அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடப்பதாக அதிமுக தலைமை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான வேட்புமனு விநியோகம் அதிமுக தலைமைக்கழகத்தில் செய்யப்பட்ட நிலையில், அதைப் பெறுவதற்காக அதிமுகவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஓம்பொடி பிரசாத் சிங் சில நாட்களுக்கு முன்பு கட்சி அலுவலகத்துக்குச் சென்றார். அப்போது அவரிடம் அங்கிருந்த நிர்வாகிகள் வாக்குவாதம் செய்து வெளியே அனுப்பினார்கள். வெளியே வந்த அவரை அங்கிருந்த சிலர் கடுமையாக தாக்கி கட்சி அலுவலகத்துக்கு வெளியே தள்ளினார்கள். இதுதொடர்பாக நாம் அவரிடம் பேசியபோது பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "சம்பவம் நடைபெற்ற அந்த நாளில் நான் விருப்பமனு பெறுவதற்கான தலைமைக் கழகம் சென்றேன். என்னுடன் என் இரண்டு மகன்கள் கூட வந்திருந்தார்கள். ஏனென்றால் விருப்பமனு பெற்று அங்கேயே ஃபாரத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்களையும் அழைத்துச் சென்றேன். அதற்காக பேங்க்கில் இருந்து பணம் கூட எடுத்து வந்திருந்தோம். தலைமைக்கழகத்தில் என் பசங்களைக் கீழே நிற்க வைத்துவிட்டு நான் என்னுடைய லாயரோடு மாடிக்குச் செல்கிறேன்.
அங்கே மகாலிங்கம் சேரில் அமர்ந்திருந்தார். மனோகர் நின்றுகொண்டிருந்தார். நான் மகாலிங்கத்திடம், ‘ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன், எனக்கு விருப்ப மனு தர வேண்டும்’ என்று கேட்டேன். உடனே அவர் சேரிலிருந்து பின்பக்கம் சென்று, கையை மேலும் கீழும் ஆட்டி, ‘உனக்கெல்லாம் தர முடியாது’ என்றார். நான் ‘ஏன் அப்படி சொல்கிறீர்கள், நான் தினமும் தலைமைக்கழகம் வருகிறவன், நீங்கள் என்னவோ முன்பின் தெரியாத ஆள் போல பேசுகிறீர்களே’ என்றேன். ஆனால் நான் சொல்வதை எதையும் அவர்கள் கேட்கும் மனநிலையில் இல்லை. வேட்புமனுவை முன்மொழிய ஆள் வேண்டுமே என்றார்கள். நான் கீழே என்னுடைய பசங்க இருக்கிறார்கள் என்றேன். அவர்கள் அதிமுக உறுப்பினர் அட்டை வைத்துள்ளார்களா என்று கேட்டார்கள். நான் பாக்கெட்டில் இருந்த அவர்கள் இருவரின் உறுப்பினர் அட்டையையும் காட்டினேன். ஆனால் அவர்கள் விருப்பமனு தர ஒத்துக்கொள்ளவில்லை. என்னை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார்கள். வெளியே வந்த என்னிடம் பத்திரிக்கையாளர்கள், ‘என்ன நடந்தது’ என்று கேட்டார்கள். நான் நடந்ததை எல்லாம் கூறினேன். இந்தக் கட்சி அலுவலகத்துக்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள்.
எம்ஜிஆர் மாளிகை என்றால் என்ன சார், மொட்டையா இருக்குல்ல சார். பாரத ரத்னா புரட்சித் தலைவர் மாளிகை என்று வைத்திருக்க வேண்டாமா சார், இதுதான் தலைவரைப் பெருமைப்படுத்தும் முறையா? பிரதமர் மோடி இலங்கைக்குச் சென்று தலைவரைப் பற்றி பேசியிருக்கிறார். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவருடைய பெயரை வைத்துள்ளார்கள். ஆனால் அவர் வாழ்ந்த கட்சி தலைமையத்துக்கு அவரின் பெயரை முழுமையாக வைக்கவில்லை. இதை அதிமுக தொண்டன் எப்படி ஏற்றுக்கொள்வான். நிச்சயம் இதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கட்டடத்தை யார் கொடுத்தது, ஜானகி அம்மாள். ஆனால் ஒரு ஸ்டாம்ப் சைஸ்க்கு அவருடைய புகைப்படம் தலைமைக்கழகத்தில் எங்கேயாவது இருக்கிறதா என்றால், எங்கேயும் இல்லை. நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து சொல்லிவருகிறேன். ஜானகி அம்மாள் புகைப்படத்தை தலைமைக்கழகத்தில் வைக்க வேண்டும் என்று, ஆனால் அதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. இதனால் நானே தலைமைக்கழகத்தில் எங்கே பெயர்வைக்க வேண்டும், அது எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்று தயாரித்து தலைமைக்கழகத்துக்கு அனுப்பினேன், கட்சியின் முக்கியமானவர்கள் அனைவருக்கும் அனுப்பினேன். ஆனால் அதுகுறித்து ஒருவரும் அக்கறை காட்டவில்லை.
அவர்கள் செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை, என்னிடம் 5 லட்சம் பணம் கொடுத்தால் நானே அருமையாக செய்துவிடுவேன். சரியில்லை என்றால் 10 லட்சம் நானே தலைமைக்கழகத்துக்கு தருகிறேன். இதற்கு அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? இதைக்கூட செய்ய தயாராக இல்லாத அவர்கள் கட்சியை எப்படி வளர்ப்பார்கள் என்று நம்புவது. 250க்கும் மேற்பட்டவர்கள் இவர்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வர வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக கூறுகிறார்கள். இவர்கள் மட்டும்தான் அதிமுகவா? கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை அதிமுகவினர் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் தலைமை பதவிக்கு வரக் கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. முதலில் இந்த தேர்தல் செல்லுமா என்றால் நிச்சயம் செல்லாது. அவசர கதியில் நடத்தப்பட்டு அவர்களையும், தொண்டர்களையும் இவர்கள் சேர்த்தே ஏமாற்றுகிறார்கள். எனவே இவர்கள் நிச்சயம் அதற்கான பலன்களை அடைவார்கள். இந்தக் கட்சி அவர்களின் தலைமையில் இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் என்னைப் போன்றவர்களின் மனதில் ஆறாத வடுவாய் இருக்கிறது" என்றார்.