1960ல் நடந்த தேர்தலில் பிரஜ சோசியலிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி வைத்தன. பிரஜ சோசியலிஸ்ட் கட்சியின் தாணுப்பிள்ளை முதலில் முதல்வராக பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பதவியை மாற்றித்தந்தார். காங்கிரஸ் கட்சி சங்கரை முதல்வராக்கியது. அவர் 3 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். ஆட்சியின் இறுதியில் 6 மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்பு தேர்தல் வைக்கப்பட்டது. 1967ல் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக நம்பூதிரி பாட்டையே முதல்வராக்கியது கட்சித் தலைமை. இரண்டு ஆண்டுகளில் முதல்வர் பதவியில் இருந்து விலக்கி திருச்சூரை சேர்ந்த சி.அச்சுதமேனனை கட்சித் தலைமை முதல்வராக்கியது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான சி.அச்சுதமேனன் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பின்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்சியும் பாதியிலேயே கலைக்கப்பட்டது. 1970ல் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியமைத்து மீண்டும் அச்சுதமேனனே முதல்வராக அமர்ந்தார்.
கருணாகரன்
1977ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் – சி.பி.ஐ – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கோடு இணைந்து கூட்டணியாகத் தேர்தலை சந்தித்தது. இந்தக் கூட்டணி வெற்றி பெற, காங்கிரஸின் கருணாகரன் முதல்வர் பதவியில் அமர்ந்தார். காங்கிரஸில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு சென்ற தோழர் அச்சுதமேனனால் காங்கிரஸில் வளர்த்து விடப்பட்டவர் கருணாகரன். கேரளா காங்கிரஸில் அவர் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார். அதற்குக் காரணம் 1967 சட்டமன்ற தேர்தல் வெற்றிதான். அந்தத் தேர்தலில் கருணாகரனுக்கு திருச்சூர் தொகுதியில் எம்.எல்.ஏ சீட் வழங்கப்பட்டது. அந்தத் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்புக் கோட்டையாக இருந்தது. அந்தக் கோட்டையில் வெற்றி பெற்றார் கருணாகரன். அது முதல் காங்கிரஸில் அவருக்கு ஏறுமுகம்தான். முதல்வர் பதவியில் முதல் முறையாக அமர்ந்தார். அது சில வாரங்கள் தான் என்பது அப்போது அவருக்குத் தெரியவில்லை.
கோழிக்கோட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்ற ராஜன் என்கிற மாணவர், நக்சலைட் என்று காரணம் சொல்லி 1976 மார்ச் 1ம் தேதி கைது செய்தது கேரளா போலிஸ். அது எமர்ஜென்சி காலம் என்பதால் யாராலும் எதுவும் கேட்கமுடியவில்லை. நக்சலைட் தலைவராக இருந்த ஜோசப் எங்கே என கேட்டு டார்ச்சர் செய்ய, போலீஸ் கஸ்டடியில் ராஜன் இறந்து போனார். மாணவர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கியதால் முதல்வராக இருந்த கருணாகரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 55 நாட்களில் கருணாகரன் பதவியில் இருந்து இறங்கிவிட காங்கிரஸின் ஏ.கே.அந்தோணி பதவியில் அமர்ந்தார்.
ஏ.கே.அந்தோணி-உம்மன் சாண்டி
ஏ.கே.அந்தோணி, ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்தவர். காங்கிரஸ் கட்சியில் மாணவர் பிரிவில் செயல்பட்டவர். படிப்படியாக உயர்ந்து கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சிப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். ஒன்றரை ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். இடையில் கூட்டணிக்குள் குழப்படிகள் நடக்க சிபிஐ கட்சியின் வாசுதேவன் நாயர் முதல்வரானார், ஓராண்டு பதவியில் இருந்தார். மீண்டும் குழப்பம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த முகமது கயா பதவியில் அமர்ந்தார். அடுத்த 55 நாட்களில் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1980 பொதுத்தேர்தலில் ஒன்றிய ஜனநாயக முன்னணி என்கிற பெயரில் சிபிஐ-காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. எதிரணியில் இருந்த சிபிஎம் வெற்றி பெற்று, ஈ.கே.நாயனார் முதல்வர் பதவியில் அமர்ந்தார். 2 ஆண்டுகள் நெருங்கிய நிலையில் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதால் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஒராண்டு ஜனாதிபதி ஆட்சிக்குப் பின் காங்கிரஸ் தடுமாறி ஆட்சி அமைக்க உரிமை கோரி கருணாகரன் முதல்வர் பதவியில் அமர்ந்தார். இந்தமுறை 3 மாதம் பதவியில் இருந்தார். மீண்டும் குழப்பம், மீண்டும் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கருணாகரனுக்குக் கிடைக்கும் முதல்வர் பதவி, கையில் உள்ள குலோப் ஜாமூன் வாய்க்குள் வைக்கும்போது யாராவது பறித்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் அவருக்கு இருந்தது.
வீ.எஸ்.அச்சுதானந்தன்
1982க்கு பின் நிலைமை மாறத்துவங்கியது. 1982 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கருணாகரன் முதல்வர் பதவியில் அமர்ந்தார். அப்போது முதல்வர் பதவிக்கு கட்சியில் போட்டிக்கு யாருமில்லாத நிலை. காங்கிரஸில் கருணாகரனுக்குப் போட்டியாக இருந்த ஏ.கே.அந்தோணி காங்கிரஸ் கருணாகரனுடன் சண்டை போட்டுக்கொண்டு காங்கிரஸ் (அ) என்கிற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். இதனால் சிரமமில்லாமல் கருணாகரன் முதல்வர் பதவியில் இருந்து ஆட்சி செய்தார். முதல் முறையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தார். எதிர்க்கட்சித் தலைவராக ஈ.கே.நாயனார் இருந்தார். அடுத்து 1987ல் வந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்று சிபிஎம் வெற்றி பெற்று மீண்டும் ஈ.கே.நாயனார் முதல்வர் பதவியில் அமர்ந்தார். 5 ஆண்டுகள் பூர்த்தியாகும் முன்பே சட்டமன்றத்தை கலைத்து தேர்தலை சந்தித்தனர். இந்த முறை அதாவது 1991 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கருணாகரன் முதல்வரானார். 4 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்த நிலையில் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்ப, ஆட்சியின் கடைசி வருடத்தில் காங்கிரஸுக்கே திரும்பி எம்.பியாக இருந்து வந்த ஏ.கே.அந்தோணியை முதல்வராக்கியது கட்சி தலைமை.
1996ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து சிபிஎம் வெற்றி பெற்றது. 1967 முதல் 1996 தேர்தல் வரை எம்.எல்.ஏவாக தொடர்ச்சியாக 7 முறை வெற்றிபெற்ற கருணாகரன், தனக்கு மாநில அரசியல் போதுமென, 98ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், பின்னர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாக இருந்து அரசியல் ஒய்வு பெற்று மறைந்தார். தேர்தலில் சிபிஎம் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சிக்குள் குழப்பம் வந்ததால் தேர்தலில் போட்டியிடாத ஈ.கே.நாயனார் முதல்வராகப்பட்டார், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த முறை 5 ஆண்டுகள் முழுமையாக பூர்த்தி செய்தார். அவர் முதல்வர் தேர்வில் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்திருந்தாலும் கட்சிக்குள் கலகம் உருவாகியிருந்தது. ஈ.கே.நாயனார் பதவியில் அமர்ந்ததை அப்போது மாநில செயலாளராக இருந்த வீ.எஸ்.அச்சுதானந்தனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஈ.கே.நாயனார்
தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 பேரில் அச்சுதானந்தனும் ஒருவர். கேரளாவின் ஆலப்புழாவில் பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் ஏழாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு தையல் கடையில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் விவசாயத் தொழிலாளியாக இருந்தவர், இடதுசாரிகளின் விவசாய அமைப்போடு ஆரம்பத்தில் இணைந்து பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து போராட்டங்கள் நடத்தினார். அந்தப் போராட்டத்தின் விளைவாக ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்து வெளியே வந்து கட்சிப்பணியை தொடர்ந்தார்.
1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தபோது, புதியதாக உருவாக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 32 தலைவர்களில் ஒருவராக இருந்தார் வீ.எஸ்.அச்சுதானந்தன். 'வீ.எஸ்' என்று இவரை அன்பாக அழைப்பாளர்கள் இவரது ஆதரவாளர்கள். இவரை விட கட்சியில் இ.எம்.எஸ் நம்பூதிரி பாட், நாயனார் சீனியர்களாக இருந்தனர். அதனால், முதலில் நாயனார் முதலமைச்சரானபோது அதை ஏற்றுக்கொண்டார். பின்னர் தனக்கு முதல் மந்திரி பதவி வரும் சூழ்நிலை நிலவியபோது, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் உதவியுடன் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்கள் வழியாக நாயனார் அந்தப் பதவியை மூன்றாவது முறையாகப் பிடிக்க இருவருக்கும் கட்சிக்குள் கருத்து மோதல் வந்தன. அந்த காலகட்டத்தில் நாயனார்க்கு ஆதரவாக வந்த இளம் தலைவர்தான் பினராயி விஜயன். நாயனார் மூன்றாவது முறையாக முதல்வராக ஆதரவு தெரிவித்தவர் பினராயி விஜயன்.
நாயனார் பிறந்த அதே கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி என்கிற கிராமத்தில் பிறந்தவர் விஜயன். இளம் வயதிலேயே இந்திய மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இணைந்து செயல்படத் துவங்கினார். 1944ல் பிறந்த இவர் 1964ல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். கேரளா மாணவர் சங்கத்தில் கண்ணூர் மாவட்ட செயலாளராக இருந்தார். அதன் பின்னர் கேரளா வாலிபர் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்புக்கு வந்தார். அடுத்து ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு வந்தார். கேரளா மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். 1970ல்தான் முதன்முதலாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவரது வயது 26 தான். அதன்பின் சில தோல்விகள், பல வெற்றிகள். கண்ணூர் மாவட்ட சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தபோது அவரது வயது 28. அதன்பின் 1977, 1991 தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார். 1996 பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்றார். தனது ஆதரவாளர் என்பதால் பினராயி விஜயனை, முதல்வர் ஈ.கே.நாயனார் தனது தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக்கினார். இரண்டு ஆண்டுகள் பதவி வகித்த அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். நாயனார் மாநில கமிட்டியில் பேசி 1998ல் கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யவைத்தார்.
இதன்பின் நாயனார் – அச்சுதானந்தன் மோதல் ரூட் மாறி அச்சுதானந்தன் – பினராயி விஜயன் மோதலாக மாற்றமடைந்தது. கேரளா சிபிஎம் கட்சியில் அச்சுதானந்தனும் – பினராயிவிஜயனும் மோதிக்கொள்ளத் துவங்கினார்கள். இருவருக்கும் அணிகள் உருவாகத் தொடங்கின. அந்தப் பிரிவினை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் பாதித்தது. அடுத்து வந்த 2001 சட்டமன்ற தேர்தலில் அது எதிரொலித்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஏ.கே.அந்தோணி முதல்வராக அமர்த்தப்பட்டார். 4 ஆண்டுகள் பதவியில் இருந்தார். காங்கிரஸ்க்கே உரிய வழக்கமான கோஷ்டி சண்டை அதிகமானது. ஒருபுறம் 2004ல் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது காங்கிரஸ் தலைமை. அந்தோணியின் சேவை, மத்திய மந்திரி சபையில் தேவையென முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவைத்து ராஜ்யசபா எம்.பியாக்கி டெல்லிக்கு அழைத்து மத்திய மந்திரி பதவி தந்தது கட்சித் தலைமை. இதனால் காங்கிரஸின் உம்மன்சாண்டி முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். ஒரு வருடம் உம்மன் சாண்டி முதல்வர் பதவியில் இருந்தார்.
2006 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து, சிபிஎம் வெற்றி பெற்றது. வி.எஸ்.அச்சுதானந்தன், மாநில செயலாளராக இருந்த பினராயி விஜயன் தரப்பின் எதிர்ப்புக்கிடையே முதல்வரானார். ஆட்சி ஒரு பக்கம் நடந்து கொண்டு இருந்தாலும் பினராயி விஜயனுக்கு எதிராக காய் நகர்த்தத் துவங்கினார் வி.எஸ்.அச்சுதானந்தன். நாயனார் அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக பினராயி விஜயன் இருந்தபோது, கேரளாவின் பன்னியாறு, செங்குளம், பள்ளிவாசல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த நீர்மின் உற்பத்தி நிலையங்களை சீரமைக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. அதில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களும், சில சர்வதேச நிறுவனங்களும் கலந்து கொண்டன. டெண்டர் கனடாவின் எஸ்.என்.லவா என்கிற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. லவா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதால் அரசுக்கு 370 கோடி ரூபாய் இழப்பு என மத்திய கணக்கு தணிக்கைத்துறை கண்டறிந்து அறிக்கை தந்தது.
கிடப்பில் இருந்து வந்த இதில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு பதிவு செய்ய முயன்றது. இதற்கு கவர்னர் ஆர்.எஸ்.காவை ஒப்புதல் அளிக்க 2014ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவ்வழக்கில் 12வது குற்றவாளியாக கட்சியின் மாநில செயலாளராக இருந்த பினராயி விஜயன் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு பதிவு செய்யப்படும்போதும், கவர்னர் அனுமதி தந்தபோதும் வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வர் பதவியில் இருந்தார். இந்த வழக்குக்குப் பின்னணியில் இருப்பது முதல்வராகவுள்ள வி.எஸ்.அச்சுதானந்தன்தான் என்கிற குற்றச்சாட்டை மத்திய கமிட்டிக்கு பினராயி விஜயன் தரப்பு கொண்டு சென்றது. இரு தரப்புக்கும் மோதல் அதிகமானது. காரசாரமாக அறிக்கை, மீடியா பேட்டிகள் வாயிலாக மோதிக்கொண்டார்கள். 2007 மே 26ல் பினராயி விஜயனை கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் இருந்து நீக்கியது மத்திய குழு. இந்த இருவரின் மோதல் உயிர் பலி ஆகும் அளவுக்குச் சென்றது.
இன்று பல விதங்களிலும் தமிழ் மக்கள் பார்த்து பொறாமைப்படும் முதல்வராக உள்ள பினராயி விஜயன், கொலை வழக்கில் தொடர்புபடுத்திப் பேசப்பட்டார். அந்தக் கதையை வரும் திங்களன்று (07-மே-2018) பார்ப்போம்.