‘வாழும் கர்ணன்’ என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைப் புகழ்ந்து மதுரையில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். காரணம் – மதுரை மாவட்டத்தில், கரோனா நோய்க் காலத்தில், மாநகர், புறநகர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு, 68 நாட்களாக, தினமும் மூன்று வேளை உணவளித்து வருகிறாராம்.
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் அப்படித்தான்! சொந்த நிதியிலிருந்து, வறுமையில் வாடும் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, தொடர்ந்து லட்ச லட்சமாக வழங்கி வருகிறார். இதன் நீட்சியாக, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், தலைமைக் கழகப் பேச்சாளர்களான சிவகாசி தீப்பொறி சின்னத்தம்பி, அருப்புக்கோட்டை சரவெடி சம்ஸ்கனி, விருதுநகர் இளந்தளிர் பழனிகுமார், சங்கரன்கோவில் சங்கை கணபதி, தீக்கனல் லட்சுமணன் ஆகியோருக்கு, தனது சொந்த நிதியிலிருந்து, தலா ரூ1 லட்சம் வீதம், மொத்தம் ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருக்கிறார்.
‘கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ, பொதுமக்களோ, எத்தனை பேருக்குத்தான், இப்படி நிதி வழங்கி உதவிட முடியும்? கஷ்டப்படும் மக்கள் எங்கெங்கும் இருக்கிறார்களே? இது தேர்தல் நேரத்து அரசியல் என்றும் விமர்சிக்கப்படுகிறதே?’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பிடம் கேட்டோம்.
“பத்து வருடங்களுக்கு முன், அவர் அமைச்சராவதற்கு முன்பிருந்தே, நலிந்தோருக்கு உதவத்தானே செய்கிறார். தேர்தல் நேரத்து அரசியலென்றால், எதிர்க்கட்சிகளும், தாராளமாக இதைச் செய்ய வேண்டியதுதானே? யார் செய்தால் என்ன? எளியோருக்கு உதவி போய்ச் சேர்ந்தால், மகிழ்ச்சிதானே!
புரட்சித்தலைவரின் பேட்டி ஒன்றை ராஜேந்திரபாலாஜி அடிக்கடி நினைவுகூர்வார். எம்.ஜி.ஆரை அப்போது பேட்டி கண்டபோது, ‘உங்களைப் போல மற்ற நடிகர்கள் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லையே?’ என்பதுதான் கேள்வி. அதற்கு எம்.ஜி.ஆர். “வாரியெல்லாம் நான் வழங்குவது இல்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லோருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கேற்ப கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்?” என்று பேட்டி கண்டவரையே திருப்பிக் கேட்டார்.
‘இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டால் என்னாவது? உங்களுக்குத்தானே இழப்பு? எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையே இல்லையா?’ என்று அமைச்சரிடம் உரிமையுடன் கேட்பவர்கள் உண்டு. அதற்கு அவர் ‘இழப்பா? எனக்கா? கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும், கொடுப்பதைவிட பல மடங்கு திரும்பக் கிடைக்கிறதே?’ என அன்று எம்.ஜி.ஆர். சொன்னதை ‘ரிபீட்’ செய்வார்.
ராஜேந்திரபாலாஜி பாசக்காரர் என்பது பலருக்கும் தெரியாது. தொகுதிக்கு வந்துவிட்டால், காலை மற்றும் இரவு உணவை அம்மா கையால்தான் சாப்பிடுவார். தற்போது, அவருடைய தந்தை தவசிலிங்கமும், தாயார் கிருஷ்ணம்மாளும், கரோனா தொற்றுக்கு ஆளாகி, மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனால், அவர் வீட்டுக்கே செல்வதில்லை. இங்கே தனியார் கெஸ்ட் ஹவுஸில்தான், சாப்பாடு, தூக்கமெல்லாம்.” என்றனர்.
குடும்பப் பாசத்தோடு, தொகுதிப் பாசமும் இருந்துவிட்டால், நல்லதுதானே!