ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய், பவன், அக்ஷய் சிங்கிற்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லி திஹார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் இன்று (20/03/2020) காலை 05.30 மணிக்கு நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர்.
இதை மாணவியின் பெற்றோர் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். தண்டனை தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும், நிச்சயம் நிர்பயாவின் ஆத்மா சாந்தியடையும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த குற்றவாளிகளின் பின்னணி என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
முகேஷ் சிங்:
இவர் தான் சம்பவம் நிகழ்ந்த பேருந்தின் கிளீனராகப் பணியாற்றியவர். அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தபோது, அவரையும், அவரது ஆண் நண்பரையும் இரும்புக் கம்பியால் தாக்கியவர். "இரவு நேரத்தில் அந்தப் பெண் (நிர்பயா) தனது நண்பருடன் பேருந்தில் வந்தார். அவர் எங்களை ஈர்த்ததால் நாங்கள் அத்துமீறினோம்" என்று 2015- ஆம் ஆண்டு பிபிசி செய்தியாளர் நேர்காணல் எடுத்தபோது முகேஷ் சிங் தெரிவித்தார்.
அக்ஷய் தாக்கூர்:
அக்ஷய் தாக்கூர் பீகார் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிப் படிப்பை முடித்தவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உண்டு. மூன்று சகோதரர்களில் இளையவர், கடைசி நேரத்தில் தண்டனையைத் தள்ளிப்போட இவரது மனைவி தான் விவாகரத்து கோரினார்.
வினய் சர்மா:
'ஜிம்' பயிற்சியாளராக இருந்த சர்மா, மற்ற 4 பேர் நிர்பயாவை பலாத்காரம் செய்தபோது, பேருந்தை ஓட்டியவன். தண்டனை பெற்ற ஐந்து பேரில், இவன் மட்டுமே பள்ளிக் கல்வி கற்றவர், இவருக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் தெரியும்.
பவன் குப்தா:
பழ விற்பனையாளரான பவன் குப்தா, நான்கு குற்றவாளிகளில் இளையவர், திஹார் சிறைக்குள் இருந்து பட்டம் பெற்றவர். இவரும் சேர்ந்து தான் நிர்பயாவையும், அவரது நண்பரையும் இரும்பு கம்பியால் தாக்கினர்.
ராம் சிங்:
முகேஷின் மூத்த சகோதரர் ராம் சிங் அந்த பேருந்தின் ஓட்டுனர். இவன் தான் நிர்பயாவைக் கொடூரமாக தாக்கியவன். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி. ஆனால், ஏற்கனவே 2013- ஆம் ஆண்டு இவன் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.