எட்டுவழிச் சாலை என்ற கார்பரேட்டுகளுக்கான திட்டத்தை அறிவித்த நாள் முதலே விவசாயிகள் கடுமையாக எதிர்த்துப் போராடினார்கள். தங்கள் ஊனோடும் உயிரோடும் கலந்த விளைநிலங்களையும், தோப்புகளையும் கண்முன்னே பறிக்கும் எடப்பாடி மற்றும் மோடி அரசுகளின் அராஜகத்தை எதிர்த்து அழுது புலம்பினார்கள்.
நிலத்தை மட்டுமல்ல, பல நூற்றுக்கணக்கான கிராமங்களையே விழுங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் முயற்சியிலும் தொழிலதிபர்களின் விஷம் கக்கும் தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்து பாதை வளைந்து சென்றது.
விவசாயிகளின் எதிர்ப்புக் குரலை நசுக்கும் வகையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டது. 8 வழிச்சாலை என்று பேசுவோரின் குரல்வளை நெறிக்கப்பட்டது.
பரிதவிக்கும் விவசாயிகளின் குரலை எப்பவும்போலவே நக்கீரன் ஓங்கி ஒலித்தது. ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் எவன் கேட்டான் எட்டுவழிச்சாலை என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். நக்கீரன் மட்டுமின்றி சன் நியூஸ் தொலைக்காட்சியும் விவசாயிகளின் அவலத்தை உலகம் முழுவதும் கொண்டுசெல்வதில் பங்கேற்றது.
இதோ, ஒட்டுமொத்த விவசாயிகளின் குரலுக்கு நீதி கிடைத்திருக்கிறது. 8 வழிச்சாலை திட்டத்துக்கான அரசின் அறிவிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தத் திட்டம் குறித்து மக்கள் கருத்தறிய வேண்டிய அவசியமில்லை என்று அரசு ஆவணங்களில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ரத்து செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், குரலற்றவர்களின் குரலாகவும் என்றும் நக்கீரன் களத்தில் நிற்கும் என்ற உறுதியையும், யாரும் வெளியிடத் தயங்கும் விஷயங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வதில் தயங்கவே தயங்காது என்றும் நெஞ்சம் நிமிர்த்தி சொல்வதில் நக்கீரன் பெருமை கொள்கிறது.