மறைந்த நடிகரும், வசன கர்த்தாவுமான கிரேஸி மோகனின் 70- வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன்... "உங்களுக்கு நல்ல நண்பர்களும், வாத்தியார்களும் கிடைத்துவிட்டால் எல்லாம் வந்து சேரும். நாங்கள் குரோம்பேட்டைக்கு போகும்போது எங்கள் முகத்தில் சிறிய புன்னகை இருக்கும். ஏனென்றால் ஸ்பான்ஸ் பவுடர் வாசனை வரும். அப்போது, மௌலி சார் ஞாபகம் வரும். அவர் செய்த காமெடி ஞாபகம் வரும். ரமணன் சாரை பார்க்கும்போதெல்லாம் எனக்கு பாலசந்தர் சார் ஞாபகம் வரும்.
அந்த காலத்திலிருந்து இவர்களின் நாடகத்தைப் பார்ப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். பல நாடகங்களை இந்த மேடையில் பார்த்திருக்கிறேன். இதே மேடையில் சண்முகம் அண்ணாச்சி சொல்லிக் கொடுத்து நான் நடித்திருக்கிறேன். இது மிக முக்கியமான அரங்கம். இதில் வெவ்வேறு விதமான திறமையாளர்கள் உருவாகி வந்துள்ளனர். அதில் மௌலி போன்றவர்கள் பன்முக திறமையைக் கொண்டவர்கள். மௌலி காமெடி ரைட்டர் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. காரணம், நான் எப்படி காமெடி நடிகர் என்று கூறினால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ, அதேபோல் மௌலி இன்னொரு பாலசந்தராக ஆகக் கூடியவர் என்று நாங்கள் எல்லாம் நம்பினோம். ஏன் பாலசந்தரே நம்பினார் என்பதுதான் உண்மை.
தன் படத்தின் ஒரு பகுதியை நீங்கள் எழுதுங்கள் என்று மௌலியை நம்பி பாலசந்தர் கொடுப்பார். அதன் பிறகு, இந்தக் காட்சியை நீங்கள் எடுத்து விடுங்கள் என்று கூறி என்னிடம் கொடுத்துவிட்டு போனார். நாங்கள் எல்லோரும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 'நான் ஒரு தனிமரம்' என்கிற நாடகத்துக்கு என்னை தயார் செய்திருந்தார் மௌலி சார். நான் அப்போது, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், வீட்டிற்கு தூங்குவதற்கு கூட வரமாட்டேன். ஸ்டூடியோவிலேயே தூங்குவேன். எனக்கு என்ன பெருமை என்றால் என்னுடைய வேஷம் நாகேஷுக்கு சென்றதுதான்.
நான், மோகன், நாகேஷ் ஆகியோர் அமர்ந்திருந்தோம் என்றால், நாங்கள் மட்டும் சிரித்துக் கொண்டிருப்போம். பாதி காமெடிகள் வெளியில் சொல்ல முடியாது. ரொம்ப சங்கோஜமான காமெடி எல்லாம் அடித்திருக்கிறோம். 'பம்மல் கே சம்பந்தம்' வெறும் காமெடி படம் மட்டுமல்ல. அந்தப் படத்தில், தாத்தாவிடம் புலம்பும்போது நீதானே, என்னை வளர்த்தாய் எனக் கூறும்போது, கிட்டத்தட்ட அது பாகப் பிரிவினை போன்ற காட்சியாக அமைந்துவிடும்.
மௌலிக்கு உண்மையாக பாராட்டு விழா நடத்தி பொன்னாடையோ, ஷீல்டையோ கொடுப்பது அல்ல; அந்த காமெடியைத் திருப்பிக் கூறுகிறேன் பாருங்கள்; அதுதான் என்னுடைய பாராட்டு விழா. பெரிய சாதனைகளை எனதாக்கிக் கொள்வதில் எனக்குப் பெருமை. மோகன் மாதிரி இன்னொரு மாடல் கிடையாது; அது எங்களுக்கே தெரியும். நாங்கள் காமெடி ரைட்டர்ஸ் எங்களுக்கு பொறாமை கிடையாது; அதை சிரித்துக்கொண்டே விட்டுவிடுவோம். இந்த மாதிரி நகைச்சுவை இந்தியாவிலேயே கிடையாது.
எனக்குத் தெரிந்து இந்தியாவில் மோகன் எழுதிய நகைச்சுவை போல் எங்குமே இல்லை. நானும் இதுபோன்ற பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர்களே வியக்கிறார்கள். மோகன் நாடகத்தை யார் வேண்டுமானாலும் போடலாம் என்று., விஷயம் நீங்கள் பண்ண வேண்டும். நாம் பெருமையாக மார்தட்டிக் கொள்கிறோம். இந்த மாதிரியான நகைச்சுவை இந்தியாவில் கிடையாது என்று... அற்றுப்போய் விடாமல் இருப்பதற்கு நீங்கள் செய்யும் ஒரு விஷயம். அதற்காகத்தான் நான் இங்கு வருகிறேன்" எனத் தெரிவித்தார்.