ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பனை மரத்திலிருந்து பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனங்கருப்பட்டி ஆகிய உணவுப் பொருட்கள் கிடைத்தன. பனை பொருள்களால் தொழுகை பாய், பெட்டி, நார், கம்பு என எண்ணிலடங்கா பொருட்கள் தயாரிக்கப்பட்டன. அதுபோல் காகிதம் கண்டறியும் முன் தமிழ் காப்பியங்களும் இலக்கியங்களும் வாழ்ந்ததே பனை ஓலைச் சுவடிகளில் தான். பனை ஓலை கூறை மேயவும், வைரம் பாய்ந்த பனங்கட்டைகளை ஓட்டு வீடுகளுக்கு உத்திரமாக பயன்படுத்தப்படும் மட்டைகள் வேலிகளாகவும், நார் பிரித்து கட்டில் கட்டுவதற்கும் கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. இப்படி பனையின் ஒவ்வொரு அணுவும் மக்களின் ஆரோக்கியம் பொருளாதாரம் பேணும் பொருட்களாக இருந்து வந்தது.
ஆனால் இந்த நவீன கால மாற்றம் மூலம் இப்பனை பொருட்களின் பயன் பாட்டின் அருமை தெரியாமல் நாமும் அதனை உபயோகிக்காமல் குறைத்து கொண்டு வருகிறோம். இருந்தாலும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தொகுதியில் இருக்கும் கோவிலூர், கோம்பை, மணல் காட்டூர், சின்ன அழகு நாயக்கனூர், பழைய தோப்பூர், குஜிலியம்பாறை எரியோடு உள்பட சில பகுதிகளில் இருக்கும் பன மரங்களில் பாளையை சீவி கலயத்தை கட்டி அதில் சுண்ணாம்பை தேய்த்து விடுவர். மறு நாள் காலையில் அது பதநீராக இருக்கும். ஒரு மரத்திற்கு மூன்று அல்லது ஐந்து கலயங்கள் கட்டுவதன் மூலம் பத்து லிட்டர் பதநீர் கிடைக்கும். அதை பனை தொழிலாளர்கள் அகன்ற கொப்பரையில் ஊற்றி அடுப்பில் வைத்து கூல் போல் காய்ச்சி சிறிதளவு விளக்கெண்ணையும் ஊற்றி குச்சியில் கிண்டியபின் அதை எடுத்து தேங்காய் சிரட்டையில் ஊற்றி வைத்து விடுவார்கள். அது சிறிது நேரத்தில் பனங்கருப் பட்டியாக வந்து விடுகிறது.
அதை திண்டுக்கல் மட்டும்மல்லாமல் சேலம், ஈரோடு, மதுரை, தேனி திருச்சி உள்பட சில பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் வாங்கி செல்கிறார்கள். இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருந்துள்ளன. ஆனால் வறட்சி மற்றும் மக்களின் புறக்கணிப்பால் பல ஆயிரம் மரங்கள் அழித்து போயின. அதை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருகிறார்கள்.
இருந்தாலும் பனை கருப்பட்டியின் மருத்துவ பயன் சர்க்கரையை விட மிகுதியாக உள்ளன. இதில் இரும்பு, கால்சியம் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. விட்டன் பி, அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த பனங் கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. அதுபோல் பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் சேர்த்து களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். அதுபோல் குழந்தை பெற்ற தாய்மார்களும் சாப்பிடலாம். இந்த கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். சர்க்கரைக்கு பதிலாக டீ, காப்பி தயாரிக்க கருப்பட்டியை பயன்படுத்தலாம். பழங்கால தமிழர் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த பனங்கருப்பட்டி தற்போது ஒரு மருத்துவ பொருளாகவும் இருந்து வருகிறது.
இது சம்பந்தமாக காட்டி சாலையை சேர்ந்த தொழிலாளர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, எங்க தாத்தா காலத்திலிருந்து இந்த பனைமர தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 2000 குடும்பத்தினர் இப்பகுதிகளில் இருந்தனர். தற்பொழுது போதிய வருமானம் இல்லாததால் 500 குடும்பத்தினர் இத்தொழிலை நம்பியுள்ளோம். அதிலேயும் ஆண்டுக்கு நான்கு மாதம் மட்டுமே இந்த பனங்கருப்பட்டி தயாரிக்கிறோம். இப்படி தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி தண்ணீர் படாமல் இருந்தால் மூன்று ஆண்டுகள் வரை கூட கெடாமல் இருக்கும். பதனீரில் சுண்ணாம்பு தவிர வேற எந்த விதமான ரசாயனமும் கலப்பது கிடையாது. அதனால் உடல் நலத்திற்கும் நல்லது. அப்படி இருந்தும் கூட ஒரு கிலோ 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய்கு வியாபாரிகள் வாங்கிச் சென்று அதை கிலோ 400 ரூபாய் வரைக்கும் விற்கிறார்கள் என்று கூறினார்.
இது சம்பந்தமாக கோவிலூர் சி.பி.எம்.கிளை செயலாளர் சண்முகம் நம்மிடம் பேசும்போது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பனை வாரியம் அமைக்கப்பட்டு இப்பகுதியில் அரசு மூலம் கட்டடங்கள் கட்டப்பட்டு அலுவலகம் செயல்பட்டு வந்தது. அது காலப் போக்கில் செயல் படாமல் போய்விட்டது. அதை அரசும் கண்டு கொள்ளவில்லை. கடந்த கஜா புயலில் இப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட மரங்கள் அழிந்துவிட்டன. அது போல் ஆண்டுதோறும் மழை தண்ணீர் இல்லாததால் மரங்களின் எண்ணிக்கையும் குறைகிறது. அதனால பனை தொழிலை பாதுகாக்க பனை வாரியமும் செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தினால் தான் பனைத் தொழிலாளர்கள் தயாரிக்கும் கருப்பட்டிக்கு நியாயமான விலை கிடைக்கும். அதுபோல் மருத்துவ குணம் கொண்ட இந்த பனங்கருப்பட்டியை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் பனை கருப்பட்டி செய்யும் தொழிலாளர்களுக்கும் போதிய வருமானம் கிடைக்கும். அதன் மூலம் பனை மரங்களையும் பாதுகாக்க முடியும். இந்த கரோனா எதிரொலி மூலம் பனை தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக இந்த அரசு அறிவித்தும் கூட அந்த பணம் தொழிலாளர்களுக்கு இன்னும் கொடுக்க வில்லை. அதை உடனே கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.