15 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. 1996ல் நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்ற போதுமான ஆதரவு இல்லாததால் வீராவேசமாக உரையாற்றிய வாஜ்பாய் 13 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். 1999ல் காங்கிரஸும், அதிமுகவும் சேர்ந்து வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவர் ஆட்சியை இழந்தார்.
அதற்குப்பிறகு மறுபடியும் 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. அந்த மக்களவையில் பாஜக வெறும் 182 இடங்களுடன் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து மொத்தம் 270 உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசு அமைத்திருந்தது. 114 உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்த காங்கிரஸ் கொண்டுவந்த தீர்மானம் 312க்கு 186 என்ற வாக்கு கணக்கில் தோல்வியடைந்தது. மீதமுள்ள உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தனர். அதாவது, வாஜ்பாய் தனது ஆட்சியின் கடைசி ஆண்டில் சந்தித்த நம்பி்க்கையில்லா தீர்மானத்தை, பதவியேற்றபோது இல்லாத அளவுக்கு கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவோடு முறியடித்திருந்தார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக தனிப்பெரும்பான்மை ஆதரவுடன், அதாவது 282 பேர் ஆதரவுடனும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து 314 பேர் ஆதரவுடன் மோடி தலைமையில் ஆட்சியை அமைத்தது. ஆனால், இப்போது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளும் மோடி அரசின் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொண்டாலே, மோடியின் லட்சணம் தெரிந்துவிடும். ஆம், சொந்தக் கட்சியின் பலம் 282 என்று இருந்ததை கடந்த நான்கு ஆண்டுகளில் சபாநாயகரையும் சேர்த்து 272 ஆக்கியிருக்கிறார். இந்த எண்ணிக்கையிலும் கீர்த்தி ஆசாத் எம்.பி.யை பாஜக சஸ்பெண்ட் செய்துள்ளது.
சத்ருகன் சின்ஹா எம்.பி.யோ பாஜகவையும் மோடியையும் தினமும் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் லாலு கட்சியுடன் மிக நெருக்கமாக இருக்கிறார். ஆக, பாஜகவின் இன்றைய ஒரிஜினல் பலம் சபாநாயகரைச் சேர்க்காமல் 269 தான். இவர்களுடன் நியமன உறுப்பினர்கள் 2 பேர் இருக்கிறார்கள். இதுபோக, கூட்டணிக் கட்சிகளில் தெலுங்குதேசம், சிவசேனா, பாமக ஆகியவை வெளியேறிவிட்டன. அதாவது, ஆட்சி ஏற்கும்போது இருந்த பலத்தை சொந்த கட்சியிலும், கூட்டணி ரீதியாகவும் மோடி குறைத்திருக்கிறார்.
இந்நிலையில்தான், தெலுங்குதேசமும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் மோடி அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டுவந்திருக்கிற நம்பிக்கையில்லாத் தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 2014ல் மோடியை மிகப்பெரிய பிம்பமாக உருவாக்கி பாஜக பெற்ற வெற்றி ஒரு மாயை என்பதும், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால்தான் பாஜக வெறும் 31 சதவீத வாக்குகளை மட்டும் பெற்றிருந்தாலும், இவ்வளவு அதிகமான இடங்களைப் பெற முடிந்தது என்பதும் அம்பலமாகி இருக்கிறது.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று சொல்லமுடியாது. ஆனால், மோடியின் ஆளுமைத் திறன் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு புரியவைக்க உதவும். மோடி ஒரு வெற்றுவேட்டு, வாய்ச்சவடால் பேர்வழி, எதிர்க்கட்சிகளுடனோ, பத்திரிகைகளுடனோ, காட்சி ஊடகங்களுடனோ விவாதிக்கிற அறிவே இல்லாதவர். எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் எதிர்க்கட்சிகளை திட்டுவதையே தனது திறமை என்று நினைப்பவர். மோடியின் இந்த நிஜத் தோற்றத்தை, மக்களவையில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த இந்தத் தீர்மானம் உதவியாக இருக்கும். மோடி தனக்கு எதிராக இப்படி ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதிக்கப்படுவதையே விரும்பவில்லை. இருந்தாலும், எப்படியும் வெற்றிபெற்று, இதையும் தனது சாதனையாக காட்டலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆம், அதனால்தான் முதல்நாளிலேயே தீர்மானத்தை எடுத்துக்கொள்ள சபாநாயகர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம், எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு வாய்ப்பு. பாஜகவை எத்தனைக் கட்சிகள் பகிரங்கமாக எதிர்க்க முன்வருகின்றன. எத்தனை கட்சிகள் வாக்களிக்காமல் தவிர்த்து இரட்டை வேடம் போடப் போகின்றன என்பதையெல்லாம் அறிந்துகொள்ள முடியும். எப்படியோ இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பவர்களில் எத்தனை கட்சிகள் 2019 தேர்தலில் அமையப்போகிற மெகா கூட்டணியில் இணைந்து போட்டியிட தயாராக இருக்கின்றன என்பதை அறியமுடியும். அந்த வகையில் நாளைய நம்பிக்கையில்லா தீர்மானத்தை நல்லதொரு வாய்ப்பாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.