Skip to main content

இந்தியா நிஜமாகவே மகிழ்ச்சி அடைகிறதா மோடி ஸார்?

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியவுடன் இந்தியா மகிழ்ச்சி அடைவதாக மோடி கூறினார். நிஜமாகவே இந்தியா மகிழ்ச்சி அடைகிறதா என்பதை இந்துப் பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
 

narendra modi

 

 

தமிழகத்தில்தான் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்துப் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் 2005ல் திமுக பங்கேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெண்களுக்கு சொத்துரிமையை உறுதி செய்து அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தது.

இந்துப் பெண்களுக்கு நல்லது செய்ய பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டால், ஆணுக்கு பெண் கட்டுப்பட்டவள் என்ற கொள்கையை வலியுறுத்துவதே அவர்கள் கொள்கை என்பது தெரியவரும்.

இந்துப் பெண்களின் நலனுக்காக எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது. நாடு முழுவதும் குடும்ப நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்துகிறது. அதுபோக, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சச்சரவுகளை கிராம பஞ்சாயத்துகள் கையாளும் நடைமுறைகள் இன்றும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கின்றன.

கணவனை இழந்த பெண்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் ஏதுமில்லை. எதார்த்த நிலை இப்படி இருக்கும்போது இஸ்லாமிய பெண்கள் சிலருக்கு நடக்கும் அநீதியை ஒட்டுமொத்த இஸ்லாமியர் மீதும் சுமத்தும் வகையில் மோடி கருத்துத் தெரிவித்திருப்பது நியாயமா? என்று நடுநிலையாளர்கள் வினா எழுப்புகிறார்கள்.

சரி அது கிடக்கட்டும். இரண்டாவது முறையாக பிரதமரான மோடி, தனது அரசின் முன்னுரிமையாக இதைத்தான் எடுக்க வேண்டுமா? கடந்த ஆட்சியில் சீரழந்த பொருளாதார நிலையை சீர்செய்ய என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? பொருளாதார அறிஞர்கள் இந்தியாவின் வேலையின்மையும், முதலீட்டாளர்களின் அச்சமும், வரி பயங்கரவாதமும் நாட்டை பின்னோக்கி தள்ளுவதாக எச்சரிக்கிறார்கள். 1970களில் தொடங்கப்பட்ட சமூகம் சார்ந்த பொருளாதார திட்டங்களை சீர்குலைக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சாட்டுகின்றன.

இன்னொருபக்கம் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்றும், கறிக்காக மாடுகளை கடத்தினார்கள் என்றும் அப்பாவி தலித்துகளையும், இஸ்லாமியர்களையும் அடித்தே கொலை செய்யும் காட்டுமிராண்டித்தனம் நடக்கிறது. ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போடும்படி இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்தி துன்புறுத்தும் அநீதியும் தொடர்கிறது. இதை நாட்டின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சிந்தனையாளர்கள் பகிரங்கமாக கண்டிக்கிறார்கள்.

இதையெல்லாம் பற்றி பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ இதுவரை கருத்து எதுவும் சொல்லவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட காட்டுமிராண்டிகளுக்கு கடுமையான தண்டனையேதும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை.

ஆனால், தன்னிச்சையான, மனுநீதியை மீண்டும் அமல்படுத்த வசதியாக, அதிகாரங்கள் அனைத்தையும் மத்தியில் குவித்து வைக்கக்கூடிய வகையிலான சட்டங்களை இயற்றவும், கொள்கைகளை நிறைவேற்றவும் மோடி அரசு துடிக்கிறது.
 

nirmala seethraaman

 

 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகமோசமான நிலையில் இருக்கிறது. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், 2024 ஆம் ஆண்டு 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியிருக்கும் என்று ஒரு மாயபிம்பத்தை வரைந்து காட்டினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி இருக்கும் என்று சொல்லியிருக்கிறாரே தவிர, அது எப்படி சாத்தியமாகும் என்பதற்கான வழிமுறைகளை, செயல் திட்டங்களையோ, நிதி ஆதாரங்களையோ அவர் தனது பட்ஜெட்டில் விளக்கவில்லை. இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின் சந்தேகங்கள் எதற்கும் நிர்மலா விளக்கம் அளிக்கவே இல்லை.

நிர்மலா தாக்கல் செய்த பட்ஜெட் வரவுசெலவுத் அறிக்கையாக இல்லாமல், கற்பனைக் கதையாக இருக்கிறது என்றே பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தார்கள்.

மோடியின் முதல் ஐந்தாண்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்தை குறைகூறியே ஓடியது. அந்த ஐந்தாண்டுகளில் கருப்புப் பணத்தை ஒழித்து ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணத்தை போடுவதாக ஆசை காட்டிய மோடி 15 ரூபாய்கூட போடாமல் ஏமாற்றியதுதான் மிச்சம். 50 நாட்களில் கருப்புப்பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து, நாட்டின் சிறுதொழில்களை முடக்கி, ஏழை எளியோரின் சேமிப்புகளையும் நாசப்படுத்தியதுடன், புதிய ரூபாய் நோட்டுகள் வெளியாதவற்கு முன்னரே, பாஜக தலைவர்கள் வாரிக் குவித்த அநியாயமும் நடந்தது.

இரண்டாவது ஆட்சியில், மோடி தனது முந்தைய சீர்குலைவு நடவடிக்கைகளால் சீரழிந்த இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதாவது, முதலீட்டாளர்களுக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு, சட்டவிரோத நடவடிக்கைகள் பாதுகாப்புச் சட்டம் போன்ற நாட்டின் சுதந்திரமான அமைப்புகளைக் கொண்டு அரசுக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குவதிலேயே மோடியும் அமித் ஷாவும கவனமாக இருக்கிறார்கள்.

சமீபத்தில், நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட காபிடே தொழிலதிபர் சித்தார்த்தாவின் வாக்குமூலமே இதற்கு சரியான சாட்சியாக இருக்கும்.