
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சிறுமதுரை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் ராஜி தம்பதிக்கு 16 வயதில ஜெயராஜ், 15 வயதில் ஜெயஸ்ரீ, 12 வயதில ராஜேஸ்வரி, 10 வயதில் ஜெபராஜ் ஆகிய நான்கு பிள்ளைகள். இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள்.
ஜெயபால் அதே ஊரில் தனது வீட்டில் ஒரு பெட்டிக்கடையும் ஊர் முகப்பில் ஒரு பெட்டிகடை என இரண்டு பெட்டிகடை வைத்து பிழைப்பு நடத்துகிறார். ஊர்முகப்பில் உள்ள பெட்டிகடையை அவரது உறவினர் ஏழம்மாள் என்ற பாட்டி பார்த்துக்கொள்கிறார். விடுமுறை நாட்களிலும் இரவிலும் ஏழம்மாள் பாட்டியோடு ஜெயபால் மகன் ஜெயராஜ், ராஜேஸ்வரி ஆகிய இருவரும் கூட இருந்து வியாபாரம் செய்வது இரவில் அங்கேயே தங்கிக்கொள்வதுமாக இருப்பார்கள்.
ஜெயபால் வீட்டில் உள்ள பெட்டிக்கடையில் அவரது மனைவி ராஜி, ஜெயஸ்ரீ, ஜெபராஜ் ஆகியோர் வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே தங்கிகொள்வார்கள். இந்த நிலையில் 10ஆம் தேதி இரவு அதே ஊரைச்சேர்ந்த முருகன் மகன் பிரவின் என்ற இளைஞர் ஏழம்மாள் பெட்டிக்கடையில்; பீடி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அங்கு தங்கியிருந்து ஜெயபால் மகன் ஜெயராஜ் பகலில் கூட கடை திறக்கக்கூடாது எனக் காவல்துறை எச்சரித்து வருகிறது. எனவே இரவில் கடைதிறந்து எப்படி பீடி தரமுடியும் காலையில் வாருங்கள் பீடி எடுத்துதருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் ஜெயராஜை ஆபாசமாகத் திட்டி கொலைமிரட்டல் விடுத்து அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் ஜெயராஜ்க்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் காலை எழுந்தவுடன் தனது தந்தை ஜெயபாலிடம் கூறியுள்ளார். ஜெயபால் தன் மகன் ஜெயராஜை அழைத்துச்சென்று மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததோடு திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம் சென்று பிரவீன் மீது புகார் கொடுத்துள்ளார்.
அவர்கள் காவல் நிலையத்தில் இருக்கும்போதே செல்போன் மூலம் அழைப்பு வந்தது. அதில் மகள் ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டார்கள், உயிருக்குப் போராடுகிறாள் என்ற தகவல் வந்தது. இதைக் காவல் நிலையத்திலும் தெரிவித்துவிட்டு தன் மகனுடன் ஜெயபால் வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தபோது, சிறுமி ஜெயஸ்ரீ உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த காயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தாள்.
உடனடியாகத் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார், ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஜெயஸ்ரீயை உடனடியாக முன்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு ஜெயஸ்ரீ உயிருக்கு ஆபத்தான் நிலையில் இருப்பதைக் காவல்துறை மூலம் அறிந்த விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி அருண்குமார் அவர்கள், மாணவி ஜெயஸ்ரீயைச் சந்தித்தார். அவரிடம் ஜெயஸ்ரீ அளித்த வாக்குமூலத்தில், ''எனது அப்பா, அண்ணனை அடித்தவர்கள் மீது புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுவிட்டார். என் தாயார் வயலுக்குச் சென்றிருந்தார். நான் மட்டும் வீட்டில் இருந்தேன். அப்போது எங்கள் ஊரைச்சேர்ந்த முருகையன் என்கிற முருகன், ஏசகம் என்ற கலியபெருமாள் ஆகிய இருவரும் வீட்டுக்குள் வந்து என் அப்பாவைக் கேட்டு மிரட்டினார்கள். கோபத்தோடு என்னைக் கட்டிபோட்டு வாயில் துணியை அடைத்துவிட்டு பெட்ரொலை என் மீது ஊற்றி தீவைத்துவிட்டு, எங்கள் வீட்டையும் வெளிபக்கம் பூட்டிவிட்டுச் சென்றனர். தீயின் சூடுதாங்காமல் கத்திக் கதறினேன்'' என்று ஜெயஸ்ரீ அளித்த வாக்குமூலத்தை அடுத்து மாணவி எரிக்கப்பட்ட செய்தி தமிழகம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சிறுமி ஜெயஸ்ரீயைச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்னறி பரிதாபமாக இறந்துபோனார்.
இதுபற்றி நாம் விசாரித்தோம். தீக்காயங்களுடன் ஜெயஸ்ரீ உயிருக்குப் போராடிய போது அக்கம் பக்கத்தினருக்கும் அவரது குரல் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் தீ வாடை பரவியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் போராடிய காட்சிகள் பார்ப்போர் மனதைப் பதைபதைக்க வைத்தது.
10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இறக்கமற்ற அந்த அரக்கர்கள் அதே ஊரைச் சேர்ந்த முருகன் (வயது 50), கலியபெருமால் (வயது 60). முருகன் அதிமுகவைச் சேர்ந்தவர். அவர் மனைவி அருவி கடந்த 2011 முதல் 2016வரை அப்பகுதியின் ஒன்றிய கவுன்சிலராக இருந்துள்ளார். கலியபெருமாள் அந்த ஊரில் அதிமுக கட்சியின் கிளைக்கழகச் செயலாளராகப் பதவியில் உள்ளார். இருவரும் நெருங்கிய உறவினர்கள். கட்சி பலத்தை வைத்து ஊரில் நாட்டாமையாகச் செயல்பட்டுள்ளனர். இவர்களைக் கண்டு அந்தப் பகுதி மக்களே மிரலும் அளவுக்கு இவர்கள் செயல்பாடு இருந்துள்ளது.

ஏற்க்கனவே ஜெயபால் குடும்பத்திற்கும் முருகன் கலியபெருமாள் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் பிரச்சனை காரணமாக ஜெயபாலின் தம்பி குமார் என்பரை பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர் கையையும் வெட்டியுள்ளனர். முருகன் கலியபெருமாள் தரப்பினர். இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் ஜெயபால் நிலத்தின் பக்கத்தில் கலியபெருமாளுக்கும் நிலம் உள்ளது. இதனால் அடிக்கடி ஜெயபாலுக்கு கலியபெருமாள் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் சம்பவத்தன்று முருகன் மகன் பிரவின் பீடி கேட்டு தகராறு செய்து ஜெயபால் மகன் ஜெயராஜை தாக்கியதால் நீதிகேட்டு ஜெயபால் காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் சென்றுள்ளதைக் கேள்விப்பட்ட முருகன், கலியபெருமாள் ஆகிய இருவருக்கும் ஜெயபால் மீது கடும் கோபம் ஆத்திரம் ஏற்பட்டதற்குக் காரணம்.
ஏற்கனவே கொழுந்துவிட்டு எறிந்த முன்பகை, மகன் பிரவின் மீது போலிசில் புகார் கொடுத்தது, இப்படிப்பட்ட ஜெயபால் எங்களை மீறி இந்த ஊரில் அவன் குடும்பம் வாழ்ந்துவிடுமா என்று ஜெயபால் வீட்டுக்குச் சென்று மாணவி ஜெயஸ்ரீயை மிரட்டியுள்ளனர். ஜெயபால் மீது இருந்த கோபத்திலும் அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். அப்போது இரக்கமற்ற முறையில் ஜெயஸ்ரீயைக் கட்டிப்போட்டு அவர் சத்தம்போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து அழுத்திவிட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளனர் என்பதை அவர்வூர் மக்கள் சிலர் பயத்தோடும் மிரட்சியோடும் கூறினார்கள்.
இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடியாகச் சம்பவ இடத்திற்கு விசாரணை செய்தார். திருவெண்ணெய் நல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியனிடம், ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபால் புகார் அளித்துள்ளார். உடனடியாகக் குற்றவாளிகளான முருகன், கலியபெருமாள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சிபிஜ, சிபிஎம், அமமுக உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவிலிருந்து முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரையும் கட்சியை விட்டு நீக்கியுள்ளளதாக அறிவித்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, மாணவி மரணம் நெஞ்சைப் பதற வைக்கிறது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள முதல்வர், அந்தக் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த அந்தக் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுமான பொன்முடி, சிறுமதுரை சென்று ஜெயஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அந்தக் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் உதவிதொகை அளித்துள்ளார். அப்போது அவரிடம் ஜெயஸ்ரீயின் தாயார் ராஜி, ''அந்த முருகனும் கலியபெருமாளும் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் அவ்வப்போது மிரட்டிக்கொண்டே இருப்பார்கள். உங்களை ஊரில் நிம்மதியாக வாழவிடமாட்டோம் என்று நேரடியாகவே மிரட்டி வந்தார்கள். என் மகளை தீவைத்து கொளுத்தும் அளவிற்கு துணிந்து விட்டனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த ஊரில் நாங்கள் எப்படி வாழ்வது'' என்று கூறி அழுதார்.

இந்தச் சம்பவம் பற்றி அறிந்த தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தாமே முன்வந்து வழக்குப்பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஏழு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சம்பவம் நடந்த உடனேயே முருகனும் கலியபெருமாளும் மாவட்டத்தில் உள்ள அவர்கள் கட்சி முக்கியப் பொறுப்பாளருக்கு போன் செய்து தங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர். அந்தப் பொறுப்பாளர் காவல்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டுள்ளார். காவல்துறையினர் அவர்கள் இருவரும் கொடூரச் செயலைச் செய்துள்ளனர். அந்த மாணவி உயிருக்குப் போராடும் காட்சி பரிதாபமாக உள்ளது என்று கூறியுள்ளனர். இதையடுத்து அந்த முக்கியப் பிரமுகர் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்.
இது போன்று ஈவு இரக்கமற்ற மனிதர்கள் அனைத்து மதங்களிலும், சாதிகளிலும், இயக்கங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்படவேண்டும் என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.