90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொலைக்காட்சியில் ராசிபலன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி அனைவரின் மனதிலும் இடம்பிடித்த விஜே விஷால், தற்போது அவர் பணியாற்றி வரும் ஐடி துறை பற்றிய பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்...
நான் ஐடி துறையில் பணியாற்றுவதால் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால்தான் நான் மீடியாவிலிருந்து வெளியேறினேன். காலேஜ் முடித்தவுடன் கமிட்மென்ட் இல்லாததால் ஐடி துறையில் நைட் ஷிப்ட் வேலையை பலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், திருமணம் முடிந்த பிறகு அது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதனால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது உண்மைதான். அனைத்து துறைகளிலுமே ரிஸ்க் என்பது இருக்கிறது.
பிரச்சனைகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பது தான் முக்கியம். ஐடி துறையில் பணி பாதுகாப்பு என்பது கிடையாது. அடுத்த மாதம் நாம் வேலையில் இருப்போமா என்பது நிச்சயம் இல்லை. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்துத் தான் ஐடி வேலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தத் துறையின் சாபம் என்று கூட இதைச் சொல்லலாம். பணி பாதுகாப்பு என்பது நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும். நான் 16 வருடங்களாக ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். இங்கு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இருக்கிறது. கம்பெனிக்கு ஏற்றவாறு கொள்கைகள் மாறுபடும்.
வெளிநாட்டில் செட்டிலாக வேண்டும் என்கிற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. மீடியாவில் பயணிக்க வேண்டும் என்பது எப்போதும் என்னுடைய ஆசை. அந்தக் காலத்தில் ஒரு ஆங்கர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. குண்டாக இருப்பது எல்லாம் விமர்சிக்கப்பட்டது. இப்போது அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் குறைவாக உள்ளன. திறமைக்கு மட்டுமே அதிக மதிப்பளிக்கப்படுகிறது. அதனால் மீடியாவில் மறுபிரவேசம் செய்வதற்கான எண்ணம் எனக்கு இருக்கிறது.