சிமெண்ட் ஆலையின் ஆக்கிரமிப்பை அகற்றிய ஊராட்சி மன்றத்தலைவர்களின் அதிரடியால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அந்த ஊராட்சி மன்றத்தலைவர்கள் மீது வழக்கு போட்டு மிரட்டுகிறது போலீஸ். கொஞ்சமும் சளைக்காமல், சட்டப்போராட்டத்திற்கு தயாராகிறார்கள் சம்பந்தப் பட்ட செந்துறை, நல்லாம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்கள்.
செல்லம் கடம்பன்
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பனிடம் இதுகுறித்து பேசிய போது, "செந்துறை, இலங்கை சேரி, நல்லாம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விவசாய நிலங்களுக்கு பத்தடி அகலம் உள்ள நீர்வழிப் பாதை செல்கிறது. இப்பகுதியில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலை நிர்வாகம் உஞ்சனிப்பகுதியில் நிலம் வாங்கி அங்கே சுண்ணாம்பு கல் சுரங்கம் தோண்டுகிறார்கள். அந்த சுரங்கத்திலிருந்து சுண்ணாம்பு கல்வெட்டி எடுத்து லாரிகள் மூலம் ஆலைக்கு கொண்டு செல்ல அந்த நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இப்படி நீர் வழிப்பாதையை மூடியதால் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை நீர் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் தேங்கி நின்று விட்டது. அருகிலுள்ள இலங்கை சேரி கிராமத்திலுள்ள ஏரிக்கு செல்லும் அந்த நீர்வழி தடுக்கப்பட்டதால் மழைநீர் ஏரிக்கு செல்லமுடியாமல், விவசாய நிலங்களை பாழ்படுத்திவிட்டது. ஆகவே, ஊராட்சி மூலம் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றினோம்.
இதனால் ஆலை நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாரை தூண்டிவிட்டு புகார் கொடுக்கச்செய்துள்ளது. அதனால், எங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது போலீஸ் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால், போலீஸ் எங்கள் மீதே வழக்கு போடுகிறது. வருவாய் துறையினரும், காவல்துறையும் சிமெண்ட் ஆலை முதலாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். எங்கள் பணியை முடக்க பார்க்கிறார்கள். இதையெல்லாம் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம்'' என்கிறார் ஆவேசமாக.
கொளஞ்சிநாதன்
நல்லாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சிநாதனிடம் கேட்டபோது, "ஆக்கிரமிப்பை அகற்றிய விவகாரத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும் சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள். இந்த சிமெண்ட் ஆலையினால் இப்பகுதியிலுள்ள கிராமங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இப்போது பிரச்சனை வந்த பிறகு, ‘உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறோம்’ என்று வருகிறார்கள். சமாதானத்தை ஏற்க முடியாது. வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்கிறார் உறுதியாக.
செல்வகுமார்
இலங்கை சேரியை சேர்ந்த விவசாயி செல்வகுமார், "சிமெண்ட் ஆலை நிர்வாகம் குவாரியில் இருந்து கற்கள் எடுத்துச்செல்ல நீர் வழித்தடம் செல்லும் ஓரமாக உள்ள எங்கள் பட்டா நிலங்களில் எங்கள் அனுமதி இல்லாமலேயே அகலப்படுத்துவதற்காக ரோடு அமைத்தார்கள். இதை தடுத்தபோது காவல்துறையை வைத்து என்னை மிரட்டினார்கள். இதன்பிறகு நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வழக்கு தொடுத்தேன். நீர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையும் மீறி சாலை அமைத்து குவாரியில் இருந்து கற்கள் ஏற்றி செல்கிறது சிமெண்ட் ஆலை லாரிகள்.
ஆக்கிரமித்து போடப்பட்ட சாலை
இதுபற்றி விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில் செந்துறை, நல்லாம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றியதால் ஊராட்சி தலைவர்கள், என்னையும் சேர்த்து மொத்தம் 8 பேர்கள் மீது வழக்கு போட்டுள்ளார்கள். செந்துறை போலீஸ், சிமெண்ட் நிறுவனத்திற்கு சாதகமாக இருந்து, எங்களை கைது செய்வதாக மிரட்டுகிறது'' என்கிறார் ஆத்திரத்துடன் .
இதுகுறித்து செட்டிநாடு சிமெண்ட் ஆலை மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா சிதம்பரத்திடம் கேட்டபோது, "உஞ்ஜனி பகுதி குவாரியில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் சுண்ணாம்பு கற்கள் சிமெண்ட் ஆலைக்கு எடுத்து வரப்படும் வழி ஏற்கனவே மக்கள் பயன்படுத்திய பாதைதான். அதை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. சுரங்கத்திலிருந்து கற்களை ஏற்றி வருவது தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை. அந்த ஒப்பந்ததாரர் அந்த பாதையில் நிலம் வைத்துள்ளார். அதில் தண்ணீர் செல்வதற்கு குறுக்கே போடப்பட்டுள்ள பைப் லைனை அப்புறப்படுத்தியுள்ளனர். அது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு போட்டுள்ளனர். இதற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஒப்பந்தக்காரரும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார், அது நிலுவையில் உள்ளது'' என்று சமாளிக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் ரத்னா
இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் கேட்டபோது, "அது சம்பந்தமாக கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார். ஆட்சியரின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்கள் அரியலூர் மாவட்ட விவசாயிகள்.