Skip to main content

கட்டண கொள்ளையில் திளைக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள்!

Published on 21/06/2020 | Edited on 21/06/2020

 

CBSE SCHOOLS FEE PARENTS SALEM DISTRICT

 

தமிழ்நாடு அரசின் கல்விக்கட்டண நிர்ணயம் சட்டம் என்பது சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு பொருந்தாது என்ற ஒரே காரணத்தை முன்வைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் திளைத்து வருகின்றன.

 

தமிழகத்தில் கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியின்போது, தனியார் சுயநிதி பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு, அமைவிடம், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கு வழங்கப்படும் இதர திறன் பயிற்சிகள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கென ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பிரத்யேகமாக ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. அதையடுத்து, 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த கமிட்டி பெயரளவுக்கு இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கிடையே, அரசின் கல்விக்கட்டண விதிகள் தங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பைப் பெற்றன. இந்தத் தீர்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட முன்னணி சி.பி.எஸ்.இ. பள்ளிகள், பல லகரங்களில் கட்டணத்தை வாரிச்சுருட்டத் தொடங்கின. 

 

பிளஸ்2- க்குப் பிறகு எழுதப்போகும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கும் ஆறாம் வகுப்பில் இருந்தே பயிற்சி, ஸ்மார்ட் கிளாஸ், வெளிநாட்டு மொழிகள் என பல மாயாஜாலங்களைக் காட்டி, விதவிதமான பெயர்களில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. கர்சிவ் ரைட்டிங் எனப்படும் பிரத்யேக கையெழுத்துப் பயிற்சி பல மேற்கு நாடுகளில் தடை செய்யப்பட்ட நிலையில், அதை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் பள்ளிகள் இங்கு ஏராளம். பிள்ளைகளின் எதிர்காலம் என்ற ஒரே இலக்கில் பயணிக்கும் பல பெற்றோர்கள், கட்டணக் கொள்ளை குறித்து வாய் திறக்க மறுத்தாலும், உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதையும் மீறி பேசினால், எங்கே பிள்ளைகளின் எதிர்காலத்தை பள்ளிகள் சிதைத்து விடுமோ என்ற தேவையற்ற அச்சத்திலும் அவர்கள் உழல்கின்றனர். 

 

எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், பல தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நிலையில், அதைப்பற்றி வாய் திறக்கவே மறுக்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள். கட்டண விவகாரத்தில் அத்துமீறும் பல பள்ளிகளின் நிர்வாகிகள் முதல்வரின் சமூகத்தை சார்ந்தவர்கள். அரசின் பாராமுகத்திற்கு சாதிய பாசமும் ஒரு காரணம் என்கிறார்கள். நுழைவுத்தேர்வு என்ற பெயரில் கட்டணம் கேட்டு வற்புறுத்துவதாக சேலத்தை அடுத்த குரும்பப்பட்டியில் இயங்கி வரும் தி இண்டியன் பப்ளிக் பள்ளி மீது புகார்கள் எழுந்துள்ளன. அதுகுறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் நம்மிடம் பேசினர்.

 

''சேலத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் பிளஸ்1, பிளஸ்2- க்கு ஆண்டுக்கு நான்கு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இதில், நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிக் கட்டணமும் அடங்கும். இதில் டியூஷன், மெட்டீரியல், போக்குவரத்து, உணவு, வழிகாட்டிப்பயிற்சி முகாம், சீருடை ஆகியவற்றுக்காக ஒரு டெர்முக்கு மொத்தம் 87,450 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுவதால் போக்குவரத்து, உணவுக்கட்டணத்தைக் கழித்ததுபோக 69,400 ரூபாய் கட்டணம் செலுத்தினோம். 

 

இவை இல்லாமல் நீட், ஜே.இ.இ. போட்டித்தேர்வு பயிற்சிக் கட்டணமாக 17,500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஜே.இ.இ. போட்டித்தேர்வு எழுத விருப்பம் இல்லாத பெற்றோர்களிடமும் இக்கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்துகிறார்கள். இந்தக் கட்டணத்தை செலுத்த மறுக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க மறுத்துவிட்டனர். ஜே.இ.இ. தவிர இதர கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டு இருக்கும்போது ஆன்லைன் வகுப்புக்கு அனுமதிக்க மாட்டோம் என்பதை ஏற்க முடியாது. இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை எல்லாம் எங்கே போய், யாரிடம் சொல்வது என்றுகூட தெரியாதபோதுதான் கடைசியில் நக்கீரனிடம் வந்தோம். அதிகாரிகளிடம் புகார் சொன்னால், அப்பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகளை பழி வாங்கி விடுவார்களோ என்ற அச்சமும் இருக்கிறது,'' என்கிறார்கள் பெற்றோர்கள்.

 

மாநில பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு ஜூன் மாதம்தான் கல்வி ஆண்டு தொடங்கும். ஆனால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு, கல்வி ஆண்டு என்பது ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கி விடுகிறது. கரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது, ஆன்லைன் வகுப்புகளுக்காக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதையெல்லாம் சிபிஎஸ்இ பள்ளிகள் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

 

CBSE SCHOOLS FEE PARENTS SALEM DISTRICT

 

எல்லா சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகமுமே உரிய கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை முடித்ததுடன், ஆன்லைன் கட்டணத்தையும் அதிரடியாக வசூலித்துவிட்டன. கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்தினால்தான் ஆன்லைன் வகுப்பில் உங்கள் பிள்ளையை அனுமதிக்க முடியும் என்று தடாலடியாகச் சொல்லி வசூலித்திருக்கிறது சேலம் குரங்குசாவடியில் செயல்பட்டு வரும் செந்தில் பப்ளிக் பள்ளி. ''சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் என் மகள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். ஆண்டுக்கு 90 ஆயிரம் ரூபாய் கட்டணம். அதில் 60 ஆயிரம் ரூபாய் செலுத்தினால்தான் ஆன்லைன் வகுப்புக்கு அனுமதிக்க முடியும் என்று சொன்னதால், வேறு வழியின்றி கட்டணத்தைக் கட்டிவிட்டோம். அவளுக்கு தினமும் மூன்று மணி நேரம் ஆன்லைனில் கிளாஸ் எடுக்கிறார்கள்,'' என்கிறார் மத்திய அரசு ஊழியர் ஒருவரின் மனைவி.

 

இப்பள்ளி மீது வேறு சில புகார்களும் எழுந்துள்ளன. அதைப்பற்றி விரிவாகவே பேசினார்கள் இரண்டு பெற்றோர்கள்.

 

''எங்கள் குழந்தைகளில் ஒருவர் செந்தில் பப்ளிக் பள்ளியில் முதலாம் வகுப்பும், இன்னொரு குழந்தை நான்காம் வகுப்பிலும் சேர்த்திருக்கிறோம். முதல் வகுப்புக்கு ஆண்டுக்கு 65,300 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தத் தொகைக்கு உரிய ரசீது வழங்காமல் வெறும் 20,500 ரூபாய் மட்டுமே ரசீது போட்டுக் கொடுத்துள்ளனர். 

 

CBSE SCHOOLS FEE PARENTS SALEM DISTRICT

 

நான்காம் வகுப்புக்கு, ஆண்டுக்கு 72,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதற்கும் 21 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே ரசீது கொடுத்துள்ளனர். பராமரிப்புக் கட்டணம் என்ற பெயரில் மட்டும் 20,000 ரூபாய் குறிப்பிட்டு வசூலிக்கிறார்கள். அதைப்பற்றி ரசீதில் எதுவும் குறிப்பிடுவதில்லை. தவிர சீருடை, புத்தகங்கள், விளையாட்டு சீரூடை உள்ளிட்டவற்றை தர்மபுரியில் உள்ள கே.பி. டிரேடர்ஸ் நிறுவனத்திடம் இருந்து 'பில்' பெற்றுக் கொடுக்கிறார்கள். அதுவும், அவர்களுடைய பினாமி நிறுவனமாக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.

 

கடந்த ஆண்டு, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர். இந்தாண்டு மதிய உணவுக்கென தினமும் 50 ரூபாய் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். பேருந்து போக்குவரத்து இல்லாத இப்போதைய நிலையிலும்கூட பேருந்து கட்டணமும் வசூலித்துவிட்டனர். ஆன்லைனில் கட்டணம் செலுத்துகிறோம் என்றாலும், நேரில்தான் வந்து செலுத்த வேண்டும் என்கிறார்கள். 
 

CBSE SCHOOLS FEE PARENTS SALEM DISTRICT

 

இதே பள்ளியில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் பிள்ளைகளும் படிக்கிறார்கள். ஆனால் யாருமே இதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்வதில்லை. கேட்டால், முதல்வரின் உறவினர்கள் நடத்தும் பள்ளி என்கிறார்கள். நாங்கள் விருப்பப்பட்டுதான் எங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்துள்ளோம். என்றாலும், வசூலிக்கும் கட்டணத்திற்கு உரிய ரசீது தருவதில் என்ன நடந்து விட போகிறது?,'' என்கிறார்கள் பெற்றோர்கள். இவை இப்படி என்றால், ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு ஊர்களில் செயல்படும் மற்றொரு பிரபலமான பள்ளியோ, பல இடங்களிலும் குத்தகை அடிப்படையில் கட்டடங்களைப் பிடித்து பள்ளிகளை நடத்தி வருகிறது என்கிறார்கள். அங்கு, மேலே சொல்லப்பட்ட பள்ளிகளைக் காட்டிலும் இன்னும் சில லகரங்கள் அதிகமாகவே வசூலிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. 

 

தி இண்டியன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் சுஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு, ஜேஇஇ பயிற்சியில் சேர விரும்பாத மாணவர்களிடம் கட்டாயக் கட்டணம் வசூலிக்கப்படும் புகார் குறித்து கேட்டோம். புகாரைக் கேட்டுக்கொண்ட அவர், ''ரிப்போர்ட்டர்ஸ்கிட்ட பேசணும்னா எங்க எம்.டி.,கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதான் பேச முடியும். 'ஐ வில் கால் யூ பேக்' சார்,'' என்று சொல்லிவிட்டு, பேச்சைத் துண்டித்துவிட்டார். அதன்பிறகு மறுநாளும் பலமுறை முயற்சித்தும் பள்ளி முதல்வர் செல்போனை எடுக்கவில்லை.

 

CBSE SCHOOLS FEE PARENTS SALEM DISTRICT

 

இதையடுத்து, சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரேசனை செல்போனில் தொடர்பு கொண்டோம். ''மாணவனின் பெற்றோர் என்ன கட்டணம் செலுத்துகிறார்களோ அதற்கு உரிய ரசீதை முறையாக தருகிறோம். பாருங்கள்... இப்போதுகூட ஒரு லேடி ரசீது கேட்டு வந்திருக்கிறார். அவருக்கு ரசீது தரப்போகிறோம். ஒரே நேரத்தில் முழுமையாக ரசீது தர முடியாமல் போயிருக்கலாம். வந்து கேட்டால் தந்துவிடப் போகிறோம். ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் யாரிடமும் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தவில்லை. 

 

பெற்றோர்கள் அந்தந்த கல்வி ஆண்டுக்கு கட்டணம் செலுத்திவிட்டுச் செல்கிறார்கள். அவ்வளவுதான். அதேபோல்தான் பஸ் கட்டணமும்கூட. இப்போதைக்கு பஸ் சீட்டை மட்டும் ரிசர்வ் செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் விருப்பக் கடிதம் மட்டும்தான் பெற்றிருக்கிறோம். கட்டணம் வசூலிக்கவில்லை. மத்திய அரசு என்ன சொல்லி இருக்கிறதோ அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட நாங்கள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதில்லை. ரசீதில் டியூஷன் பீஸ் குறித்து தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம்,'' என்றார் சுந்தரேசன்.

 

CBSE SCHOOLS FEE PARENTS SALEM DISTRICT

 

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் நிர்வாகி பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். ''தமிழ்நாடு அரசின் கட்டணம் நிர்ணய விதிகள், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பொருந்தாது போனாலும், அப்பள்ளிகள் மீது கட்டணம் உள்ளிட்ட வேறு சில புகார்கள் வந்தால் அதைப்பற்றி விசாரிக்க மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறது. எந்த மாணவனும் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக அவர்களை வகுப்புக்கு அனுமதிக்காமல் இருக்க முடியாது.  ஸ்மார்ட் போர்டு பெயரில் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கின்றன. அந்த போர்டு ஆண்டுக்கு எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது?, அதன் தேய்மானம் என்ன? என்று எதையுமே கணக்கில் கொள்ளாமல் பள்ளிகள் ஒரே ஸ்மார்ட் போர்டை காட்டி ஆண்டுதோறும் கட்டணம் வசூலிக்கின்றன. கட்டணம் நிர்ணய விவகாரத்தில் தமிழ்நாட்டில் நியாயமற்ற அணுகுமுறைதான் உள்ளது. கட்டண முறைகேடு தொடர்பாக புகார்கள் கொடுத்தாலும் அதிகாரிகள் முறையாக ரசீது தருவதில்லை,'' என்றார்.

 

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறுகையில், ''சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டணம் வசூல் விவகாரத்தில் தமிழக அமைச்சர் தலையிட வேண்டும். இந்தப் பிரச்னைகள் எல்லாமே அமைச்சர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை.  அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டுதான் சில தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் இப்படி நடந்து கொள்கின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், அதிக  கட்டணம் வசூலிக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளை உடனடியாக மூடி சீல் வைத்தால்தான் அவர்களுக்கும் பயம் ஏற்படும்,'' என்றார்.

 

இந்தப் புகார் குறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தியின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். விசாரிப்பதாகச் சொன்னார். நடவடிக்கை குறித்து அறிவதற்காக அவரையும் பலமுறை அழைத்தும் செல்போனை எடுக்கவில்லை. அந்தளவுக்கு பிஸியாகிப் போனார் முதன்மைக் கல்வி அலுவலர்.

 

CBSE SCHOOLS FEE PARENTS SALEM DISTRICT

 

இதுகுறித்து கருத்து அறிவதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் பேச வேண்டும் என்று அவருடைய பொலிடிகல் பி.ஏ.சபேசனை தொடர்பு கொண்டு கேட்டோம். என்ன விஷயமாகப் பேச வேண்டும் எனக்கேட்டார். புகார் குறித்து கூறினோம். அமைச்சரிடம் கேட்டுவிட்டு வருவதாகச் சொன்னவர் மீளவும் பதில் அளிக்கவில்லை.

 

சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டணக்கொள்ளை என்பது வெறுமனே சட்டவிரோதச் செயல் மட்டுமே அன்று. அறமற்றதும் கூட. உலகத்தரம் என்ற பெயரில் கட்டணத்தை முன்னிறுத்தி, அறத்தைப் புறந்தள்ளும் பள்ளிகளில் இருந்து பயின்று வெளியேறும் பிள்ளைகளும் எதிர்காலத்தில் தார்மீக அறத்தை மறுதலித்து விடும் பேராபத்தும் இருக்கிறது. முதல்வர் இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.