சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டு சிறைத் தண்டனை முடித்து திரும்பிய சசிகலாவுக்கு அலப்பறையான வரவேற்புகள் கொடுத்து அசத்தியது தினகரன் தரப்பு. ஆனாலும், சசிகலாவுக்கு இதில் முழுதிருப்தி இல்லை. எதிர்பார்த்த நிகழ்வுகள் நடக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.
இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட அ.ம.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், "உங்களை வரவேற்க தமிழக எல்லைக்கு ஓ.பி.எஸ். வருவார். அங்கு வர முடியாமல் போனாலும் நீங்கள் தங்கும் தி.நகர் இல்லத்திற்கு வருவார்' என சசிகலாவிடம் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார் தினகரன். அது நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியால் பழிவாங்கப்பட்ட மற்றும் அவர் மீது அதிருப்தியிலிருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்களை அழைத்து வருவதாக தினகரன் சொன்னதும் நடக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமியால் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பேசிய தினகரன், "நம்முடைய சமூகத்தினரெல்லாம் ஒற்றுமையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டிய தருணம் இது. நம் வலிமையைக் காட்டினால்தான் எடப்பாடி பழனிசாமி பயப்படுவார். அதனால் நீங்கள், உடனடியாக சின்னம்மாவை வந்து பாருங்கள்'' என வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், மணிகண்டனோ, "அம்மாவால் (ஜெ.) பாதுகாக்கப்பட்ட நம் கட்சி பலகீனமாகும் பிரச்சனைக்கு நான் காரணமாக இருக்கமாட்டேன்'' என சொல்லி மறுத்துள்ளார். தினகரன் வீசிய வலையில், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் என சிலர் சிக்கியிருந்தாலும் தற்போது வெளிப்படையாக வருவதற்குத் தயங்குகின்றனர். சசிகலா வருகையை ஒட்டி அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி காட்டிய கெடுபிடிகள், நடவடிக்கைகளில் இவர்களுக்கு உடன்பாடில்லைதான். என்றாலும், "சசிகலாவை வைத்து அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவு உருவாக நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்'' என பலரும் தினகரனிடம் தெரிவித்துள்ளனர். சசிகலாவின் வியூகங்கள் அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தே இவர்களின் முடிவு இருக்கும்'' என்கின்றனர் நம்மிடம்.
சசிகலா வருகைக்கு தடுப்பு முயற்சிகளை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, சசிக்கு அமர்க்கள வரவேற்பு கொடுக்கப்பட்ட பிறகு, தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை மீண்டும் துவக்கிவிட்டார். "10சி செலவு செய்து திரட்டிய கூட்டத்தால் உருவாக்கப்பட்ட வரவேற்பு' என உளவுத்துறையினர் எடப்பாடி பழனிசாமியிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து அ.தி.மு.க.வில் விசாரித்தபோது, "ஓ.பி.எஸ். உட்பட கட்சியின் மிக முக்கிய சீனியர்கள் சிலர் சசிகலா பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என நினைத்த எடப்பாடி பழனிசாமி, அவர்கள் போக மாட்டார்கள் என உறுதிப்படுத்திக்கொண்டதும்தான் சசிகலாவுக்கு எதிரான அஸ்திரங்களை எடுத்தார். இன்னும் 25 நாட்களுக்குள் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும். தேதி அறிவித்துவிட்டால் ஆட்சி அதிகாரம் எதுவும் ஆட்சியாளர்களிடம் வலிமையாக இருக்கப்போவதில்லை. அப்போது கட்சிதான் வலிமையானது. கட்சியின் சின்னமான இரட்டை இலையை அ.தி.மு.க.வின் வேட்பாளர்களுக்கு வழங்கும் அதிகாரம் ஓ.பி.எஸ்.சுக்கும் இ.பி.எஸ்.சுக்கும் இருக்கிறது. அதனை இழக்க ஓ.பி.எஸ். விரும்பவில்லை.
வேட்பாளர்கள் தேர்வில் இருவரும் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும். அப்போது, அ.தி.மு.க. போட்டியிடும் இடங்களை சரிபாதியாக பிரித்துக்கொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ். கோரிக்கை வைப்பார். எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லையெனில், 40 சதவீத இடங்களுக்கு குறைவாக ஓ.பி.எஸ். ஒப்புக்கொள்ள மாட்டார். 40 சதவீத வேட்பாளர்கள் ஓபிஎஸ்சின் ஆட்களாகவும், 60 சதவீத வேட்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்களாகவும் இருப்பார்கள். இதில் அமைச்சர்களின் சிபாரிசுகளுக்கு இரு தரப்புமே கணிசமான இடங்களை விட்டுத்தர சம்மதித்துள்ளனர்.
அதனால், ‘சசிகலாவின் பின்னால் செல்வது எந்தவிதத்திலும் எதிர்கால அரசியலுக்கு உதவாது' என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் ஓ.பி.எஸ். மேலும், சசிகலா தொடர்பாக டெல்லியிடமிருந்தும் தெளிவான தகவல்கள் அவருக்கு எதுவும் தரப்படாததால், அங்கிருந்து கிடைக்கும் அட்வைஸைப் பொறுத்தே, முடிவெடுக்கலாம் என்பதிலும் ஓ.பி.எஸ். உறுதியாக இருக்கிறார். இதனை சீனியர்கள் மூலம் அறிந்ததையடுத்தே, சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வேகமாக இயங்குகிறார்'' என்று விவரிக்கிறார்கள் அழுத்தமாக.
இதற்கிடையே, "22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் ஆட்சிக்கான பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதுவரை எம்.எல்.ஏ.க்களுக்கு செய்துகொண்டிருந்த மாத நன்மைகளை நிறுத்திவிட்டார். இதனால் எம்.எல்.ஏ.க்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை சரிசெய்யும் முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். வெகுமதிகள் விரைவில் கிடைக்கும்” என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
சசி - இ.பி.எஸ். இடையிலான முரண்பாடுகளை வைத்து சீட் ஷேரிங்கில் காய் நகர்த்துகிறது பா.ஜ.க. தலைமை. குறிப்பாக, இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியில் திருத்தப்பட்ட விதிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கில் சசிகலா மூலம் எடப்பாடி பழனிசாமிக்குப் பாதகமான முடிவை தேர்தல் ஆணையத்தில் எடுக்க வைக்க மத்திய அரசால் முடியும். இதனைச் சுட்டிக்காட்டி சில காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளது பா.ஜ.க.