Skip to main content

ஜனநாயகப் போராட்டத்தில் கர்நாடகாவின் பங்கு!

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

இந்திய அரசியல் சட்டத்தின் பல்வேறு ஓட்டைகளையும், ஆளுநர்களின் அத்துமீறல்களையும், அவற்றை கட்சிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதையும், இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது கர்நாடகா தேர்தல். பதவிக்காக பாஜகவும் மோடியும் அமித்ஷாவும் நடத்திய கூத்துக்களின் நியாயமற்ற பின்னணியை இந்தத் தேர்தல் தெளிவுபடுத்தியுள்ளது. கர்நாடகா அரசியல் எவ்வளவுக்கு குழப்பமானதோ, அவ்வளவுக்கு அது அரசியல் பாடங்களையும், சட்டப்பாதுகாப்பையும் பெற்றுத்தந்திருக்கிறது.

 

s.r.bommai

எஸ்.ஆர்.பொம்மை



1988ல் கர்நாடகாவில் நடந்த ஒரு குழப்பம்தான், அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கவிழ்ப்பதற்கு முட்டுக்கட்டை போட்டது. அந்த ஆண்டு கர்நாடகாவில் ஜனதாக்கட்சி பெரும்பான்மை பெற்றது. அந்தக் கட்சிக்கு லோக்தளம் கட்சியும் ஆதரவு கொடுத்தது. இதையடுத்தே ஜனதாதளம் கட்சியாக பெயர் மாற்றப்பட்டது. எஸ்.ஆர்.பொம்மை முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அன்றைக்கு மத்தியில் இருந்த ராஜிவ் தலைமையிலான அரசு பொம்மை அரசை கவிழ்க்க திட்டமிட்டது.

இதையடுத்து, கே.ஆர்.மொலகேரி என்ற ஜனதாதள உறுப்பினரை பயன்படுத்தினார்கள். அவர் தனக்கு 19 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கூறினார். தனக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். உடனே, பொம்மை அரசைக் கலைக்கலாம் என்று அன்றைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு, கர்நாடகா ஆளுநர் பரிந்துரை செய்தார். ஆனால், மொல்கேரி தனக்கு ஆதரவு அளிப்பதாக ஆளுனரிடம் அளித்த பட்டியலில் இடம்பெற்றவர்கள், தாங்கள் கட்சி மாறவில்லை என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, தனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கொடுக்கும்படி ஆளுனரிடம் பொம்மை வேண்டுகோள் விடுத்தார். ஆனால், தான் எடுத்த முடிவை திரும்பப்பெற ஆளுனர் மறுத்துவிட்டார்.

 

 


தனது ஆட்சியைக் கலைக்கும் குடியரசுத்தலைவரின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதையடுத்து உச்சநீதிமன்றத்துக்குப் போனார் பொம்மை. அங்கு, அதுவரை ஆட்சி கலைக்கப்பட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளும் பொம்மை வழக்குடன் இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு இந்த வழக்கில் நீதிபதி குல்தீப்சிங் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. பொம்மையின் அரசை கலைத்தது செல்லாது என்று அந்த அமர்வு அறிவித்தது. அந்தத் தீர்ப்புதான் எதற்கெடுத்தாலும் சொம்பையான காரணங்களுக்கெல்லாம் மாநில அரசுகளை கலைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

குடியரசுத்தலைவரின் ஆணை என்பதற்காக அப்படியே ஏற்க முடியாது. அந்த ஆணையை பரிசீலனை செய்யக்கூடிய பொறுப்பு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது என்பது முதல் அடி. தீய நோக்கத்துடன் ஒரு ஆட்சி கலைக்கப்பட்டால், அந்த உத்தரவை ரத்துசெய்து மீண்டும் ஆட்சியை அமைக்க உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. 356 ஆவது பிரிவில் குடியரசுத்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் நிபந்தனைகளுக்கும் மேற்பார்வைக்கும் உட்பட்டதுதான் என்று அந்த தீர்ப்பில் குடியரசுத்தலைவருக்கே செக் வைக்கப்பட்டது. ஆனால், மதசார்பின்மைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்பதை அந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியது.

 

 


பொம்மை வழக்கின் தீர்ப்பு சுருக்கமாக சொல்வது என்னவென்றால், பெரும்பான்மையாக உள்ள அரசாங்கத்தை மத்திய அரசு நினைத்த மாத்திரத்தில் கலைக்க முடியாது. அப்படி கலைக்கும்போது அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியும் என்பதுதான். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, பெரும்பான்மை இருப்பவர்களுக்கே ஆட்சியமைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கி இருக்கிறது. பொம்மை தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறியும் அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டதுதான் பிரச்சனைக்கே அடித்தளம் ஆனது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.பொம்மையின் வழக்கிற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை இன்னொரு முக்கியமான ஜனநாயக உரிமையை கர்நாடகா உறுதிப்படுத்தி உள்ளது. இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் முடிந்தவுடன் எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கிறதோ அந்தக் கட்சியை ஆட்சியமைக்க குடியரசுத்தலைவரோ, மாநில ஆளுனரோ அழைப்பது வழக்கம். அதே சமயம் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனிப்பெருங்கட்சியாக எந்தக் கட்சி வந்துள்ளதோ அதை ஆட்சி அமைக்க அழைப்பது வழக்கமாக இருந்தது.
  vajpayee

வாஜ்பாய்



1996ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்து, காங்கிரஸ் தலைமையில் அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டிருந்தன. ஆனால், 161 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக வாஜ்பாய் தலைமையில் அரசு அமைக்க அழைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. அதை ஏற்று குடியரசுத்தலைவர், வாஜ்பாய்க்கு பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆனால், அவர் 13 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார். இந்த நடைமுறையை முதன்முதலாக பாஜக மாற்ற முயன்றது. மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் தனிப்பெருங்கட்சியாக வந்த காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி உதிரிக்கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவைப் பெற்று பெரும்பான்மை இருப்பதாக கூறி ஆளுனர் உதவியோடு ஆட்சி அமைத்தது.

 

 


2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவாவில் தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 40 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றன. ஆனால், கோவாவில் உள்ள சிறு கட்சிகளையும் சுயேச்சைகளையும் அவசர அவசரமாக மிரட்டி விலைக்கு வாங்கிய பாஜகவை ஆளுனர் அரசு அமைக்க அழைத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றம் சென்றது. அங்கு வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, "உங்களிடம் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஆளுநர் முன்பாக அழைத்துச் சென்று காட்டினீர்களா? அவர் முன் தர்ணா செய்தீர்களா?"  என்று கேட்டது. தனிப்பெரும் கட்சியைத்தான் அழைக்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. அதுபோலவே, தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கக் கோரலாமா என்ற கேள்விக்கும் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.

  vajubhai

கர்நாடகா ஆளுனர் வஜூபாய் வாலா



"கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படுவது மாநிலங்கள் பலவற்றில் சகஜமாகிவிட்டது. மத்தியிலும் கூட அது எதார்த்தமாகிவிட்டது. இரண்டு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைக்காவிட்டாலும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைப்பதில் தவறில்லை” என்று அந்த தீர்ப்பு கூறுகிறது. கோவாவில் தனிப்பெருங்கட்சியை பின்னுக்குத் தள்ளி ஆட்சி அமைத்த பாஜக, கர்நாடகாவில் தனிப்பெருங்கட்சி என்பதால் தன்னைத்தான் அழைக்க வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்தது. ஆளுனரைக் கொண்டு அது ஆட்சியையும் அமைத்து, 15 நாட்கள் அவகாசமும் பெற்றுவிட்டது. அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதாதளமும் இணைந்து நடத்திய ஜனநாயகப் போராட்டம் நீதிமன்றத்தின் வாசலைத் தட்டியது.

அங்கு, ஆளுனரின் செயலை ஏற்காத நீதிமன்றம், பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு அவர் கொடுத்த அவகாசத்தையும் ரத்து செய்தது. பதவியேற்ற இரண்டே நாளில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்றத்தின் வழிகாட்டலை மீறி தற்காலிக சபாநாயகராக சீனியர் உறுப்பினருக்கு பதிலாக ஜூனியர் உறுப்பினரான போபையாவை நியமி்த்து இன்னொரு சட்டப்போராட்டத்துக்கு ஆளுனர் வழிவகுத்தார்.

 

yeddi

எடியூரப்பா



ஆனால், நீதிபதிகள் பாப்டே, சிக்ரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இந்தப் பிரச்சனையை கவனமாக கையாண்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்தால் நாட்கள் நீள வாய்ப்புண்டு என்று பகிரங்கமாகவே அறிவித்தது. திட்டமிட்டபடி நியாயமாக வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்பதையும் அது ஏற்றுக்கொண்டது. போபையா ஏற்கெனவே பாஜகவுக்கு ஆதரவாக தவறான முடிவுகளை எடுத்து ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டவர் என்பதையும் நீதிமன்றம் ஏற்றது. எனவே, சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

சபையில், போபையா மூலம் முறைகேடு செய்து, அதன் விளைவாக கலவரம் ஏற்படுத்தி அரசாங்கத்தை முடக்கலாம் என்ற பாஜகவின் திட்டம் இதன்மூலம் முறியடிக்கப்பட்டது. தனது பெரும்பான்மையை நிரூபிக்க 100 சதவீதம் உறுதி சொன்ன எடியூரப்பா, சனிக்கிழமை 4 மணிக்கு பேசத்தொடங்கி, பேச்சின் முடிவில் நம்பி்க்கை வாக்குக் கோராமலேயே ராஜினாமா செய்தார். எஸ்.ஆர்.பொம்மைக்கு பிறகு, இப்போதைய கர்நாடகா அரசியல் குழப்பங்களும் அதில் நீதிமன்றம் தலையிட்டு வழங்கியிருக்கிற ஜனநாயகபூர்வமான தீர்ப்புகளும் இனி வருங்காலத்தில் இதுபோன்ற நிலைமையைச் சமாளிக்க உதவும் என்பது உறுதி.