கர்நாடக சினிமாவான சான்டல்வுட்டின் சகலகலா வல்லவராகக் கோலோச்சியவர் ராஜ்குமார். இவரின் மனைவி பார்வதம்மா. இவர்களுக்கு, சிவராஜ்குமார், ராகவேந்திரா, புனீத் எனும் மூன்று மகன்களும் லக்ஷ்மி, பூர்ணிமா எனும் இரண்டு மகள்களும் உண்டு. இதில், மூத்த மகன் சிவராஜ்குமாரும் கடைசி மகன் புனீத் ராஜ்குமாரும், கன்னட சினிமாவின் கலர்ஃபுல் நட்சத்திரங்கள். மூத்தவர் ஹீரோவாக அறிமுகமாகி புகழ்பெற, கடைக்குட்டி புனீத்தோ அப்பாவுடனே குழந்தை நட்சத்திரமாக நடித்து, அப்ளாஸ் அள்ளினார். இப்படி, சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் அப்பாவுடன் நடித்து கன்னட சினிமாவின் கவனத்தை தன்பக்கம் திருப்பினார் அப்பு. ஆம், 'பவர் ஸ்டார்', 'சூப்பர்ஸ்டார்' வரிசையில், புனீத் ராஜ்குமாருக்கு, அவரது ரசிகர்கள் வைத்த செல்லப் பெயர் 'அப்பு'.
1976-ம் ஆண்டு, இயக்குனர் வி சோமசேகர் இயக்கிய த்ரில்லர் படமான, 'பிரேமதா கனிகே' படத்தில், தனது அப்பா ராஜ்குமாருடன் சான்டல்வுட்டுக்கு அறிமுகமானார் அப்பு. அப்போது, அவர் 6 மாத கைக்குழந்தை. அதேபோல, தனது 9 ஆவது வயதில், 'பெட்டடா ஹுவு' எனும் படத்தில் நடித்ததற்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் வென்றார். தேசிய விருது மட்டுமல்லாமல், பல்வேறு மாநில விருதுகளையும், குழந்தையாக இருக்கும்போதே வாரிக்குவித்துள்ளார் புனீத். பிறகு, 2002ம் ஆண்டு, 'அப்பு' படத்தின் மூலம், கன்னட சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார் புனீத். இந்தப் படம் எதிர்பார்த்ததைவிட சூப்பர்ஹிட் ஆனது. இதனால், இந்தப் படத்தின் பெயரை வைத்தே அவரை செல்லமாக அழைக்கத் தொடங்கினர் அவரின் ரசிகர்கள். அன்றிலிருந்து அவர் 'அப்பு'வாக கன்னட மனங்களை வசீகரிக்கத் தொடங்கினார்.
வந்த படங்களை எல்லாம் வளைத்துப்போட்டு நடிப்பதில், புனீத்துக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது இல்லை. பார்த்துப் பார்த்துப் கதைகளை தேர்வு செய்தார். அப்படி அவர் தேர்வுசெய்து நடித்த, 'அப்பு', 'ராம்','ஜாக்கி', 'வம்சி', 'மயூரா' போன்ற பல படங்கள், கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்ட 'கில்லி' படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டபோது, அதில் அட்டகாசமாக நடித்துக் கொடுத்தவர் புனீத். அதைப்போலவே, இவரின் முதல் படமான, 'அப்பு' தான், தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான 'தம்' திரைப்படம். இயக்குனர் சமுத்திரக்கனியுடன் நல்ல நெருக்கத்தில் இருந்த புனீத், 'நாடோடிகள்', 'போராளி' போன்ற படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்துள்ளார். தமிழின் பல முக்கிய சினிமா நட்சத்திரங்களுடன் தொடர்பில் இருந்த புனீத், தமிழ் சினிமாவின் மீது தீவிர காதல் கொண்டவர்.
மிகச் சிறந்த நடிகரான புனீத் ராஜ்குமார், நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் 'அசால்டாக ஸ்கோர்' செய்பவர். நடிப்பைத் தாண்டி அவரது டான்ஸுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கடந்த 1999ம் ஆண்டு புனீத் ராஜ்குமாருக்கு, அஷ்வினி ரேவந்த் என்பவருடன், திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். மிக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது இவர்களின் இல்லற வாழ்வு. கடைசியாக, புனித் நடிப்பில், 'யுவரத்னா' என்ற படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், 'துவித்வா', 'ஜேம்ஸ்', ஆகிய இரண்டு படங்கள், புனீத் ராஜ்குமார் நடிப்பில், ரிலீசுக்கு தயாராகவுள்ளன.
இந்த நிலையில்தான், 28.10.2021 அன்று இரவு முதல் புனீத்துக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. ஆனால், அதைப் பொருட்படுத்தாத புனீத், அடுத்தநாளான 29.10.2021 காலை, ஜிம்முக்கு வொர்க்கவுட் செய்யச் சென்றார். இதனால், புனீத்தின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவரின் குடும்ப மருத்துவமனையான சூர்யாவில், புனீத் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், தாமதமாக வந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கையை விரித்தது. இதையடுத்து, கர்நாடகாவில் பதற்றம் பற்றியது.
பாரம்பரிய சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், தன்னைச் சந்திக்க வரும் சாமானியர்களுக்கும் உரிய மரியாதை அளித்துப் பேசக்கூடியவர் புனீத் என அவரின் பெருமைகளைச் சொல்லி வெடித்து அழுதனர் அவரது ரசிகர்கள். இன்னும் சிலர், அவரது கண்களைப் பார்க்கவேண்டும் என நாங்கள் தவம் இருப்போம் என்பதை உணர்ந்து, கண்தானம் செய்துவிட்டுச் சென்றுள்ளார் எங்கள் அப்பு எனக் குமுறினர். தந்தையைப் போலவே கன்னட சினிமாவின் ஜாம்பவானாக வலம்வந்த புனீத்தின் மறைவு பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.
அப்புவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!