Skip to main content

பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட்டால் சஸ்பெண்ட்! கல்வித்துறை வினோத 'அப்ரோச்' - பொதுமக்கள் கொந்தளிப்பு!! 

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
அரசு உயர்நிலைப்பள்ளி

 

சேலத்தில் அரசுப்பள்ளியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவரை மாவட்டக் கல்வி நிர்வாகம் திடீரென்று பணியிடைநீக்கம் செய்திருப்பது பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 675 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்கு முரளீந்திரன் என்பவர் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி வகுப்புக்கு வராமல் வெளியே சென்று விடுவதாகவும், தனக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர் ஒருவரை நியமித்து பாடம் நடத்துவதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு திடீரென்று புகார்கள் சென்றன. 

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
முரளீந்திரன்

 

இது தொடர்பாக சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சிஇஓ) முருகன் டிசம்பர் 6 ஆம் தேதி பள்ளியில் நேரடி விசாரணை நடத்தினார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையில் புகாரில் கூறப்பட்ட சங்கதிகள் உண்மை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து டிசம்பர் 12 ஆம் தேதி ஆசிரியர் முரளீந்திரனை அரசு ஊழியர் நடத்தை விதிகள் 17 (இ) பிரிவின் கீழ் பணியிடைநீக்கம் செய்து சிஇஓ உத்தரவிட்டார். அதேநேரம், ஆசிரியர் முரளீந்திரன் மீது அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், சக ஆசிரியர்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. 

 

இந்நிலையில், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தகவல் கசிந்ததை அடுத்து டிசம்பர் 23 ஆம் தேதி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பள்ளி அருகே சாலையில் ஒன்று திரண்டனர். பணியிடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கோரியும் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
சாலையில் திரண்ட பள்ளி மாணவர்கள் 

 

இது தொடர்பாக கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் நாம் நேரில் விசாரித்தோம். ''எங்கள் பள்ளி 2011 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இப்போதுள்ள குன்று புறம்போக்கு இடத்தில் புதிதாக உயர்நிலைப் பள்ளி கட்டுவதற்காக அரசு இடம் ஒதுக்கியது. பள்ளிக் கட்டடத்தை பொதுப்பணித்துறை கட்டிக் கொடுத்தது.

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
சாலை அமைப்பதற்கு முன்பு

 

ஆரம்பத்தில் இந்தக் குன்று புறம்போக்கு பகுதி கரடுமுரடாகவும் மேடாகவும் இருந்து. இதை செப்பனிட்டு சிமெண்ட் சாலை அமைத்து சுற்றிலும் பாதுகாப்பு சுவர் எழுப்பி நுழைவு வாயில், கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களைக் கட்டினோம். இந்தப் பணிகளுக்கான செலவினங்களை தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், எங்கள் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் பெற்ற நன்கொடை வாயிலாகச் செய்து கொண்டோம். 

 

கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாரதி தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ரங்கசாமி அய்யாவும், எங்கள் பள்ளி ஆசிரியர் முரளீந்திரனும் 60 லட்ச ரூபாய் வரை நன்கொடை வசூலித்து கொஞ்சமும் தன்னலம் பாராமல் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லையா? ஆசிரியர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவையா? கட்டுமானப் பணிகளுக்கான இரும்பு கம்பிகள், சிமெண்ட், மணல் லோடு வந்துள்ளதா? என எதுவாக இருந்தாலும், 'முரளீந்திரனை கூப்பிடுங்கள்...' என்றுதான் சொல்வோம். 

 

அதற்காக அவர் வகுப்பறையில் கவனம் செலுத்தாமல் இல்லை. நன்கொடை மூலம் நடந்து வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை அவர்தான் மேற்பார்வையிட்டுச் செய்து வருகிறார். அதே வேளையில், பாடம் நடத்துவதிலும் கவனம் செலுத்தித்தான் வருகிறார். கூடுதலாக ஒரு ஆசிரியர் தேவை என்பதால் பி.டி.ஏ மூலமாக ஒரு பெண் ஆசிரியரை நியமித்து இருந்தோம். அவரை முரளீந்திரன்தான் தற்காலிகமாக நியமித்து, தனக்குப் பதிலாக பாடம் நடத்த வைத்தார் என யாரோ தவறாகப் புரிந்து கொண்டு புகார் அனுப்பி இருக்கிறார்கள். கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டும் பணிகளில் தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டு, எத்தனையோ மாதம் தனது சம்பளத்தை அப்படியே பள்ளிக்காக வழங்கிய நல்லாசிரியரை பணியிடைநீக்கம் செய்திருப்பது வேதனை அளிக்கிறது'' என்கிறார்கள் உடன் பணியாற்றும் ஆசிரியர்கள். 

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
மேனகா

 

பள்ளி கட்டுமானத்திற்காக தனது ஊதியத்தை பலமுறை அப்படியே செலவிட்டிருக்கிறார் முரளீந்திரன். அவருடைய மனைவியும் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதால் அதை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளதும் நமது விசாரணையில் தெரியவந்தது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மேனகாவிடம் கேட்டபோது, ''கற்பித்தல் மற்றும் பள்ளி வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முரளீந்திரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. 

 

அவருக்குக் கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனோ அல்லது அவரை பள்ளியை விட்டு வெளியேற்றி விட்டால் எங்கள் பள்ளியின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என்று கருதியோ யாராவது புகார் செய்திருக்கலாம் எனக் கருதுகிறோம். அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யும்படி எஸ்.எம்.சி குழு சார்பில் தீர்மானம் போட்டிருக்கிறோம்'' என்றார். 

 

இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் குபேரனிடம் விசாரித்தபோது, ''சிஇஓ, எங்கள் பள்ளியில் விசாரணைக்கு வந்த நாளன்று நான் விடுப்பில் இருந்தேன். அவர் பள்ளிக்கு வருவதே இல்லை என்றும், தனக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியரை நியமித்து பாடம் நடத்துவதாகவும் கூறப்படும் புகாரின் பேரில் தான் சிஇஓ நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், முரளீந்திரன் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் முறையாகப் பணிக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்'' எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
ரங்கசாமி

 

பாரதி தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ரங்கசாமி, ''பள்ளியில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளை கவனித்துக் கொள்ளும்படி பள்ளியில் கேட்டுக் கொண்டேன். அதன்பேரில், ஆசிரியர் முரளீந்திரனும் ஏராளமாக நன்கொடை வசூலித்துக் கொடுத்தார். விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு வந்து கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவார். அவர் மீதான நடவடிக்கைக்கு நானும் மறைமுகமாக ஒரு காரணம் ஆகிவிட்டேனோ என நினைக்கும்போது வருத்தம் அளிக்கிறது'' என்றார். 

 

பள்ளியில் என்னதான் நடந்தது என்று ஆசிரியர் முரளீந்திரனிடமே கேட்டோம். “சிஇஓ, எங்கள் பள்ளிக்கு விசாரணைக்கு வந்த நாளன்று நான் பள்ளியில்தான் இருந்தேன். காலை பிரேயர் நேரம் முடிந்த பிறகு, என் மீது ஏதோ புகார் வந்திருப்பதாகவும், அது தொடர்பாக மாணவர்களிடமும், சில பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் விசாரிக்க வந்திருப்பதாகவும் கூறப்பட்டது. அவரும் விசாரணை நடத்திவிட்டுச் சென்றார்.

 

என்ன புகார் என்று என்னிடம் எதுவும் விசாரிக்கவில்லை. திடீரென்று, டிசம்பர் 12 ஆம் தேதி பணியிடைநீக்கம் செய்து சிஇஓ உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு டிசம்பர் 22 ஆம் தேதிதான் எனக்கு 'மெமோ' வழங்கப்பட்டது. ஏன் இந்தத் தாமதம் என்று தெரியவில்லை. பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் முழுக்க முழுக்க ஸ்பான்சர்கள் மூலம் தான் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளையும் நான் தான் மேற்பார்வையிட்டு வருகிறேன். ஸ்பான்சர் கேட்டும், கட்டுமானப் பணிகளைப் பார்வையிடவும் சென்று விடும் நேரங்களில், பிடிஏ மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் திவ்யா என்பவர் என்னுடைய வகுப்பை எடுத்து வந்தார்.

 

எனக்கு மட்டுமின்றி, உடற்கல்வி ஆசிரியர் அல்லது வேறு யாரேனும் விடுப்பில் சென்றிருந்தால் அவர்தான் மாற்று ஆசிரியராகச் சென்று வகுப்பை கவனித்துக் கொள்வார். மற்றபடி, ஒருபோதும் கற்பித்தல் பணியில் நான் அலட்சியமாக இருந்தது இல்லை. கட்டுமானப் பணிகள் மேற்பார்வையிடலை நான் இல்லாவிட்டாலும், வேறு யார் செய்தாலும் அவர்களின் வகுப்புகளும் பாதிக்கப்படத்தான் செய்யும். சிஇஓவின் நடவடிக்கையை நான் விமர்சிக்க முடியாது. நான் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் சிறப்பாகப் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்கிறார் ஆசிரியர் முரளீந்திரன். 

 

Salem kondappanayakkanpatti government school teacher suspend
முருகன்

 

சிஇஓ முருகனிடம் கேட்டபோது, ''ஆசிரியர் முரளீந்திரன் பணி நேரத்தில் பள்ளியில் இல்லாமல் வெளியே சென்று விடுவதாகவும், தற்காலிக ஆசிரியரை நியமித்து பாடம் நடத்துவதாகவும் பெற்றோர்களிடம் இருந்து வந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்களிடம் விசாரித்தபோது, பிடிஏ மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர் நடத்தும் பாடங்கள் புரியவில்லை என்று கைப்பட எழுதிக் கொடுத்துள்ளனர். அதன்பிறகுதான் அவரை பணியிடைநீக்கம் செய்திருக்கிறோம். 

 

ஆசிரியர் முரளீந்திரன், பள்ளியில் ஸ்பான்சர்கள் மூலம் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளை முன்னின்று செய்து வருவது உண்மைதான். அதேநேரம், ஆசிரியர் பணி என்பது கற்பித்தலும் அதைச் சார்ந்ததும்தான் என்பதை மறந்துவிட்டு ஒரு கிளர்க் போல பணியாற்றி வருகிறார். பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பிறகும் கூட, அவர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் இருக்கிறார். இப்போது பொதுமக்கள், மாணவர்களைத் தூண்டிவிட்டு அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வைத்திருக்கிறார்'' என்றார். 

 

சம்பளப் பட்டியல் தயார் செய்தல், பள்ளிக்கான உபகரணங்களை வாகனங்களில் எடுத்துச் செல்லுதல், ஆசிரியர் வருகை, குழந்தைகள் வருகை என பதிவேடு பணிகளிலேயே இப்போதும் அனைத்துப் பள்ளிகளிலும் யாராவது ஓரிரு ஆசிரியர்கள் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஈராசிரியர் பள்ளிகளில் அதில் ஓராசிரியர் பள்ளியிலேயே இருப்பதில்லை. சிஇஓ, டிஇஓ அலுவலகம் சார்ந்த பணிகள், சொந்த வேலை என ஊர் சுற்றுவதும் கண்கூடு. 

 

இது ஒருபுறம் இருக்க, கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் என்பது அப்பள்ளிக்கு அடுத்த நூறு ஆண்டுகளுக்குப் பயனளிக்கக் கூடியது. அப்பணிகளை ஆசிரியர் முரளீந்திரன், நேரம் காலம் பாராது அர்ப்பணிப்புடன் மேற்பார்வையிட்டு வந்துள்ளார். அவரால் விளையும் பயனை, தொலைநோக்குடன் சீர்தூக்கி பார்த்து, 'மிகைநாடி மிக்கக் கொளல்' என்ற அளவிலாவது மாவட்டக் கல்வி நிர்வாகம் அவரிடம் விளக்கம் கேட்பதுடன் நிறுத்தி இருக்கலாம்.

 

முதன்மைக் கல்வி அலுவலருக்கு யாரிடம் இருந்து வந்த அழுத்தமோ?