Skip to main content

“பாகிஸ்தான் கூட நம்மை விட முன்னேறிவிட்டது...” - பாஜகவை விளாசிய டாக்டர் காந்தராஜ்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

Kantharaj interview about annamalai and bjp

 

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து விவரிக்கிறார் மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர். காந்தராஜ் அவர்கள்.

 

“மணிப்பூரில் நடக்கும் கொடுமைகள் பற்றி அனைவரும் கேள்வி கேட்கின்றனர். அதை மறைப்பதற்காகத் தான் தமிழ்நாட்டில் பாஜக பாதயாத்திரை நடத்துகிறது. முதலில் பாதயாத்திரை அறிவித்த அண்ணாமலை, அதை நடத்தவில்லை. இப்போது மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்புவதற்காக நடத்துகிறார். மணிப்பூரில் தங்களால் எதையும் செய்ய முடியவில்லை என்று அந்த மாநில கவர்னரே சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு கையாலாகாத அரசாக இவர்கள் இருக்கிறார்கள். ஊடகங்களின் பார்வையைத் திருப்ப வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம்.

 

தமிழக மக்களை மண்ணில் போட்டு புதைப்பதற்காகத் தான் இந்த யாத்திரை என்பதால் 'என் மண்; என் மக்கள்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ் மக்களை மண்ணுக்குள் புதைக்கும் வேலையைத்தான் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் நடக்க வேண்டிய அனைத்து நல்ல விஷயங்களுக்கும் இங்குள்ள ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். திமுகவுக்கு எதிராக ஆளுநரிடம் பாஜக புகார் கொடுத்தது. யாராவது ட்ரங்க் பெட்டியில் வைத்து ஆவணங்களை எடுத்துச் செல்வார்களா? அந்தப் பெட்டிக்குள் பணம் இருந்தது என்று சிலர் சொல்கிறார்கள். இதற்கு கவர்னர் மாளிகை தான் பதில் சொல்ல வேண்டும்.

 

திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்திருக்கிறது என்று அமித்ஷா சொல்கிறார். ஆனால் அவருக்கு அருகில் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள ஆர்.பி. உதயகுமாரை உட்கார வைத்திருக்கிறார். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை தான் ராகுல் காந்தியைப் பார்த்து அண்ணாமலை பாதயாத்திரை செல்வது. ராகுல் காந்தி பாதயாத்திரை சென்றபோது அவரிடம் அனைவரும் அன்போடு வந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அண்ணாமலை செல்லும் வழிகளில் வாழும் மக்களும் வியாபாரிகளும் பயப்படுகிறார்கள். வடிவேலு மற்றும் லிவிங்ஸ்டன் நடித்த காமெடியில் வருவது போன்று தான் சிலருக்கு காசு கொடுத்து அண்ணாமலை பற்றி பெருமையாக பேசச் சொல்கின்றனர். 

 

ராகுல் காந்தி இரவு தங்குவதற்காக மட்டும்தான் கேரவன் வைத்திருந்தார். பகலில் முழுக்க முழுக்க நடந்தே சென்றார். அண்ணாமலை நடப்பதே குறைவு. இவரை மக்கள் மதிப்பதும் இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் ஏதாவது கேள்விக்கு பாராளுமன்றத்தில் பதில் சொல்லியிருக்கிறாரா? அங்கு எதிர்க்கட்சியினரையும் பாஜகவினர் பேச விடுவதில்லை. மணிப்பூர் கலவரத்தை நடத்தியது அங்குள்ள பாஜக முதலமைச்சர் தான். தான் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு தான் செல்லாமல் உதயகுமாரை அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. 

 

கர்நாடக தேர்தலுக்கு முன்பு தொங்கு சட்டமன்றம் தான் அமையும் என்று ஒரு பொய்யான கருத்துக்கணிப்பை கசியவிட்டார் அமித்ஷா. அவருடைய எண்ணம் பொய்த்துவிட்டது. அதனால்தான் இப்போது தமிழ்நாட்டுக்கு நேரடியாக ஓடி வருகிறார். பிரதமர் மோடி வாக்குறுதிகள் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார். பொருளாதார பட்டியலில் இந்தியாவை கடைசி மூன்று இடங்களுக்கு கொண்டு செல்வேன் என்பதைத் தான் அவர் மறைமுகமாக சொல்கிறார். தனிநபர் வருமானத்தில் பாகிஸ்தான் கூட நம்மை விட முன்னேறிவிட்டது. 130 கோடி பேரில் 13 கோடி பேர் மட்டும்தான் வறுமைக்கோட்டுக்கு மேல் வந்துள்ளனர் என்று இந்திய அரசாங்கமே சொல்கிறது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்