வரும் 21ஆம் தேதி அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல். இந்த நிலையில் நேற்று ரஜினியை சந்தித்து அழைப்பு விடுத்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கமல் - ரஜினி சந்திப்பால் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை. தமிழகத்திற்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்றார். நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும் என்று நடிகர் சத்தியராஜ் பேசினார். கமல் - ரஜினி இணைந்து வந்தாலும் 10 சதவீத வாக்குகளை கூட பெற முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
இதுபோன்ற பல்வேறு விமர்சனங்கள் குறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலினை தொடர்பு கொண்டோம்....
கட்சி தொடங்குவதற்கு முன்பு திமுக தலைவர் கலைஞரை ரஜினி சந்தித்தார். இதனை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அதுமட்டும் இல்லாமல் மக்களிடம் தொடர்பில் உள்ளவர்களை பலரை சந்தித்தார். இதேபோல் கமலும் கலைஞரை சந்தித்தார். கமலும் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். நேற்று ரஜினியை கமல் சந்தித்து பேசியுள்ளார். கமலின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இது ஒரு நாகரீகமான சந்திப்பு, பல வருடங்களாக இருந்த நட்பின் சந்திப்பு.
அதேபோல நேற்று எங்கள் தலைவர், என் பாணி வேறு, கமல் பாணி வேறு. திரைப்படத்திலும் என் பாணி வேறு, கமல் பாணி வேறு. இருவரின் நோக்கமே மக்கள் நலன்தான் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை அனைத்து அரசியல்வாதிகளும் தான்தான் மக்கள் பணி செய்வேன் என்று பேசுவார்கள். ஆனால் கமலும் மக்கள் பணி செய்வார் என்று ரஜினி பெருந்தன்மையாக குறிப்பிட்டுள்ளார்.
தினந்தோறும் மீடியாவில் தோன்ற வேண்டும் என்று யாராவது எதையாவது சொல்வார்கள் அதனை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஒவ்வொருத்தரின் கருத்துக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் அவர்களது கருத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் என்று வந்துவிட்டால் விமர்சனங்களை ஏற்க வேண்டும். விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே...
ரஜினி சொன்னது என்னவென்றால், நாம் இன்னும் குளத்தில் இறங்கி நீச்சல் அடிக்கவில்லை. குளத்தில் இறங்கிய பின்னர் நீச்சல் அடித்துக்கொள்ளலாம். இப்போது அரசியல்வாதிகள் பேசுவதற்கு நானும் பதில் சொல்லக் கூடாது. நீங்களும் (எங்களை) பதில் சொல்லக் கூடாது என்று கூறியுள்ளார். ஒரு நியாயமான, நேர்மையான, பெருந்தன்மையான அரசியலை நடத்த நினைக்கிறார். அதனைத்தான் நாங்களும் விரும்புகிறோம்.
என் பாணி வேறு, கமல் பாணி வேறு என்று ரஜினி சொல்கிறார். தொண்டர்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கமலும் ரஜினியும் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? தனி பாணியாகவே இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
நேற்று செயற்குழு கூட்டத்தை நாங்கள் நடத்திக்கொண்டிருக்கும்போதுதான் ரஜினியின் பேட்டி வந்தது. என் பாணி தனி என ரஜினி சொன்னபோதே கூட்டத்தில் உள்ள நிர்வாகிகளிடம் மிகப்பெரிய உற்சாகம் எழுந்தது. சினிமாவில் எப்படி தனி பாணியை கடைப்பிடித்து சூப்பர் ஸ்டாராக ஆனாரோ, அதேபோல் அரசியலிலும் தனி பாணி என சொன்னது எங்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் சந்தோசம். தனிப்பட்ட கொள்கை, தனிப்பட்ட இலக்கோட செயல்படுவதை விரும்புகிறோம். இவ்வாறு கூறினார்.