Skip to main content

“நீங்க எங்க வீட்டுப் பொண்ணு!” - கத்தார் தமிழர்களின் அன்பில் திளைத்த கோமதி!

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

நம் நாட்டில் எந்தத் திறமையாளராக இருந்தாலும், தானே முட்டிமோதி வெற்றி கண்ட பிறகே உலக வெளிச்சத்தை அடையமுடியும் என்கிற சூழல் இருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து. 

 

Gomathi


 


கத்தார் நாட்டில் தோஹாவில் நடைபெற்ற 23-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் 800-மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார் கோமதி மாரிமுத்து. இதுவரை இந்தியாவில் இப்படியொரு சாதனையை யாரும் நிகழ்த்தி இருக்காத நிலையில், 30 வயது கோமதி பல்வேறு இன்னல்களைக் கடந்து இந்த புகழை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார். இருந்தபோதிலும், இந்தியாவைச் சேர்ந்த போட்டியாளர்களோ, மற்ற யாருமோ ஓடிச்சென்று வெற்றி எல்லையைத் தொட்டிருக்கும் கோமதியிடம் கைக்குலுக்கவோ, கட்டியணைக்கவோ, கொண்டாடித் தீர்க்கவோ களத்திற்குச் செல்லவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
 

ஆனால், கத்தார் வாழ் தமிழர்கள் கோமதியை அவ்வளவு தனிமையில் விட்டு விடவில்லை. கோமதி தங்கியிருந்த ஓட்டலில் அவரை வரவேற்பதற்காகவே ஒரு தனிஅறை புக் செய்து காத்திருந்திருந்தது பலரையும் வியப்படையச் செய்தது. அவர்களைக் கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிட்ட கோமதி, கண்கலங்கி நின்றிருக்கிறார். கத்தாருக்கான இந்தியத் தூதர் பி.குமரன் தங்கம் வென்ற கோமதி, கேரளாவைச் சேர்ந்த சித்ரா ஆகியோருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.
 

Gomathi
கோமதிக்கு பரிசு வழங்கும் இந்திய தூதர் பி.குமரன்


ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் தங்கக் காசு ஒன்றை கோமதிக்கு பரிசாகத் தந்திருக்கிறார்கள். அங்கே வாழும் தமிழர்கள் சிலர் இந்திய நிர்வாகிகளின் அனுமதி பெற்று கோமதியைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று சொந்த மகளைப் போல கவனித்து விருந்துவைத்து உபசரித்திருக்கின்றனர். சிலர் கொடுத்த அன்பளிப்புகள் மட்டுமே 30 கிலோ அளவுக்கு, அன்பின் சுமையாக நிறைந்திருக்கிறது. கோமதியின் பொருளாதாரச் சூழலை அறிந்துகொண்டும், மேலும் பல சாதனைகளை அவர் படைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பலர் அவரது வங்கிக் கணக்கைக் கேட்டபோது, பெருந்தன்மையாக மறுத்திருக்கிறார் கோமதி. தமிழகத்திலும் பலர் அவருக்கு உதவ முன்வருகிறார்கள்.
 

இந்தியா திரும்பிய கோமதி தமிழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பயிற்சிக் காலங்களில் தான் அனுபவித்த துயரங்களை உருக்கமாக பகிர்ந்து கொண்டார். “சாப்பாட்டுகே வழியில்லாம ரொம்ப கஷ்டப்பட்ட நாட்களில்கூட பயிற்சியைக் கைவிடத் தோணாது. இருந்தும் ரெண்டு வருஷம் வறுமையின் காரணமா பயிற்சி எடுக்க முடியாம போச்சு. ஒருவேளை நல்ல பயிற்சி எடுத்திருந்தா இதைவிட நல்ல ரெக்கார்டு வச்சிருப்பேன். இந்த நேரத்துல என் கடவுளா நினைக்கிற அப்பா என்கூட இல்லாதது வருத்தமா இருக்கு. மாட்டுக்கு வைச்சிருக்க சாப்பாட்டைச் சாப்பிட்டு, என் பயிற்சிக்காக நல்ல சாப்பாடு போட்டாரு என் அப்பா” என கண்கலங்கினார். 
 

“என்னைப் போல பயிற்சிக்காக உதவி கிடைக்காம பலர் இருக்காங்க. பலர் விளையாட்டையே விட்டுட்டு போயிட்டாங்க. இனிமேல் அப்படி நடந்துவிடக் கூடாது. எனக்கு உதவி கெடைக்கலேன்னாலும் பரவாயில்ல. என்னைப்போல திறமையுள்ள பலருக்கும் தமிழக அரசு உதவி செய்தால், நிறைய சாதனைகள் படைக்க முடியும். இந்திய அரசு கூட இந்தப் போட்டிக்காக எனக்கு உதவல. இனிமே உதவி கெடைக்காட்டியும் பரவாயில்ல. கடுமையா பயிற்சி எடுத்து ஒலிம்பிக் மெடல் அடிக்கிறதுதான் என்னோட லட்சியம்” என்று உறுதியாகக் கூறுகிறார் தங்க மங்கை கோமதி மாரிமுத்து. 
 

விடாப்பிடியான தன்னம்பிக்கையும், வறுமையிலும் ஜெயித்துவிட வேண்டும் என்ற உறுதியும் மட்டுமே கோமதியை உலகமே கொண்டாடும் இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தோள் கொடுத்திருந்தால் அதை இன்னும் சுலபமாக்கி இருக்கலாம்.