2005ல் தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த். 2006 சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு தேர்தலைச் சந்தித்தது தேமுதிக. அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது தேமுதிக. அதில், பல தேமுதிக எம்எல்ஏக்கள் கட்சி மாறி சென்றுவிட்டனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தோல்வியைச் சந்தித்தது.
பா.ம.க.வுடனான பேச்சு வார்த்தையை சுமூகமாக முடித்துவிட்டது. விஜயகாந்தின் தேமுதிகவுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், "நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு" எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்.கே.சுதீஷ் பதிவு செய்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், சுதீஷ் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
அதேநேரம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கிறதா? எத்தனை தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது என்பது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் அதிமுக தலைமை தங்களை அழைக்கவில்லை என வெளிப்படையாகவே அறிவித்தார். இருப்பினும், அதிமுக தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அதிமுக தரப்பில் கேட்டபோது, "பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்குத் தொகுதி உடன்பாடுகள் முடிக்கப்பட்ட பின்னர்தான் தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியும்" எனக் கூறப்பட்டது.
தற்போது, பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்படும். மேலும், ஒற்றை இலக்கத்தில் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இதனால், அதிர்ச்சியான தேமுதிக, பாமகவுக்கு இணையான தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தங்களுக்கு வேண்டும் என அடம்பிடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், தொகுதிப் பங்கீடு இன்னும் இழுபறியாகவே உள்ளது. இதற்கிடையில், "திமுகவின் முன்னாள் அமைச்சரின் உறவினர் ஒருவர், தேமுதிகவிடம் கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். அதற்கு, ஏற்கனவே திமுக கூட்டணி நிரம்பி வழிகிறது, இதில் எங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என தேமுதிக தரப்பில் இருந்து பதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிகளைக் குறைத்து உங்களுக்கு பங்கீடு செய்கிறோம். அணியில் சேரவேண்டியது மட்டும்தான் உங்கள் பணி, எனத் திமுக தரப்பில் சொல்லப்பட்டதாக" கூறப்படுகிறது.
ஆனால், நம்மிடம் பேசிய சில தேமுதிக தொண்டர்கள், "கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் சுறுசுறுப்பாகக் களத்தில் இயங்கிவருகிறார். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது எனக் கூறிவருகிறார். இப்படி இருக்கும்போது திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை நாடிச்சென்றபோது நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். இரண்டு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் தேமுதிக கூட்டணி பேசுகிறது என அவப்பெயரை உண்டாக்கினார்கள். இதையெல்லாம் அண்ணியார் மறந்துவிடுவாரா?" எனக் கூறினர். தேமுதிகவின் இன்னொரு தரப்போ, "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. பெட்ரோல் விலை 100-ஐ தொடப்போகிறது. கேஸ் விலையும் ஏறிக்கொண்டே உள்ளது. திமுக பக்கம் மக்கள் சாய்வது போலத் தெரிகிறது. அதனால், அதிமுகவில் தேமுதிக இணைவது நல்லதல்ல. ஒன்று, திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம். அல்லது, கட்சி இருக்கிறது என்பதைக் காட்ட தனியாக நிற்கலாம்" எனச் சில தொண்டர்கள் புலம்புகின்றனர்.