Skip to main content

சத்தியமாக அந்தம்மாவை கொலை செய்யுற எண்ணமே எனக்கு இல்லை...

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு பின்னர் வருந்தும் குற்றவாளிகளில் லேட்டஸ்டாக இணைந்திருக்கின்றான் நெல்லையின் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலை யின் சூத்ரதாரியான கார்த்திகேயன். இவன் வருந்துவது ஒட்டுமொத்தக் கொலைகளுக்காக அல்ல... எந்த விவகாரமும் தெரியாத அப்பாவி வேலைக்காரப் பெண் மாரியம்மாளைக் கொன்றதற்கு.

 

nellai



பத்து வருசங்களுக்கு முன்பே நோயில் மாரியம்மாளின் புருஷன் இறந்துட்டார். வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய மூணு பொண்ணுகளையும் வளர்த்து ஆளாக்கணுமே? அதனால் பல வீடுகளிலும் வேலை செய்ய ஆரம்பித்தாள். தான் கஷ்டப்பாட்டாலும், தான் படிக்காத படிப்பை தன்னுடைய புள்ளைளுக்கு கொடுக்கணும்ங்கிற ஆசையில் பாளையங்கோட்டை சாரா டக்கர் பள்ளிக்கு அனுப்பினாள். ரூ.3 ஆயிரம் வீட்டு வாடகை, புள்ளைக படிப்பு செலவு இதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகளில் வேலை பார்த்து வந்தார். இப்ப குத்துப்பட்டு இறந்து போன வீட்டில் அவர் வேலை பார்க்கலை. அவ மக வீட்டில்தான் வேலை பார்த்து வந்தா மாரியம்மாள். மேயர் வீட்டில் சாவி வாங்கி அந்த வீட்டிற்குச் சென்று வேலை பார்ப்பது தான் இவளுடைய வழக்கமான வேலை. ஆனால் விதி இவளை இப்படியாக்கிவிட்டது'' என தன்னுடைய மகளைப் பற்றி கூறுகிறார் தாயார் வசந்தா.

 

nellai



சார்.... எம் புள்ளையை அவம் ஏன் கொன்னான்னு நிக்க வைச்சு கேள்விக் கேட்கணும்? அப்பத்தான் எங்க மனசு ஆறும்.! எங்க மனக்குறைய தீர்க்க ஏற்பாடு செய்யுங்களேன்'' என தங்களது மனக்குறையை நெல்லை காவல்துறைக்கு கோரிக்கையாக வைத்தது கொலையுண்ட பணிப்பெண் மாரியம்மாள் தரப்பு. இதை செய்யலாமா? செய்யக்கூடாதா? என ஆரம்பத் தில் விவாதித்த காவல்துறை மனிதாபிமான அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. செவ்வாய்க்கிழமையன்று கார்த்திகேயனிடமிருந்து வாக்குமூலம் பெற்ற காவல்துறை தனிப்படையினர், வாக்குமூலத்திற்கு பின்னர் கொலை நடந்த முன்னாள் மேயர் வீடு, கக்கன் நகர் பகுதி ஆகிய இடங்களுக்கு கார்த்திகேயனை அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

 

nellai



அதன் பின்னர் நீதிபதியிடம் ஆஜர் படுத்துமுன், மாரியம்மாள் உறவினர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். முன்னதாக கொலையுண்ட பணிப்பெண் மாரியம்மாளின் அம்மா வசந்தா, அண்ணன் குமார் மற்றும் அண்ணி கோலம் மாள் உட்பட அனை வரையும் வரவழைத்து அங்கேயே மறைவாய் காத்திருக்க வைத்திருந்தது.


திரைமறைவில் இருப்பவர்களுக்கு தெரியவேண்டுமென்பதற் காகவே, "" உனக்கும் மேயருக்கும் தானே பிரச்சனை..? அப்புறம் ஏன்.? அந்த வேலைக்காரப் பெண்ணை கொன்றாய்..?'' எனக் கேட்டதற்கு, ""சத்தியமாக அந்தம்மாவை கொலை செய்யுற எண்ணமே எனக்கு இல்லை. கதவை திறந்து வந்த மாரியம்மா, ரெண்டுபேர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டதும் அழுது கத்தத் தொடங் கினார். "ஓடிப் போயிடு.... ஓடிப் போயிடு'ன்னு கோபமாய் கத்தியும் மாரியம்மாள் கிளம்பலை. வேற வழியில்லாமல், வெளியில் கத்திக் கூப்பாடுப் போட்டு நம்மளை மாட்டிவிட்டுடுவாளோங்கிற பயத்தில் அந்தம்மாவையும் இழுத்து தாக்கி குத்த வேண்டியதாச்சு. அப்பக் கூட அந்தம்மா, "எனக்கு மூனு புள்ளைக இருக்கு... கொன்னுடாதே விட்டுடு'ன்னுச்சு. புத்தி கேட்கலை. அது ஆம்பளை புள்ளைகளாக இருக்கும் பிழைச்சுக்கும்னு குத்திக் கொன்னுட்டேன். பிறகு தான் தெரிஞ்சது. அந்தம்மாவுக்கு அத்தனையும் பொம்பளப்புள்ளைகன்னு... அது தப்புதாங்க'' எனக் கூறியபடி முகத்தைப் பொத்தி அழுக ஆரம்பித்திருக்கின்றான்.

அவனைப் பார்த்ததும் ஆத்திரம் வந்துச்சு. ஆனா பிள்ளைங்களை மனசுல வச்சிதான் அமைதியா வந்துட்டேன்'' என வேதனையோடு மாரியம்மாளின் அண்ணன் குமார் பேசினார். மாரியம்மாளின் அண்ணி கோலம்மாளோ, "கொலை செய்துட்டு அதற்குக் காரணம் சொல்றான். இருந்தாலும் அமைதியா திரும்பிட்டோம். ஆனாலும், அவனுக்கு வெளியவே வரமுடியாதபடி சரியான தண்டனை நீதிமன்றம் கொடுக்கணும்'' என்கின்றார். கல் நெஞ்சையும் கரைக்கும் இந்தச் சம்பவங்கள் கண்ணீருடன் கடந்தன.