2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்தரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை எதிர்த்து மிலானி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும், அந்த வழக்கில் தனது சொத்து விவரங்கள் உள்படப் பல விஷயங்களை வேட்பு மனுவில் ரவீந்தரநாத் மறைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருடைய வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறது. அந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வனை நாம் சந்தித்து பேட்டி கண்டோம். அதில் சில கேள்வி பதில்களைத் தொகுத்துள்ளோம்.
2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ரவீந்தரநாத் வெற்றி செல்லாது என்று மிலானி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இதனையடுத்து உயர்நீதிமன்றம் அவருடைய வெற்றி செல்லாது எனவும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் கொடுத்திருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முறைகேடாகத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற ஒரே நபர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்தரநாத் தான். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அத்துமீறி கொள்ளையடித்த பணத்தை வைத்து வெற்றி வாகை சூடியதால் தான் அவருடைய வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கிற்கு நான் சாட்சியாக சென்றேன். அங்கு, இவர்கள் முறைகேடாக பணம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்றும் அதிகாரிகளை மதிக்காமல் அமைச்சர்கள் ஒன்று கூடி தன் இஷ்டத்திற்கு செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கூறினேன். அதுமட்டுமல்லாமல் இந்த தேர்தலில் இவர்கள் பல முறைகேடுகள் நடத்தியிருக்கிறார்கள். அதனால், ரவீந்தரநாத்துடைய வெற்றி செல்லாது என்ற கருத்தையும் முன்வைத்தேன். அதன் அடிப்படையில், இப்பொழுது உயர்நீதிமன்றத்தில் ரவீந்தரநாத்தின் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த தீர்ப்பு காலம் கடந்து வந்தாலும் இதை நான் பாராட்டுகிறேன்.
தேர்தல் நேரத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் இந்த முறைகேடு பற்றி புகார் அளித்தீர்களா?
அந்த சமயத்தில் அனைத்து புகாரையும் கொடுத்தேன். ஆனால், அந்த புகாரை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் அன்றைக்கு அதிகாரிகள் இல்லை. அதன் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரவீந்தரநாத் பதவி விலக வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
சென்னை உயர்நீதிமன்றம் இந்த வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், இவர்கள் உச்சநீதிமன்றம் சென்றால் கூட இந்த வெற்றி செல்லாது என்று தான் கூறுவார்கள். ஒருவேளை அப்படி சொன்னால் மீண்டும் இவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.
மறுதேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
இன்னும் 8 மாத காலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என்ற சூழலில் மறுதேர்தல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.
8 மாதம் கடந்து நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் நீங்கள் களம் காண்பீர்களா?
நாடாளுமன்றத் தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் யார் போட்டியிடக் கூடாது என்பது தலைமை தான் முடிவு செய்யும்.
ஓ.பன்னீர்செல்வத்திற்காக பிரதமர் மோடி நேரடியாக அந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த செல்வாக்கின் அடிப்படையில் தான் ரவீந்தரநாத் வெற்றி பெற்றார் என்று அதிமுகவினர் கூறுகிறார்களே?
அந்த செல்வாக்கில் தான் முறைகேடு நடந்தது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்திருக்கிறது. அந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.