இரண்டாவது முறையாக ஆட்சியமைத்திருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கூட்டிய முதல் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தல்களையும்ஒரே நேரத்தில் நடத்துவதை முன்னிறுத்தும், ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ குறித்த விவாதத்திற்காகத்தான்.
ஒரே தேர்தல் என்பது எப்போது சாத்தியமாகும் என்பது இருக்கட்டும், ‘ஒரே நாடு’ என்பதன் பொருள் என்ன?
இந்திய அரசியல் சாசனம் 1(1)-ன் படி, “India, that is Bharat, shall be a Union of States” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாகும். பல மாநிலங்கள் இணைந்த ஒன்றியம் அல்லது துணைக்கண்டமே இந்தியா என்பதாகும். இந்த மாநிலங்கள் பலவும் வெவ்வேறு தேசிய இனங்களைக் கொண்டவை. அதனை எளிதாக அடையாளப்படுத்தும் வகையில்தான், மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. மொழி வழித் தேசிய அடையாளம் என்பது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கான முகவரியாகும்.
பல மொழிகளை-அதனடிப்படையிலான பலவித பண்பாடுகளை-பல்வேறு வாழ்க்கைநெறிகளைக் கொண்டுள்ள இந்திய ஒன்றியத்தை ஒரே நாடு எனப் பொருள் கொண்டு, அதற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மோடி அரசு முயற்சிப்பது, இந்திய ஒன்றியத்தின் உறுப்புகளான மாநிலங்களின் உரிமைகளை சிதைத்துவிடும். அதன் தொடர்ச்சியாக, கூட்டாட்சித் தத்துவத்தை நோக்கி நகர வேண்டிய ஜனநாயகம் தகர்க்கப்பட்டு, ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ என்பதற்குப் பதிலாக, ‘ஒரே கட்சி- ஒரே தலைவர்’ என்கிற அதிபராட்சி முறையை நோக்கி நாடு தள்ளப்படும்.
அதன் பின்னர் ‘ஒரே மதம்-ஒரே மொழி’ என்ற அடிப்படையில் இந்தியாவின் பன்முகத்தன்மை நொறுக்கப்பட்டு, மாநில உரிமைகளும் பறிபோகும். பா.ஜ.க.வுக்கு செயல்திட்டங்களை வகுத்து தரும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கமும் இதுதான் என்பதால், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகள் ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ என்பதை எதிர்க்கின்றன.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை மக்கள் எளிதில் நம்பக்கூடிய வகையில் தனது செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கெட்டிக்காரத்தனமாக செயல்படக்கூடியது. ராத்திரியோடு ராத்திரியாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தால் கறுப்புப்பணம் அழிந்துவிடும் என நம்பவைத்து, நடுராத்திரியில் பொதுமக்களை ஏ.டி.எம். வாசலில் நிற்க வைத்த சாதுர்யம் அதற்குரியது. பழைய நோட்டுகளை ஒழித்துவிட்டு, புதிய 2000 ரூபாய் தாளை அச்சிட்டால், கறுப்புப்பணம்-கள்ளநோட்டு பெருகாதா என மக்கள் கேட்டபோது, “புதிய நோட்டில் சிப் வைக்கப்பட்டிருக்கும். யார் பதுக்கினாலும் காட்டிக் கொடுத்துவிடும்” என பிரச்சாரம் செய்து மக்களை நம்பவைத்த திறமையும் அதற்கு உண்டு. பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்டிரைக்கில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல், தேசத்தைப் பாதுகாக்க தங்களால்தான் முடியும் என வடமாநிலத்தவரை நம்பவைக்கும் வல்லமையும் அக்கட்சியினருக்கு உண்டு.
இத்தகைய நம்பிக்கைகளை உருவாக்கி, இரண்டாவது முறையாக ஆட்சிக்க வருகின்ற வலிமையும் வியூகமும் பா.ஜ.கவிடம் இருக்கிறது. அதனால்தான், அரசாங்கத்தின் செலவுகளைக் குறைப்பதற்காக ‘ஒரே நாடு- ஒரே தேர்தல்’ என விளக்கம் தருகிறது. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலையும் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்துவதால் மனித ஆற்றல் மிச்சப்படுகிறது என்றும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடைபெறும்போது, கூடுதலாக மனித உழைப்பு வீணாவதுடன், அரசின் மக்கள் நலத் திட்டங்களும் தேர்தலைக் காரணம் காட்டி முடக்கப்படுகின்றன. இவையெல்லாம் மக்களைப் பாதிக்கின்றன என்ற காரணங்களை முன்வைக்கிறது பா.ஜ.க. அதன் உள்நோக்கத்தை அறிந்த எதிர்க்கட்சிகள் பலவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளன.
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது புதிதல்ல. நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952ல் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது. 1957 பொதுத்தேர்தலும் அப்படித்தான். அந்த தேர்தலில், கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு, தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு கேரள கம்யூனிஸ்ட் அரசை அரசியல் சட்டத்தின் 356வது பிரிவின் கீழ் கலைத்ததனால், கேரள சட்டமன்றத்திற்குத் தனியாக ஒரு தேர்தல் நடத்தவேண்டிய சூழல் உருவானது. அது போல பல மாநில அரசுகளும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கலைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, மத்தியிலும் உள்கட்சி சிக்கல்களைத் தீர்க்கவும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோற்கடிக்கப்பட்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, திடீர்த் தேர்தல்கள் நடந்துள்ளன. பா.ஜ.க. ஆட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால்தான், நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல்கள் நடத்த வேண்டிய நிலை உருவானது.
நடந்த தவறுகளை சரிசெய்து, மீண்டும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் என்ன தவறு என்று கேட்கக்கூடும். ஆரம்பகால தேர்தல் சூழல்களும் தற்போதைய சூழல்களும் பெருமளவு மாறிவிட்டன. ஒவ்வொரு மாநிலமும் தனக்கானத் தனித்தன்மையுடன் வளர்ச்சியினை அடைகின்றன. அதற்கேற்ப, அந்தந்த மாநிலத்திலும் மாநிலக் கட்சிகள் உருவாகியுள்ளன. இவை தேசியக் கட்சிகளுக்கு சவாலாக விளங்குகின்றன. இதில் முதலிடம், தமிழ்நாடுதான்.
1967 பொதுத்தேர்தலில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி அந்த மாநிலத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்தது அறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம். அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் மாநிலக்கட்சிகள்தான் ஆட்சி செய்து வருகின்றன. பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிலும் மாநிலக் கட்சிகளின் முதல்வர்களே தற்போது ஆட்சி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் 2016ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இனி, 2021ல் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்துதான் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றால், 2024ஆம் ஆண்டுதான் தேர்தல் நடைபெறும். மாநில அரசின் பதவிக்காலம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கழித்துதான் தேர்தல் என்றால், அதுவரை யாருடைய ஆட்சி நடைபெறும்? இப்போது மறைமுகமாக நடைபெறுகிற ஆளுநர் ஆட்சி, அப்புறம் நேரடியாகவே நடைபெறும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் ஆட்சி, 6 மாத காலத்திற்கு மேல் நீடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆனால், சிக்கனச் செலவு, மனித ஆற்றல் மிச்சம் என்ற பெயரில் இதனைச் செய்வதற்கு மத்திய அரசு தயங்காது. ஒரு வேளை, மத்தியில் உள்ள அரசு, 5 ஆண்டுகளுக்குள் தனது பெரும்பான்மையை இழந்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், மாற்று ஆட்சி அமைக்க முடியாத நிலையில், புதிய தேர்தலை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அப்போது, மாநிலங்களில் பெரும்பான்மையுடன் நடைபெறும் ஆட்சிகளும் கலைக்கப்படுமா? அல்லது மத்தியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்குமா? இந்தக் கேள்விகள் அனைத்தும் ஜனநாயகவாதிகளால் எழுப்பப்படுகின்றன.
ஒரே நாடு-ஒரே தேர்தல் தொடர்பான் முன்மொழிவில், மத்திய அரசு தனது பெரும்பான்மையை இழந்து, குறுகிய அளவிலான ஆட்சிக்காலம் மிச்சமிருந்தால் அடுத்த மக்களவை அமைக்கப்படும் வரையிலும் , அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் உதவியின்கீழ் குடியரசுத் தலைவரே நிறைவேற்றிடக்கூடிய விதத்தில், திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை அல்லது சட்டமன்றம் கலைக்கப்பட்டு, அதன் மிச்சமுள்ள ஆட்சிக்காலம் அதிகமாக இருக்குமானால், புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டு, மிச்சமுள்ள காலத்திற்கு மட்டும் அந்த ஆட்சிக்கு உயிர் இருக்கும் என்று இன்னொரு முன்மொழிவு தெரிவிக்கிறது. முதல் முன்மொழிவு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத குடியரசுத் தலைவரின் கையில் அனைத்து அதிகாரங்களையும் அளிக்கும் நடவடிக்கையை மறைமுகமாக மேற்கொள்கிறது. அடுத்த முன்மொழிவு, 5 ஆண்டுகளில் 3 தேர்தல் என கூடுதல் செலவினத்திற்கே வழி வகுக்கிறது.
அதுமட்டுமின்றி, மத்திய-மாநில அரசுகளின் ஆட்சிக்காலம் பொதுவாக, 5 ஆண்டுகள் என்றால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு 6 ஆண்டு காலத்திற்கு நடைபெறும். மன்னராட்சியின் கீழ் இருந்த காஷ்மீரை சுதந்திர இந்தியாவுடன் இணைத்தபோது அளிக்கப்பட்ட உறுதிமொழிகள்- போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த சிறப்புத் தகுதி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புத் தகுதிகளை ரத்து செய்வதில் தீவிரம் காட்டும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பது தனது செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக அமைந்துவிடும்.
காஷ்மீர் தொடங்கி தமிழ்நாடு வரை அந்தந்த மாநிலத்திற்குரிய பிரச்சினைகள்தான் சட்டமன்றத் தேர்தல்களில் வலிமையாக எதிரொலிக்கும். அது தேசியக் கட்சிகளுக்கு நெருக்கடியை உண்டாக்கும். நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தினால், மாநிலத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம்-பாதுகாப்பு-வலிமையான தலைமை போன்றவை முன்னிறுத்தப்படும். அது தேசியக் கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்பை உருவாக்கும். மாநிலக்கட்சிகளின் செல்வாக்கு படிப்படியாக சரிந்து, காலப்போக்கில் அவை களத்திலிருந்து வெளியேறிவிடும் என்பதுதான் பா.ஜ.க.வின் வியூகம். கழகங்கள் இல்லாத தமிழகம் என கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு முன்புவரை பா.ஜ.க. இதனை முழங்கியது நினைவிருக்கும். அதுபோல காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற முழக்கத்தின் மூலம், ஒரு கட்சி-அதுவே ஆட்சி என்கிற அதிபர் முறைக்கும் பா.ஜ.க. திட்டமிடுகிறது. அதிபர் முறையில், ஜனநாயக உரிமைகள் பறிபோகும். ஆட்சியாளர்கள் தாங்கள் நினைத்தவற்றை எல்லாம் சாதிக்க முனைவார்கள். அதனால்தான் ஜனநாயக சக்திகள் எதிர்க்கின்றன.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “இந்த திட்டம் அடிப்படையில், கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. நாடாளுமன்ற ஜனநாயக முறையின் அடிவேரைப் பாதிக்கும். செயற்கையாக சில முயற்சிகளை செய்து ஒரே நேரத்தில் சட்டப்பேரைவக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சித்தால் அதனை முழுமையாக எதிர்ப்போம்” எனத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த காங்கிரஸ் கட்சி, “நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளைத் திசை திருப்பவே ஒரே தேர்தல் விவகாரத்தை பா.ஜ.க. எடுத்துள்ளது” என்று குற்றம்சாட்டியிருப்பதுடன், குஜராத்தில் 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை 2 நாட்களாக நடத்துவதையும், ஒரே நேரத்தில் நடைபெறவேண்டிய இமாச்சல், குஜராத் சட்டப்பேரவத் தேர்தல்களை தனது வசதிக்கேற்ப தனித்தனியாக நடத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியைப் பெற்றுள்ள தி.மு.க.வும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாற்றுக்கருத்துகளை வலிமையான குரலில் முன்வைக்கக்கூடிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தேர்தல் முறை குறித்து, தி.மு.க. முதன்முதலில் களம் கண்ட 1957ஆம் ஆண்டு தேர்ல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளது.
“இந்திய யூனியனில் மாநிலங்கள் மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்கப்படாமல், பெரும்பாலும் மொழி, கலாச்சார அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் சபையில் பிரதிநிதித்துவம் மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது. இந்த அநீதியின் விளைவாப் பெரிய மாநிலங்களாக விளங்கக்கூடிய வகையில் எண்ணிக்கையில் பெருத்துள்ள சில இனத்தவர், சிறிய மாநிலங்களாக அமைந்துள்ள வேறு இனத்தவர் மீது ஆதிக்கம் செலுத்த இடமேற்படுகிறது. எனவே, மாநிலங்கள் பெரியதோ, சிறியதோ அவை ஒவ்வொன்றுக்கும் ஒரே அளவு பிரதிநிதித்துவ உரிமை அளிக்கப்பட வேண்டும்” என்பதை தேர்தல் அறிக்கையில் அண்ணா வலியுறுத்தினார்.
அவரது கோரிக்கை நிறைவேறி, சமமான அளவில் தொகுதகளின் எண்ணிக்கை இருந்திருந்தால், இந்தத் தேர்தலில் தென்னிந்தியாவில் போதுமான வெற்றி பெறாமல், வடஇந்தியாவில் மட்டுமே வென்று ஆட்சியைப் பிடிப்பது எளிதாகியிருக்காது. அதுமட்டுமின்றி, போட்டியிடும் வேட்பாளர்களில் முதலிடம் பெறுபவர் மட்டுமே வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படும் தேர்தல் முறையினால், மற்ற வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் பயனற்றவையாகி விடுகின்றன. 30% வாக்குகளை பெற்றவர் வென்றவராகவும், அவருக்கு எதிரான மீதமுள்ள 70% வாக்குகளைப் பகிர்ந்து கொண்ட மற்றவர்களுக்குபிரதிநிதித்துவம் கிடைக்காமலும் போவதென்பது, பொதுமக்களின் வாக்குகளின் மதிப்பை ஏளனப்படுத்துகிறது என்ற அடிப்படையில், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையையும் தி.மு.க .பல முறை வலியுறுத்தியுள்ளது. அதாவது, ஒரு கட்சி பெறுகிற வாக்கு சதவீதத்திற்கேற்ப அதற்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அமையவேண்டும் என்பதே விகிதாச்சார பிரதிநிதித்துவம்.
இதனை, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைத்து, பா.ஜ.க. அரசின் அவசியமற்ற தேர்தல் சீர்திருத்த முறையைக் கண்டிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்ட தி.மு.க., தனது எம்.பிக்கள் மூலம் மக்களவையில் இது குறித்துப் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாடாளுமன்றத்தில் ‘தமிழ் வாழ்க’ என்ற தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி எம்.பிக்களின் குரலுக்கே நடுநடுங்கிய மத்திய ஆளுந்தரப்பு, நியாயமான-அவசியப்படுகின்ற தேர்தல் சீர்திருத்த முறை குறித்து பேசப்படும்போது தன் உண்மை முகத்தை நிச்சயம் வெளிப்படுத்தும். அந்த முகம், பா.ஜ.க. நினைக்கும் ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ முறையின் தன்மை எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டமாக அமையும்.