ஸ்டெர்லைட் ஆலைக்கும், நிபா வைரஸிற்கும் தொடர்பு இருக்கிறது என்பது மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிற வேலை என்று பலர் நினைக்கலாம். மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் நேரடியாக முடிச்சு போடமுடியாது. ஆனால் இந்த இரண்டும் இணைந்திருப்பது ஒரு உடலில்தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளலாம். அதுபோலத்தான் ஸ்டெர்லைட்டும், நிபா வைரஸும், சுற்றுச்சூழல் என்ற அடிப்படையில் இரண்டும் ஒன்றிணைகிறது.
ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்பட்டு, உருவாக்கப்படுகின்றன. இந்த ஆலைகள் நிலம், நீர்நிலைகள், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துகின்றன. இதனால், இதுபோன்ற ஆலைகள் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதுதான். அப்படி சுற்றுச்சூழல் கெட்டுக்கிடக்கிற சூழலில்தான் நிபா வைரஸ் அதிகம் பரவுகிறது. நாம் இன்று நகரமயமாக்கத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறோம், நிலம், நீர், காற்று என்று எதையும் கருத்தில்கொள்ளாமல். பழந்திண்ணி வௌவால்களிலிருந்துதான் நிபா வைரஸ் பரவுகிறது என்பதற்காக நாம் முழுவதுமாக வௌவால்களின் மீது மட்டும் பழி சுமத்திவிட முடியாது. பழந்திண்ணி வௌவால்களின் முக்கிய உணவு பழங்கள். பழ மரங்கள் உள்ளிட்ட அனைத்து மரங்களும் அழிக்கப்படுவதால் வௌவால்கள் உணவின்றி நோய்எதிர்ப்பு சக்தியற்றவையாக மாறிவிடுகின்றன. இதனால் வௌவால்களுக்குள் இயற்கையாகவே இருக்கும் நிபா வைரஸ் பெருக ஆரம்பிக்கிறது. அவைகளின் வாய், எச்சில், கழிவு என அனைத்திலும் இந்த வைரஸ் நிறைந்திருப்பதால் வௌவால்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் இந்த வைரஸ் பரவும். இதில் என்ன கொடுமை என்றால் மே மாதத்தில்தான் வௌவால்கள் அதிகமாக பறக்கின்றன. இதனால்தான் நிபா வைரஸும் அதிகம் பரவுகின்றன. நிபா வைரஸ் பரவிய இடங்களே அதற்கு சாட்சி. அதுமட்டுமல்ல இந்தமாதிரியான ஆலைகளால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள்கூட அனைவருக்கும் வந்துவிடுகிறது இதற்கு தூத்துக்குடியிலேயே பல சாட்சியங்கள் உண்டு.
சுற்றுச்சூழலை பொறுத்தவரையில் மனிதன் முதன்முதலாக சக்கரம் கண்டுபிடித்ததில் இருந்தே அதற்கு அழிவு தொடங்கிவிட்டது. இன்று நாம் அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்சென்றுகொண்டிருக்கிறோம். நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம் நாடுகள், மாநில எல்லைகள் போன்று சுற்றுச்சூழல் மாசும், நோய்களும் எல்லைக்குள் அடங்கிவிடும் என்று... ஆனால் இவையனைத்திற்கும் பூமி என்ற ஒரு எல்லைதான் உண்டு என்பதை யாரும் மறக்க வேண்டாம்.