காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் பலமுறை பிளவுகளை சந்தித்திருக்கிறது. தொடக்க காலத்திலேயே மிதவாதிகள் எனவும் தீவிரவாதிகள் எனவும் இரண்டு குழுக்களுடன் இயங்கியதுதான் காங்கிரஸ் கட்சி.
1969ல் பிரதமராக இருந்த இந்திராவின் சோசலிஷ திட்டங்களுக்கு காங்கிரஸில் இருந்த ஜமீன்தார்களும், முதலாளிகளும் முட்டுக்கட்டை போட்டனர். இந்திராவை சுதந்திரமாக முடிவெடுக்க விடாமல் தடுத்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரான சஞ்சீவரெட்டியை எதிர்த்து வி.வி.கிரியை நிறுத்தினார் இந்திரா. அவருக்கு காங்கிரஸில் ஒரு பிரிவினரும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வெற்றிபெறச் செய்தன.
அப்போது ஏற்பட்ட பிளவு காங்கிரஸை இரண்டு பிரிவுகளாக்கியது. ஆனால், காலப்போக்கில் இந்திராவின் பின்னால் காங்கிரஸ் ஒருங்கிணைந்தது. இந்திரா வலுவான தலைவராக உருவானார்.
1977ல் நெருக்கடிக்கு நிலைக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து பிரமானந்தரெட்டி தலைமையில் காங்கிரஸ் மீண்டும் பிளவைச் சந்தித்தது. ஆனால், 1980ல் ஜனதா ஆட்சி கவிழ்ந்து நடைபெற்ற தேர்தலில் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று அவருடைய தலைமையை உறுதிப்படுத்தியது.
1984ல் நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் மகன் ராஜிவ் காந்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிரதமரானார். 1989ல் நடைபெற்ற தேர்தலில் வி.பி.சிங் ஏற்படுத்திய அரசியல் மாற்றம் காரணமாக எதிர்க்கட்சிகள் இணைந்த தேசிய முன்னணி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் தனித்து பெரும்பான்மை பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
மிகக்குறுகிய காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் முக்கியமான சாதனைகளைப் புரிந்த வி.பி.சிங் அரசு கவிழ்க்கப்பட்டு 1991ல் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், ராஜிவ் கொலை செய்யப்பட்டதால் தென் மாநிலங்களில் ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக ஆட்சி அமைக்க சில இடங்கள் குறைவாகப் பெற்றாலும் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் மைனாரிட்டி அரசு பொறுப்பேற்கும் நிலை உருவானது.
அந்த மைனாரிட்டி அரசாங்கத்தில்தான் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. உலகமயம், தாராளமயம் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேசமயம், இந்தியாவின் மதசார்பின்மையை காவிப்படைகள் வெடிவைத்து தகர்த்ததை வேடிக்கை பார்த்த கையாலாகாத அரசாக நரசிம்மராவ் அரசு இருந்தது.
அதன்விளைவாக, 1996ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தனிப்பெருங் கட்சியாகக்கூட வரமுடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸின் பரிதாப நிலையை மீட்டெடுக்க இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சோனியாவை தலைவர் பொறுப்பேற்கும்படி மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட தயக்கத்துக்குப் பிறகு சோனியா ஒப்புக்கொண்டார்.
அவர் தலைவராகப் பொறுப்பேற்பதைக் கண்டித்து மம்தா பானர்ஜி தனது தலைமையில் திரிணாமுல் காங்கிரஸையும், சரத்பவார் தனது தலைமையில் தேசியவாத காங்கிரஸையும் உருவாக்கினார்கள். இது காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்தியது.
1996 தேர்தலில் காங்கிரஸ் தோற்றது மட்டுமின்றி, முதல்முறையாக பாஜக தனிப்பெருங்கட்சியாகும் அபாயமும் உருவானது. அதுமட்டுமின்றி, ஆட்சி அமைக்க முடியாத நிலை உறுதியானபோதும், பிடிவாதமாக ஆட்சி அமைக்கும் உரிமையை பெற்று வாஜ்பாய் தலைமையில் 14 நாட்கள் ஆட்சியையும் அமைத்தது. எந்தக் கட்சியும் பாஜகவை ஆதரிக்க தயாரில்லாத நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் வாஜ்பாய்.
இந்திய வரலாற்றில் மிகமுக்கிய நிகழ்வும் இந்தக் காலகட்டத்தில்தான் நடைபெற்றது. தேர்தலுக்கு பிறகு திமுக, ஜனதாதளம், தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த ஐக்கியமுன்னணி, மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அன்றைய மேற்கு வங்க முதல்வருமான தோழர் ஜோதிபாசுவை பிரதமர் பதவி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியை தனது எதிரியாக கருதும் காங்கிரஸ் கட்சியே நிலையான கூட்டணி ஆட்சியை ஜோதிபாசு கொடுப்பார் என்று நம்புவதாக கூறியது.
ஆனால், அந்த வாய்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலை தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பிரகாஷ் காரத்தின் ஆதரவாளர்கள் ஒரு வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்தனர். இது இமாலயத் தவறு என்று கருத்துக் கூறிய ஜோதிபாசு, கட்சியின் முடிவை ஏற்பதாக கூறினார்.
இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி அரசு மத்தியில் அரசு அமைத்தது. அப்போதும் காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு புத்தி வரவில்லை. தங்களுடைய கட்சி பலமிழந்திருப்பதை உணரவில்லை. ஐக்கிய முன்னணி அரசைக் கவிழ்த்தால், மறுபடியும் சோனியா தலைமையில் பெரும்பான்மை பெறமுடியும் என்று தப்புக்கணக்கு போட்டார்கள்.
சுப்பிரமணியசாமியின் பேச்சைக் கேட்டு, அதிமுக, பாஜக உதவியுடன் ஐக்கிய முன்னணி அரசை கவிழ்க்க திட்டமிட்டார்கள். அதை நிறைவேற்றினார்கள். இதையடுத்து 1998ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக மீண்டும் தனிப்பெருங் கட்சியாக வந்தது. காங்கிரஸ் இப்போதும் இரண்டாவது இடத்தையே பெற்றது. இம்முறை அதிமுக, தெலுங்குதேசம், அகாலிதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் வாஜ்பாய் தலைமையில் பாஜக கூட்டணி அரசு முதன்முறையாக பதவியேற்றது.
ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் நச்சரிப்பை பிரதமர் வாஜ்பாய் ஏற்க மறுத்ததால், காங்கிரஸ் உதவியுடன் அதிமுக கவிழ்த்தது. இதற்கு தேர்தலில் பாஜகவுடன் திமுக உள்ளிட்ட 18 கட்சிகள் கூட்டணி அமைக்க முன்வந்தன. இம்முறை பாஜக கூட்டணி போதுமான பெரும்பான்மையுடன் வாஜ்பாய் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகளும் உதவியாக இருந்தனர். அதைத்தொடர்ந்து 1999ல் நடைபெற்ற இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.
இவ்வளவுக்கும் காங்கிரஸ் தனது பலம் அறியாத அறியாமையே காரணமாக அமைந்தது. இந்த இரண்டாவது ஆட்சிக் காலத்தில்தான், குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் கொடூரமாக வெடித்தது.
இதேநிலை தொடர்ந்தால் பாஜக தனித்தே அரசு அமைக்கும் அளவுக்கு பலம்பெற்றுவிடும் என்ற கருத்து பலமடையத் தொடங்கியது. இதையடுத்து பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்களிடமும் உருவானது. ஆனால், காங்கிரஸ் இல்லாமல் இது சாத்தியமில்லை என்பதும் புரிந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் திமுக தலைவர் கலைஞரைத்தான் முதன்முதலில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் சம்மதித்தால் பாஜக அரசிலிருந்து விலகுவதாக கலைஞர் தெரிவித்தார். உடனே டெல்லி சென்ற சுர்ஜித் சோனியாவை சந்தித்துப் பேசினார். அன்றே, கூட்டணி அரசுக்கு சம்மதம் என்று சோனியா பகிரங்கமாக அறிவித்தார். காலமெல்லாம் தனது எதிரியாக கருதிய காங்கிரஸுடன், மூன்று மாநிலங்களில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட வேண்டிய காங்கிரஸுடன் துணிச்சலாக அணி அமைத்தார் சுர்ஜித்.
2004ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அந்த அணி மகத்தான வெற்றி பெற்றது. ஒருமுறைகூட பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாத, கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றாத, ரயில் கட்டணத்தை அதிகரிக்காத, ரயில்வே வருமானத்தை அதிகரித்த, கிராமப்புற ஏழை மக்களின் வருவாய் உத்தரவாதத்துக்காக 100 நாட்கள் வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்திய அருமையான ஆட்சியாக அது அமைந்தது. ஆனால், இப்போது காங்கிரஸின் செல்வாக்கு உயர்ந்துவிடும் என்று நினைத்தோ, பாஜக ஆட்சி அமையாமல் போகும் என்று நினைத்தோ, தான் ஆதரித்த காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. ஆனால், அந்த முயற்சி தோற்றது.
அத்துடன், மேற்கு வங்கத்தில் எதிரும்புதிருமாக இருந்த மம்தாவையும், காங்கிரஸ் கட்சியையும் கைகோர்க்க வழி ஏற்படுத்திக் கொடுத்தன. அங்கு சிபிஎம் தலைமையிலான இடதுமுன்னணியை திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. இன்று மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணி மூன்றாவது இடத்துக்கு போயிருக்கிறது.
அதுமட்டுமின்றி 2009ல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்களை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் மகத்தான வெற்றி பெற்று அரசு அமைத்தது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மீண்டும் மமதையை ஏற்படுத்தியது. காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக நினைத்தார்கள். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளையே சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு மிரட்டத் தொடங்கினார்கள்.
ஆனால், அவர்களுடைய சதித்திட்டம் அவர்களுடைய கழுத்தையே சுற்றிவளைத்தது. 2014 தேர்தலில் பாஜகவின் பொய் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் கட்சி பலியானது. எதிர்க்கட்சி அந்தஸ்த்தைக்கூட பெற முடியாத அளவுக்கு படுதோல்வியைச் சந்தித்தது.
ஒரு அகில இந்தியக் கட்சி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு எதிராக தனது சார்பில் ஒரு பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவே முடியாமல் திணறியதே தோல்விக்கு முக்கியமான காரணம் என்று கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகவே ஏற்கவில்லை.
2014ல் அப்படி என்றால் மோடியின் தவறுகள், பாஜக அரசின் பின்னடைவுகள் எல்லாம் சாதகமாக இருந்தும், அகில இந்திய அளவில் மற்ற கட்சிகளுடன் விட்டுக்கொடுத்து கூட்டணி அமைக்க ராகுல் விரும்பினாலும் மூத்த தலைவர்கள் போட்ட முட்டுக்கட்டையால் முடியாமல் போனது. விளைவு பல மாநிலங்களில் வாக்குகள் சிதறி பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வசதியாகப் போனது.
அகில இந்திய அளவில் இளைய தலைமுறைக்கு கூடுதல் வாய்ப்பளித்து, அவர்களுக்கு முதிய தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று ராகுல் விரும்பினார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களில் இளைய தலைவர்களான சச்சின் பைலட், ஜோதிராதித்திய சிந்தியா ஆகியோரின் தீவிர பிரச்சாரத்தால் மாநில அரசை காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால், அவர்களுக்கு முதல்வர் பதவியை விட்டுத்தர அசோக் கெலாட்டும், கமல்நாத்தும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் 2019 தேர்தல் அறிவிக்கப்பட்டது. மூத்த தலைவர்கள் அனைவரும் அவரவர் மாநிலத்தில்கூட காங்கிரஸ் பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை. ராகுல் மற்றும் பிரியங்கா மட்டுமே காங்கிரஸின் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். மூத்த தலைவர்கள் அவரவர் வாரிசுகளின் தொகுதியிலேயே முடங்கிவிட்டதாக ராகுல் காந்தியே குற்றம்சாட்டினார்.
தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு எதிராகவே இருந்தது. இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்த்தைக்கூட பெறவில்லை. ராகுல் காந்தியே அமேதி தொகுதியி்ல் தோல்வியடைந்தார். தென் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சில மாதங்களில் மக்களவைத் தேர்தலை சந்தித்த ராஜஸ்தானிலும், மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. இது ராகுலுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவேதான், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்வதற்குகூட காங்கிரஸ் தலைமையால் முடியவில்லை. இளையோருக்கு வழிவிட முதியோர் தயாரில்லை. முதியோருக்குள் ஒருவரைத் தேர்வு செய்யவும் முதியோருக்குள் ஒற்றுமை இல்லை.
அடுத்த தலைமுறைக்கு கட்சியை எடுத்துச் செல்ல நினைத்த ராகுல் வெறுத்துப்போனார். கடைசியில் வேறு வழியில்லாமல் இடைக்காலத் தலைவராக மீண்டும் சோனியாவையே முதியோர் சார்பில் நியமித்திருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், மகாராஸ்டிரா, ஹரியானா மாநிலத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இரு மாநிலத் தேர்தல்களையும் முதியோர் இஷ்டப்படியே சந்திக்கப் போகிறது காங்கிரஸ். அந்தந்த மாநிலக் காங்கிரஸ் தலைவர்களின் பிரச்சாரத் திறமை இந்த தேர்தலில் வெளிப்படப் போகிறது. கட்சியின் மூத்த தலைமுறையும் இளைய தலைமுறையும் எப்படி இணைந்து செயல்படப் போகிறது என்பதற்கு இந்தத் தேர்தலை ஒரு டெஸ்ட்டாக கருதுகிறார் ராகுல். காங்கிரஸின் மூத்த தலைவர்களை வெளியேற்றி, தனது தலைமையை ஏற்பவரைக் கொண்டு கட்சியை உருவாக்க ராகுல் விரும்பவில்லை. அதாவது கட்சியின் இன்னொரு பிளவுக்கு காரணமாக விரும்பவில்லை.
மகாராஸ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகளைக் கொண்டே அடுத்த கட்டத்துக்கு செல்ல ராகுல் விரும்புகிறார். காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்கள் தங்களுடைய பிடிவாதத்தை கைவிட்டு, கட்சியை இளைய தலைமுறையிடம் ஒப்படைத்து, வழிகாட்ட தயாராவார்களா என்பதை ராகுல் எதிர்பார்த்திருக்கிறார்.
தோற்றாலும் பரவாயில்லை, எனது தொகுதியை வேறு யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் தலைவர்கள் திருந்துவார்களா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.