ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி, பொருளாதார சிக்கலில் தவிகிறார்கள். இந்த இக்கட்டான நேரத்திலும், மாணவர்களை அடைத்து வைத்து கட்டாய வகுப்பு நடத்தியதையும்,அடுத்த வருடத்திற்கான கல்விக் கட்டணத்தை உடனே செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துவதையும் பார்த்து, இது கொரோனாவை விட மோசமான வைரசாக இருக்குதே என்று பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
திருச்சியில் உள்ள கமலா நிக்கேதன் மான்டிசரி பள்ளி நிர்வாகம் அடுத்த வருடத்திற்கான கட்டணத்தைக் கட்டச் சொல்லி நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. மார்ச் 23 முதல் 30 ஆம் தேதி வரை ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியே நாட்களைக் குறித்து அதற்குள் முதல் திருப்புத் தொகையை கட்டிவிட வேண்டும் என்றும், அதைக் கட்டத் தவறியவர்கள் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கட்டுபவர்கள் 250 ரூபாய் அபராதத் தொகையுடன் கட்ட வேண்டும் என்றும், ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கட்டுபவர்கள் 500 ரூபாய் அபராதத் தொகையுடன் கட்ட வேண்டும் என்றும் இதன் பிறகு கட்டாதவர்கள் அனைவரும் பள்ளியின் ரீ-அட்மிஷனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கடுமையாக ஒரு நோட்டிஸ் ஒட்டியும், அதையே இமெயிலிலும் அனுப்பி இருக்கிறார்கள்.
கரானோ பிரச்சனையில் ஊரடங்கு உத்தரவில் எல்லோரும் வீட்டுக்குள் இருக்கும் நேரத்தில், பணத்தை ஆன்லைனில் கட்டுங்கள் என்று மீண்டும் எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் அறிவிக்கை கொடுக்கவும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர்.
இந்த நேரத்தில் எப்படிக் கட்டணம் செலுத்துவது? என்ற கவலையில் இருக்கின்றனர். ஊரடங்கின் போது இப்படி பணம் கட்டச்சொல்வது மனிதாபிமான செயலே இல்லை என்று பெற்றோர்கள் குமுறுகின்றனர்.கஷ்டப்பட்டு வாங்கிய சீட் என்பதால் பள்ளி நிர்வாகத்தைக் கேட்பதற்கும் தயங்குகின்றனர்.திருச்சியில் உள்ள சிபிஎஸ்சி, மான்டிசரி பள்ளிகளிலே அதிகபட்சக் கல்விக் கட்டணம் வாங்குவது இந்தப் பள்ளியில் தான். இந்தப் பள்ளி நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 4,500 மாணவர்கள் படிக்கிறார்கள்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலே இருக்கிறது இந்தப்பள்ளி. அரசாங்கத்தின் எந்தக் கல்விக் கட்டண நிர்ணயத்தையும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்வதே கிடையாது.அரசாங்கம் விதித்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.
நோட்டீஸ் குறித்து நாம் மாணவனின் பெற்றோர் போல் பள்ளி நிர்வாகத்திடம் பேசிய போது, "சார்.. இப்போ ஆன்லைனில் பணம் கட்ட முடிஞ்சா கட்டிடுங்க... இல்லைன்னா தேதி நீட்டிப்பு பண்ணுவாங்க, அப்ப கட்டுங்க'' என்று கிடைத்தவரைக்கும் லாபம் என்கிற கணக்கிலேயே பேசினார்கள்.
இதே போல ஊரடங்கு காலத்தில் திருச்சியிலேயே இன்னொரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியது.
21 நாட்கள் ஊரடங்கினால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முழுமையாகவும், சில மாநிலங்களில் பாதி நடந்த நிலையிலும் ஒத்தி வைக்கப் பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியும் நடக்க வாய்ப்பில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்துவது இயலாத காரியம் என்பதாலும், பிளஸ்டூ தேர்வு நடத்தி அதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பின்னரே அது நடத்த முடியும் என்பதாலும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே - 3 ஆம் தேதி நடை பெற இருந்த நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் சேதுராமன்பிள்ளை காலனியில் இயங்கி வரும் பாயிண்ட் அகாடமியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளது. இதில் 10 மாணவர்கள், மாணவிகள் அங்கேயே தங்கிப் படிக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு மாணவர்கள் ஊருக்குக் கிளம்பிய நேரத்தில், எல்லோரும் இங்கேயே தங்கியிருங்கள், உங்கள் பெற்றோர் முழுமையான கட்டணத்தைக் கொடுத்து விட்டு அதன் பிறகு செல்லுங்கள் என்று சொல்லி அங்கே தங்க வைத்து வகுப்புகளை நடத்த ஆரம்பித்தார்.ஊரடங்கு நெருக்கடிக்கு நடுவே தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் வகுப்புகள் நடந்த நிலையில் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் வேறு வழியில்லாமல் தங்க ஆரம்பித்தனர்.
மாணவர்களை அடைத்து வைத்து வகுப்புகள் நடத்துவது குறித்து ரகசியத் தகவல் வரவும் நாம் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்தோம். உடனே அங்குச் சென்ற காவல்துறை, மாணவர்களை மீட்டு அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு, அந்த நீட் வகுப்பு நடத்திய நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.