Skip to main content

மோடிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் வேலைவாய்ப்புக்கு இல்லை- பாஜக தேர்தல் அறிக்கை

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

மக்களவை பொது தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு  முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில்  பாஜக "சங்கல்ப் பத்ரா, ஷாசாக் பாரத்" எனும் பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.  2014ஆம் ஆண்டு தேர்தலில் அறிக்கையில் குறிப்பிட்ட சில விஷயங்கள் இதில் குறிப்பிடாமலும், குறிப்பிடாத சில விஷயங்கள் குறிப்பிட்டும் இருக்கின்றனர். 
 

manifesto

 

 

கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில்  ‘நரேந்திர மோடி’ என்கிற பெயர் பயன்படுத்தவில்லை.
 

ஆனால், இந்த வருட பாஜக தேர்தல் அறிக்கையில், நரேந்திரா என்ற சொல் (22) முறை இடம்பெற்றுள்ளது.  மோடி (26) முறை இடம்பெற்றுள்ளது. 
 

தேர்தல் அறிக்கையில் நரேந்திரா மற்றும் மோடி என்கிற இரு சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நரேந்திர மோடியை மேற்கோள் காட்டியிருக்கின்றனர். குடிமக்கள் (17), வறுமை (14), ஆரோக்கியம் (22), வளர்ச்சி (14), ஊழல் (11) உள்ளிட்ட சொற்கள் நரேந்திர மோடியை விட குறைவாகவே வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

கடந்த 2014 அறிக்கையில் 14 முறை வேலை என்று வந்துள்ளது. ஆனால், இந்த வருட அறிக்கையிலோ இரண்டு முறை மட்டுமே வேலை என்ற சொல் வந்துள்ளது. 
 

2019 பாஜக தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு சுவாரஸ்ய விஷயம் என்ன என்றால்  ‘பசு’ என்கிற சொல் இடம் பெறவே இல்லை என்பது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. கடந்த 2014 பொதுத் தேர்தலில்  ‘கலாச்சார பாரம்பரியம்’ என்கிற தனி தலைப்பில்  ‘பசு’ துணை தலைப்பாக இடம்பெற்றிருந்தது. 
 

அதில் பசுவை பாதுகாப்பதற்காக சட்ட ரீதியான திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும், தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம் அமைத்து உள்நாட்டு பசுக்களின் இனப்பெறுக்கத்தை வளர்க்க செய்வோம் என்று உறுதிமொழி அமைத்தது பாஜக. ஆனால், இந்த முறை பசுக்களை பற்றி குறிப்பிடவே இல்லை.
 

கடந்த 2015ஆம் ஆண்டில் பசுக்களை கொடுமை செய்கிறார்கள் என்று பலர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. உபி மாநிலத்தை சேர்ந்த முகமது அக்லாக் என்ற 52 வயது முதியவரை பசுக் கொடுமை செய்தார் என்று குண்டர் கூட்டம் ஒன்று தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. தற்போது பாஜக பசு பாதுகாப்பை பற்றி குறிப்பிடாமல் இருப்பதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
 

இந்நிலையில் அஸ்ஸாமில் நேற்று மாட்டுக்கறி விற்பதாக சொல்லி குண்டர் கூட்டத்தால் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.