புதிய பார்வை ஆசிரியரும், வி.கே.சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் காலமானார்.
நடராஜன் மறைவு குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய நாஞ்சில் சம்பத்,
ஆதிக்க இந்தியை எதிர்க்கின்ற 65ல் மொழிப்போர் களத்தில் முந்தி நின்றவர். பெரியார், அண்ணா லட்சியங்களை உள்வாங்கி வளர்ந்தவர். டாக்டர் கலைஞர் தலைமையில் மணவிழா கண்டவர். அண்ணாவின் படைப்புகளை பதிப்பித்து வெளியிட்டவர். இதழ் உலகத்தில் புதிய பார்வையையும், தமிழ் அரசையும் தந்து வாசகர்களுக்கு புதிய வாசலை திறந்து வைத்தவர்.
தமிழ் ஈழ காதல் கொண்டு சர்வதேச அரங்குகளில் தமிழ் ஈழ நியாயத்தை ஆங்கிலத்தில் எடுத்துரைத்தவர். நாலாவது தமிழ் ஈழப்போர் முடிந்ததற்கு பிறகு ஈகம் செய்த தமிழ் ஈழ தியாகிகளை நினைவு கூறுவதற்கு முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட ராஜராஜசோழன் இவர். சோழவளநாடு தமிழ் இனத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் நன்கொடையாக தந்த நடராஜன் விடைபெற்றார். கண்கள் குளமாகின்றன. கவலை பிடரியை பிடித்து உண்டுகிறது. சாணக்கியன் ஒருவன் சாம்பலாகப்போகிறான். இப்படி ஒரு ஆளுமையை இனி நாங்கள் என்றைக்கு காணமுடியும். எங்கள் சிந்தை கவர்ந்த சின்னம்மாவிற்கும், நடராஜனை இழந்து வாடுகிற அவரது சொந்தங்களுக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
நேரில் அஞ்சலி செலுத்த செல்கிறீர்களா?
சின்னம்மாவுக்காக காத்திருக்கிறோம். அவர் வந்தவுடன் அஞ்சலி செலுத்த செல்வோம். இவ்வாறு கூறினார்.