Skip to main content

சதமடித்த ஒற்றுமை பயணம்; கவனிக்கப்பட்ட ராகுலின் நிகழ்வுகள்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

rahul gandhi bharath joda yatra 100th day celebrations 

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை அசைத்து இந்த யாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல் காந்தி, இன்று 100வது நாளாக நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

 

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் இந்த 100 நாட்களில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்கள்: 

3750 கிலோமீட்டரை 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் எனக் கடக்கும் வகையில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயணம் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு கன்னியாகுமரியில் ராகுல் தொடங்கினார். இந்தப் பயணத்தின் 8வது நாளான 14ம் தேதி கொல்லம் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கால்களில் கொப்பளங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஒருநாள் அவரது பயணம் தடைப்பட்டது.

 

rahul gandhi bharath joda yatra 100th day celebrations 

 

ராகுல் மேற்கொண்ட இந்தப் பயணத்தின் ஒரு கட்டத்தில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சமூக ஆர்வலர் மேதா பட்கர், மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி போன்ற ஆளுமைகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், அவர்களும் ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்டு நடைப் பயணத்தை மேற்கொண்டனர். தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திராவில் நடைப் பயணம் மேற்கொள்ளும்போது, வயதான பாட்டி ஒருவர் ராகுலை கட்டித்தழுவி முத்தமிட்டு ஆசீர்வாதம் செய்ததைக் கண்டு ராகுலும் அங்கிருந்த தொண்டர்களும் நெகிழ்ந்து போனார்கள்.

 

தெலுங்கானாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி சாலையில் நடந்து செல்கையில் அங்கிருந்த சிறுவர்களுடன் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென மாணவர்களுடன் சேர்ந்து ரன்னிங் ரேஸில் ஈடுபட்டார். அவர் ஓடிய நிலையில் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைவருமே சேர்ந்து ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டனர். இது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. அதேபோல், தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 56வது நாள் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். அவருடன் இணைந்து ம.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ சுமார் இரண்டரை மணி நேரம் நடைப்பயணம் மேற்கொண்டார்.

 

rahul gandhi bharath joda yatra 100th day celebrations 

 

இந்நிலையில் 29ம் நாளான கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியில் இருந்து காலை தனது நடைப் பயணத்தை ராகுல் காந்தி துவங்கினார். இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் அன்றைய தினம் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். உடல்நிலை காரணமாக நீண்ட நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நிலையில் அவர் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளார். அப்போது ராகுல் தனது அம்மாவிடம் கனிவாக நடந்து கொண்டதும், அவரது ஷூவின் லேசை கட்டிவிட்ட காட்சிகளும், நடைப் பயணத்தின்போது, ‘நடந்தது போதும்’ என்று சொல்லி அவரை காரில் ஏற்றிவிட்ட சம்பவங்கள் எல்லாம் அனைவரையும் கவனிக்க வைத்தது. ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.

 

நவம்பர் 27 ஆம் தேதி காலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணம் மேற்கொண்டபோது புல்லட் ஓட்டியது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. இந்த வீடியோவானது வைரல் ஆன நிலையில் பயணத்தின்போது சைக்கிள் ஓட்டியதும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தின்போது விலங்குகள் நல  ஆர்வலர் ரஜத் பிரசார் மற்றும் சர்தாக் ஆகியோர் வளர்க்கும் நாய்களுடன் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டபோது, நாய்களுடன் நெருங்கிப் பழகினார். சிறிது தூரத்திற்கு நாய்களும் ராகுலுடன் பயணத்தைத் தொடர்ந்தது.

 

rahul gandhi bharath joda yatra 100th day celebrations 

 

ராஜஸ்தானில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை பொருளாதார அறிஞரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் சந்தித்து சிறிது நேரம் நடைப் பயணம் மேற்கொண்டதுடன் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியும் விவாதித்து உள்ளார்.