ராஜ்யசபா இடங்களைக் கைப்பற்ற அதிமுக, திமுக கட்சிகளில் சீனியர்கள் பலரும் கச்சைக்கட்டும் நிலையில் சாதி ரீதியாக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்கிற குரல்களும் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது! அதே சமயம், அரசியலில் பங்குபெறாமல் சமூக அமைப்பாக இயங்கும் செயல்பட்டு வரும் ’ சென்னை தெஷ்ணமாற நாடார் சங்கம் ‘இரு கட்சிகளுக்கும் கோரிக்கை வைத்து பரபரப்பை கிளப்பியிருகிறது.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் 26-ந்தேதி நடக்கிறது. ஆறு இடங்களுக்கு 6-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் தேர்தல் நடக்கும். இல்லையேல் போட்டியின்றி 6 பேர் அறிவிக்கப்பட்டு விடுவார்கள். இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற மார்ச் 6-ந்தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடக்கிறது. இதனால் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்ய இரு கட்சிகளிலும் ரகசிய விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ‘ தமிழகத்தில் இரண்டாவது பெரும்பான்மை சமூகமான நாடார்களுக்கு நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் ‘ என சென்னை தெஷ்ணமாற நாடார் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருப்பதுடன், ’ கொடுக்க மறுத்தால் வருகின்ற 2021-சட்டமன்றத் தேர்தலில் இந்த கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம் ‘ என எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள்.
தங்களின் இந்த கோரிக்கையை போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், இவர்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் நாடார், கிராமணி, சாணார், மூப்பர் ஆகிய சமூக உறவுகளையும் அணி திரட்டி வருகின்றனர்.
நாடார்களின் இந்த கோரிக்கை போஸ்டர்களை அறிந்த தமிழக உளவுத்துறை, இதனை முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.