சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கையும் தமிழக அரசால் சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் கூச்சல் எழுப்பினர்.
இதனால் சட்டப்பேரவை கூச்சல் குழப்பம் ஆனது. மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சபாநாயகர் அவர்களை வெளியேற்றி சபையை அமைதிப்படுத்தினார். இருந்தும் சபாநாயகர் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறார் என்று அவைக்கு வெளியே பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் வள்ளுவர்கோட்டத்தில் காவல்துறையின் தடையையும் மீறி அவர்கள் நடத்தினார்கள். இந்நிலையில், பேரவையில் அதிமுக செயல்பாடு குறித்து அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி அவர்களிடம் நாம் கேள்வியை முன் வைத்தோம்.
நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு: " எடப்பாடி தரப்பு சட்டப்பேரவையில் இதுவரை எந்த மக்கள் பிரச்சனைக்காவது பேசியிருக்கிறார்களா? சொத்துவரி அந்த வரி இந்த வரினு போராட்டம் நடத்தினார்கள் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் போராட்டத்தால் அப்படியே ஆட்சியாளர்கள் விலைவாசியெல்லாம் குறைத்துவிட்டார்களா? தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இதுவரை எந்தப் போராட்டத்தையாவது இவர்கள் செய்துள்ளார்களா? இந்த உண்ணாவிரதப் போராட்டம் எதற்காக, யாரை ஏமாற்றுவதற்காக?
சட்டப்பேரவை தலைவர் தெளிவாகக் கூறிவிட்டார். இதுதொடர்பாக முடிவெடுப்பது என்பது சபாநாயகரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் எனக்கு ஆணையிடக் கூடாது என்று. அப்படி இருக்கையில் நான் கூறுவதை நீங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் ஜனநாயகம் என்று பார்க்க வேண்டும். இதை டெல்லி சென்று பாராளுமன்ற சபாநாயகரிடம் கூற வேண்டியது தானே? அங்கே போராட எடப்பாடிக்குத் துணிவு இருக்கா? ரவீந்திரநாத்தை மாற்ற வேண்டும், அவர் அதிமுக நாடாளுமன்ற தலைவர் இல்லை என்று போராட வேண்டியது தானே, ஏன் டெல்லி போக வழி தெரியவில்லையா? நான் டிக்கெட் போட்டு தரட்டா.
போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று டெல்லி சென்றால் 2 மணி நேரத்தில் வருமான விரி சோதனை செய்து பெயில் கிடைக்காத பிரிவில் எடப்பாடியை உள்ளே தூக்கி வைத்துவிடுவார்கள். இது எடப்பாடிக்கே நன்றாகத் தெரியும். எனவே தமிழ்நாட்டில் சும்மா படம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பன்னீர்செல்வத்தைப் பார்க்கவே எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார். அதனால் அவரை வேறு இடத்தில் தூக்கிப் போட்டுடலாமானு பார்க்கிறார். அப்படி செய்தால் மதுரை டான் உதயகுமாரை அருகில் அமர வைத்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அவர் நினைப்பதை எல்லாம் அவர் வீட்டில் வேண்டுமானால் செய்துகொள்ளலாம். சட்டமன்றத்தில் அவரால் என்றைக்கும் செய்ய இயலாது.
இன்றைக்கு அம்மாவால் தூக்கி எறியப்பட்ட ஜெயக்குமார் போன்றவர்கள் எல்லாம் எடப்பாடிக்கு ஆதரவாக பேசுகிறார்கள். அம்மா இருக்கும் போதே முதலமைச்சர் ஆசை வந்த காரணத்தால் தான் அவர் சபாநாயகர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. இன்றைக்கு சட்டப்பேரவையை அறிவாலயம் மாதிரி இருக்குதுனு சொல்லியிருக்கிறார். ரோட்டுல அநாதையா இருக்கிற அவரு இதை சொல்ல என்ன தகுதி இருக்கு. நீ என்ன சட்டப்பேரவை உறுப்பினரா? மக்கள் உன்னை ரோட்டில் தூக்கி எறிந்தது உண்மைதானே? தேர்தல்ல வெற்றிபெற முடியாத உனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு? அதிகம் பேச வேண்டாம், மக்களிடம் அகப்பட்டுக் கொள்வீர்கள் என்று அதிரடியாகப் பேசினார்.