ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி 'உலக பூமி தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உயிர் வாழ்வதற்கு ஆதாரமான பூமிப்பந்தில் வெப்பமயமாதல், இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்களும், அவற்றிலிருந்து மீள்வதற்கான உறுதிமொழிகளை கடைப்பிடிப்பதே பூமி தினத்தின் முக்கிய நோக்கமாகும். மைக்ரோ நொடிக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் சாட்டிலைட் யுகத்தில் பூமியின் தற்போதைய நிலையை அப்பட்டமாக காட்டுகிறது சாட்டிலைட் புகைப்படங்கள். ஆனால் பூமி தினத்தில் வெளியான புகைப்படங்கள் சமூக மற்றும் சூழல் ஆர்வலர்களின் மனதை கனக்க வைத்துள்ளது.
இன்றைய வெளியான கூகுள் டூடுலை கவனித்திருந்தால் இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம். வெப்ப மயமாதலிலிருந்து பூமியை காப்பாற்றுவதன் அவசியம் தொடர்பாக கூகுள் இன்று டூடுலை வெளியிட்டுள்ளது. கூகுள் இணையத்தின் முகப்பு பக்கத்தில் உலகில் நான்கு வெவ்வேறு பகுதிகள் அடைந்துள்ள மாற்றத்தை தேதியுடன் குறிப்பிட்டுள்ளது கூகுள். இவை ஜிப் அனிமேஷன் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை உச்சியில் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்த பனிப்பாறையின் அளவையும், 2020ஆம் ஆண்டு பனியின் அளவு குறைந்திருப்பதையும் கூகுள் டூடுல் மூலம் தெளிவாகிறது. அதேபோல் கிரீன்லாந்தில் செர் மர்சூக் பகுதியிலிருந்த பனிப்பாறையின் அளவில் 2000 ஆம் ஆண்டுக்கும், 2020 ஆம் ஆண்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றம், ஆஸ்திரேலியாவில் லிசார்ட் தீவிலிருந்து கிரேட் பாரியர் ரீஃப் எனப்படும் பொலிவிழந்த பவளப்பாறை தோற்றத்தையும் 2016 ஆம் ஆண்டுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கும் இடையே ஒப்பிட்டு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் ஜெர்மனியின் எலன் பகுதியிலுள்ள ஹார்ட்ஸ் காடுகள் அழிந்து வருவதும் கூகுள் டூடுல் காட்டியுள்ளது. 1995 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையே அந்த காட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அந்த டூடுல் வெளிக்காட்டுகிறது. பூமியின் பொலிவிழந்த இந்த தோற்றம் சமூக ஆர்வலர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்களை கதிகலங்க வைத்துள்ளது. பூமியின் இந்த பொலிவிழந்த காட்சியால் நாம் வாழும் பூமியை அடுத்த சந்ததியினருக்கு காப்பாற்றி வைக்க வேண்டும் என்ற கூற்றுகள் மறைந்து தற்போதைய சந்ததியினர் வாழவாவது பூமியை காப்பாற்றி வைக்க முடியுமா? என்ற எண்ணம்தான் எழுகிறது.