந்தார். இந்த கருத்தை கண்டிக்கும் வகையில் எடப்பாடிக்கு எதிராக கண்டனங்கள் எதிரொலித்தன.

 

eps - sathankulam lockup death - supreme court

 

இந்தநிலையில், இரட்டை கொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் தனது மனுவில், “சாத்தான் குளம் இரட்டைக் கொலை வழக்கில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்குவதற்கு முன்பாகவே, மூச்சுத் திணறலால்தான் ஜெயராஜும், பென்னிக்ஸும் இறந்தனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தவறு. பொய்யான தகவலை தெரிவித்திருக்கிறார்.

 

eps - sathankulam lockup death - supreme court

 

குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே அவர் இந்த பொய்யான தகவலை கூறியதாகத்தான் கருத வேண்டும். பொறுப்புள்ள பதவியில் இருக்கும் முதல்வருக்கு இது அழகல்ல! இதனால் இந்த படுகொலை விவகாரத்தில் எடப்பாடிக்கு தொடர்பிருக்கிறதா என விசாரிக்க வேண்டும். கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸார், தமிழக உள்துறையை வைத்திருக்கும் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் இந்த வழக்கில் நேர்மையாக விசாரணை நடக்காது. இதனால் இந்த கொலை வழக்கு முடியும் வரை, எடப்பாடி பழனிசாமியிடம் உள்துறை இலாகா இருக்கக்கூடாது! இரட்டை கொலை வழக்கு திசை மாறாமல் இருக்க, உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார் வழக்கறிஞர். 

 

விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த மனு எடப்பாடியை மட்டுமல்ல, ஆட்சியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.