Skip to main content

பல அரசியல்வாதிகளின் சப்போர்ட்டில் இருக்கிறேன்... எதையும் புடுங்க முடியாது..! -மிரட்டும் பெண் அதிகாரி!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

dddd

 

தொடர்ச்சியாக நடைபெறும் அவர்களின் போராட்டம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள "ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட'த்தின் கீழ் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், வத்தலகுண்டு, குஜிலியம்பாறை, சாணார்பட்டி உள்பட 15 ஊர்களில் வட்டார அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது.


திண்டுக்கல் மாநகரில் உள்ள "குழந்தைகள் வளர்ச்சித் திட்ட' அலுவலகத்தில் அதிகாரியாக பூங்கோதை செயல்பட்டு வருகிறார் இவரின் கட்டுப்பாட்டில் உள்ள 114 அங்கன்வாடி மையங்களில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் (டீச்சர் மற்றும் ஆயாக்கள்) பணி புரிந்து வருகிறார்கள். இவர்களைத் தரக் குறைவாக பேசி திருட்டுப் பட்டம் சுமத்தி கிண்டல் செய்வதன் மூலம் பல பெண் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதுடன் மட்டுமல்லாமல், தற்கொலைக்கு முயற்சி செய்து வருகிறார்கள். இப்படி சர்வாதிகாரி போக்கை கடைப் பிடித்து வரும் அதிகாரியான பூங்கோதையை கண்டித்துதான் கடந்த சில மாதங்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியும்கூட மேலதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. டென்ஷன் அடைந்த சங்கத்தினர் கடந்த 16-ஆம் தேதி மாவட்ட அளவில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்களை திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர்

 

இது சம்பந்தமாக ஆர்ப்பாட் டத்தில் குதித்த அங்கன்வாடி ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது.... ""ஏற்கனவே இந்த சி.டி.பி.ஒ. பூங்கோதை, குஜிலியம்பாறையில் இருந்தபோதே இப்படி செயல்பட்டதால்தான், இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கும் அதே நிலைதான். முதல்வரின் உத்தரவை மீறி கொரோனா காலத்தில் மையங்களை திறந்து உட்காரச் சொல்லுகிறார். வீடுகளில் கொடுக்கும் சத்துமாவை ஆய்வு செய்வதில் தவறில்லை. ஆனால், மாவு கொடுக்கப்பட்டு இரண்டு நாள் கழித்து ஆய்வு செய்யப்போகிறார் அப்போது வீட்டில் இருப்பவர்கள் அதை பயன்படுத்தியிருப்பார்கள் அது தெரியாமல் குறைத்துக் கொடுத்தார்களா? இதைக் கொடுத்தது பெரிய திருடியா? சின்ன திருடியா? என்று பேசி எங்கள் மீது திருட்டு பட்டம் சுமத்தி வருகிறார்.

 

அசோக்நகர் மையத்திலிருந்த டீச்சர் கண்மணி அப்பகுதியில் சத்துமாவு கொடுத்திருக்கிறார் அதை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது தெரியாமல் ஆய்வு என்ற பெயரில் அந்த மாவை வாங்கி அருகே உள்ள பலசரக்குக்கடையில் வைத்து எடை போட்டிருக்கிறார். அது குறைந்திருக்கவும், அந்த இடத்திலேயே கண்மணியை வாய்க்கு வந்தபடி பேசி திட்டியதுடன் மட்டுமல்லாமல் மெமோவும் கொடுத்துவிட்டார்.

 

அனைத்து மையங்களிலும் எலி நடமாட்டம் உள்ள நிலையில், குமரன் தெரு மையத்தில் எலிப்புழுக்கை இருந்ததாக கூறி ஊழியர் நாகஜோதி உதவியாளர் ஜோதி இருவரையும் சஸ்பெண்ட் செய்து விட்டார். பேகம்பூர் மையத்தில் பணி புரிந்து வந்த பரமேஸ்வரி மையத்தை சுத்தப்படுத்துவதற்காக அங்கிருந்த மாவை எடுத்து பக்கத்து வீட்டில் வைத்து விட்டு சுத்தப்படுத்தியபோது, ஆய்வுக்கு வந்த அந்தம்மா, மாவை எடுத்து மறைத்து வைத்திருக்கிறாய் என்று கூறி வாய்க்கு வந்தபடி ரோட்டில் நின்று பேசியிருக்கிறார் அந்த அவமானம் தாங்காமல் பரமேஸ்வரி மருந்து குடித்து விட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர். டீச்சர் மகாலட்சுமி இந்தம்மாவின் டார்ச்சரால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு, ஐந்து மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். லீவு கொடுப்பதில்லை. மையங்களில் பாத்ரூம் வசதிகளை ஏற்படுத்துவதில்லை. இதை யெல்லாம் கண்டித்து, மாவட்ட சங்கத்தோடு மாநில சங்கமும் இணைந்து போராடியும் இன்னும் எங்களுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை'' என்று கூறினார்கள்

 

dddd

 

""நாங்கள் போராட்டம் நடத்தினால் அதற்கு அந்த அம்மா, "என்னை யாரும் மயிரை கூட புடுங்க முடியாது நான் பல அரசியல்வாதிகளின் சப்போர்ட்டில் இருக்கிறேன்' என்று வெளிப் படையாகவே ஊழியர்களிடம் கூறிவருகிறார். இதைப்பற்றி மாவட்ட திட்ட அதிகாரியான (டஞ) பூங்கொடியிடம் முறையிட்டும்கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுத்ததே இந்த பூங்கோதைதானாம். தற்போது மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம் அதோடு தமிழக முதல்வர் மற்றும் எங்க அமைச்சர், தலைமை செயலாளர், இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் வரை புகார் மனு அனுப்பியிருக்கிறோம். டிரான்ஸ்பர் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில சங்கத்தின் அனுமதியோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்து வோம்'' என்றார் அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவரான தமிழ்ச்செல்வி

 

இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரியான (CDPO) பூங்கோதையிடம் கேட்ட போது..... ""அரசு எனக்கு என்ன பணிகள் சொல்லியிருக்கிறதோ? அந்தப் பணிகளைத்தான் செய்து வருகிறேன். அதனாலதான் அங்கன்வாடி மையங்கள் மற்றும் வீடுகளில் ஆய்வு செய்தும் வருகிறேன். மற்றபடி அவர்களெல்லாம் பொய்யான குற்றச்சாட்டை என் மீது பரப்பி வருகிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்