தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் பீருக்கு 4 ரூபாய் 36 பைசாவாக கலால் வரியை விதிக்கிறது. 1 லிட்டர் வீதம் இது விதிக்கப்படுவதால் புல் பீரான 650 மில்லிக்கு இன்னும் குறையும். ஆனால் 1 லிட்டர் பெட்ரோலுக்கு தமிழக அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (VAT) 20 ரூபாய். அதுவும் 34 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கும் மாநிலம். சரக்குக்கு குறைந்த வரியும் பெட்ரோலுக்கு அதிக வரியும் விதித்திருக்கும் ஒரே தென்னிந்திய மாநிலம் தமிழ்நாடு.
இன்று நாடு முழுவதும் புகைந்து கொண்டு இருக்கும் பிரச்சினை பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான். 2017-க்கு முன்னர் எவ்வித பிரச்சினையும் இன்றி சுமூகமாக போய் கொண்டிருந்தது பெட்ரோல், டீசல் விலை. மத்திய அரசின் மானியத்தினால் பெட்ரோல், டீசல் விலை மக்களை பாதிக்காத அளவில் இருந்தது. பாரதிய ஜனதா ஆட்சி மத்தியில் அமைந்ததும் 2017 ஜூன் மாதம் 16 முதல் மாறும் எரிபொருள் விலை (Dynamic Fuel Pricing) என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டது. அதாவது தினமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்கேற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாறுதல் ஏற்படும். நாடு முழுவதும் உள்ள 58,000 பெட்ரோல் பங்குகளில் காலை 6 மணிக்கு அன்றைய பெட்ரோல், டீசல் விலை மாறுதலடையும். இது ஒன்றும் இந்திய அரசு கண்டுபிடித்த விலை கொள்கையல்ல. சர்வதேச அளவில் பரவலாக நடைமுறையிலிருக்கும் விலை கொள்கைதான். சர்வதேச அளவில் அமலில் இருக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு போல தான் இதுவும். இப்பொழுது பிரச்சினை இந்த புதிய விலை நிர்ணய கொள்கையில் இல்லை. இந்த விலை கொள்கையால் பெரிய தொகையாக பெட்ரோல், டீசல் மானிய செலவீனம் தடுக்கப்பட்டது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதுதான். ஆனால் பிரச்சினையே இந்த பெட்ரோல், டீசல் மேல் விதிக்கப்படும் மத்திய, மாநில வரி விதிப்பு முறைதான்.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது எண்ணெய் நிறுவனம் நிர்ணயிக்கும் விலை, மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி சேர்ந்தே நிர்ணயிக்கப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையும் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணமும் சேர்த்து சுத்திகரிப்பு செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 35.65 பைசாவாக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இப்போது இந்த பெட்ரோல் மீது மத்திய அரசின் கலால் வரி லிட்டருக்கு ரூ. 19.48 பைசா விதிக்கப்படுகிறது. தமிழக அரசு மதிப்பு கூட்டு வரியாக லிட்டருக்கு 20 ரூபாய் விதிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாடுக்காக விதிக்கபடும் வரி லிட்டருக்கு 25 பைசாவும் விற்பனை கமிஷன் லிட்டருக்கு ரூபாய் 3.60 ஆக மொத்தம் சேர்ந்து 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 78.98 ஆகும். இந்த விலை நிச்சயம் அதிகப்படியான விலைதான். இந்த விலையினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அன்றாட பயணசெலவும் உணவு பெருட்கள் விலையும் அதிகரிக்க பெட்ரோல், டீசல் விலை மிக முக்கிய காரணம்.
பிரச்சினை இதுமட்டுமல்ல சர்வதேச கச்சா எண்ணெய் விலை இன்னும் ஏறும். ஏறிக்கொண்டே போகும். அப்போது இந்தியா என்ன செய்யபோகிறது. ஒரே நாடு, ஒரே வரி, என்று முழங்கி மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவந்துவிட்டது. ஆனால் பெட்ரோல், டீசல் மட்டும் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் கொண்டு வராமல் இருக்கிறது. இந்த விஷயத்தில் வரிவிதிப்பின் நேர்மை எங்கு போனது. பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால், 12 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பெட்ரோல் விலை 38.10 ரூபாயாக இருக்கும். 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பெட்ரோல் விலை இருக்கும். 40.05 ரூபாயாக இருக்கும், 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பெட்ரோல் விலை 43.44 ரூபாயாக இருக்கும். மது விற்பனைக்கு ஜி.எஸ்.டி வரியில் சலுகை காட்டும் மத்திய அரசு மக்களின் முக்கிய தேவையும் பிரச்சினையுமான பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவதில் என்ன தயக்கம். டாஸ்மாக் விற்பனையில் சராசரியாக 26,200 கோடி வசூலிக்கும் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பை குறைப்பதனால் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. இதை எல்லாம் செய்யாமல் நீங்கள் மக்களுக்காக பேசும் பேச்சு வீண் பேச்சு தான். மக்களும் அதை விரும்பவில்லை.