
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான தாக்குதலின் போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சேதமடைந்தன. பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அதே சமயம் காஷ்மீரின் சம்பா வழியாக ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேர் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் 7 பேரையும் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஸ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 7 பேரின் இந்த முயற்சியானது முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் எல்லையில் நிலவும் பதற்றம், அசாதாரண சூழ்நிலை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் முப்படைகளின் தலைமை தளபதி (சி.டி.எஸ்.) ஜெனரல் அனில் சவுகான், கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே. சிங் ஆகியோருடன் ஆய்வு செய்கிறார். மேலும் எல்லையில் நிலவும் நிலைமை மற்றும் விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்வதற்காக, பி.எஸ்.எஃப். இயக்குநர் ஜெனரல், சி.ஐ.எஸ்.எஃப். இயக்குநர் ஜெனரல் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
முன்னதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியன் ஆயில் நிறுவனம் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்புகளைக் கொண்டுள்ளது. அதோடு விநியோகமும் சீராக உள்ளன. எனவே மக்கள் எரிபொருள்களைப் பீதியடைந்து அதிகமாக வாங்க வேண்டிய அவசியமில்லை. எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுக்கள் (எல்.பி.ஜி.) எங்கள் அனைத்து விற்பனை நிலையங்களிலும் எளிதாகக் கிடைக்கும். எனவே பொது மக்கள் அமைதியாக இருந்து தேவையற்ற அவசரத்தைத் தவிர்ப்பதன் மூலம் உங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய எங்களுக்கு உதவுங்கள். இது எங்கள் விநியோக வழித்தடங்களைத் தடையின்றி இயங்க வைக்கும் மற்றும் அனைவருக்கும் தடையற்ற எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யும்” எனத் தெரிவித்துள்ளது.