எஸ்.பி.பி.யின் முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்ல பாலசுப்ரமணியம் என்பதாகும். இதன் சுருக்கமே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்றாகி, பின்னர் எஸ்.பி.பி.யாகிவிட்டது. 1946 ஜூன் 4-ல் ஆந்திர மாநில எல்லையோர கிராமமான கொணாடம்பேட்டையில் பிறந்த அவரது அப்பா, சாம்பமூர்த்தி புகழ்பெற்ற ஹரிகதா கலைஞராகத் திகழ்ந்திருக்கிறார். ஊர் ஊராகச் சென்று கதா காலட்சேபத்தை நடத்திவந்த அவரது பாடல்களைக் கேட்டுக் கேட்டுதான், எஸ்.பி.பி., தனது இசையார்வத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். தன் அப்பாவை, இசை குருவாகவும் அவர் ஏற்றுக்கொண்டதால், அப்பா மீது அவருக்கு அலாதியான பக்தி. அதனால், ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனது அப்பா சாம்பமூர்த்திக்கு சிலை ஒன்றையும் வைத்திருக்கிறார் பாலு.
அதேபோல், தான் பிறந்த கிராமமான கொணாடம்பேட்டை மீதும் தீராக் காதல்கொண்ட பாலு, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அங்கே செல்வாராம். இந்தக் கிராமத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில்தான், எஸ்.பி.பி. பெற்றோரின் திருமணம் நடந்ததாம். அதை அந்த கிராமத்துக்காரர்களிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வாராம் பாலு. மேலும், தான் பிறந்த கிராமத்துக்குக் கழிவறை வசதிகளைச் செய்துகொடுத்ததோடு, அக்கிராமப் பிள்ளைகளின் கல்விக்காக பள்ளிக் கூடத்தையும், தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்திருக்கிறாராம் எஸ்.பி.பி. அந்த கிராமம் எஸ்.பி.பி.,யின் அன்பு மழையில் கடைசிவரை நனைந்து பல நலத்திட்ட உதவிகளால் மகிழ்ந்திருக்கிறது. எஸ்.பி.பி. மறைவுச் செய்தியால், இப்போது கொணோடம்பேட்டை கிராமமே சோகம் சூழ்ந்த பகுதியாகக் காட்சியளிக்கிறது.
சின்ன வயதிலிருந்தே எஸ்.பி.பி., அம்மா சகுந்தலாவின் செல்லப்பிள்ளையாம். மகன் காலப்போக்கில் புகழின் உச்சியில் ஏறிக்கொண்டிருந்த நிலையில், மகனின் புகழ்கண்டு அவர் மகிழ்ந்தாலும், மகனுடன் அதிகநேரம் இருக்க முடியவில்லையே என்று கலங்குவாராம். இதனால் பாலு, தான் எங்கிருந்தாலும் அடிக்கடி ஃபோன் போட்டு அம்மாவை விசாரிப்பாரம். வயது முதிர்ந்த நிலையில் மகள் சைலஜாவுடன் ஆந்திர மாநில நெல்லூரில் வசித்துவந்த சகுந்தலா அம்மாள், கடந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதிதான் முதுமை காரணமாக மரணமடைந்தார். அந்த நேரத்தில் லண்டனில் இருந்த எஸ்.பி.பி தகவல் கேள்விப்பட்டதும், தனது அத்தனை நிகழ்சிகளையும் ரத்துசெய்துவிட்டு, நெல்லூருக்குப் பறந்துவந்து, அம்மாவின் உடலைப் பார்த்துக் கண்ணீர் விட்டிருக்கிறார். அம்மா இறந்த ஒன்றரை வருடத்தில் எஸ்.பி.பி.யும் மரணத்தைத் தழுவிவிட்டார்.