
வெறும் பதினான்கு படங்களில் மட்டுமே நடித்து பெரும் புகழ் சேர்த்துவிட முடியுமா? அதுவும் முதல் சூப்பர் ஸ்டார் என்ற முத்திரை பதித்துவிட முடியுமா? அதிலும், எவர்கிரீன் சூப்பர் ஸ்டாராக திகழ முடியுமா? எல்லாம் முடியும் என்று அடித்துச்சொல்வதற்கு, உதாரணமாக ஒரே ஒரு மகா கலைஞர்தான் இருக்கிறார். அவர்தான், ’எம்.கே.டி.’ என்று சுறுங்க அழைக்கப்பெறும் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.
காலத்தால் அழியாத பாடல்களையும், காவிய திரைப்படங்களையும் தந்த எம்.கே.டி., நட்சத்திரங் களுக்கெல்லாம் நட்சத்திரமாக இருந்தார். காலம் அவரது உடலை சிதைத்தாலும் அவரது புகழை சிதைக்க முடியவில்லை. அவரைப்போல் திரையுலகில் புகழின் உச்சத்தை தொட்டவர்கள் எவரும் இல்லை.

பாகவதர் :
’பாகவதர்’ என்ற சொல்லுக்கு இசைப்புலவர் என்ற பொதுவான பெயர் இருந்தாலும் தமிழ்நாட்டில் அச்சொல், தியாகராஜ பாகவதர் என்றே அறியப்பட்டிருக்கிறது.
10 வயதில் திருச்சி ரசிக ரஞ்சன சபாவில் அரிச்சந்திரன் நாடகத்தில் நடித்தார். இவரது குரல் வளத்தைக் கண்ட வயலின் வித்வான் மதுரை பொன்னு ஐயங்கார், இவருக்கு கர்நாடக இசை கற்றுத் தந்தார். நாடக ஆசான் நடராஜ வாத்தியாரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றார். 6 ஆண்டுக்குப் பிறகு, எம்.கே.டி.யின் மேடைக் கச்சேரி அரங்கேறியது. 4 மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. ‘‘தியாகராஜன் ஒரு பாகவதர்’’ என்று விழாவில் மிருதங்க வித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்துகொண்டது. 1926-ல் திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக நடித்தார். 1934-ல் இந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக வந்தது. படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார். படம் 9 மாதங்கள் ஓடியது. இதையடுத்து, தமிழ்த் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.
முதல் தேதி:
திரையுலக புகழில் முதலிடத்தில் இருக்கும் எம்.கே.டி.யின் பிறப்பும்,இறப்பும் முதலிடத்தில்தான் அமைந்தது. மாதத்தின் முதல் தேதியில் (1.3.1910 )பிறந்த எம்.கே.டி, மாதத்தின் முதல் 1.11.1959ம் தேதியில் மறைந்தார்.
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் ( எம்.கே.டி. ) ’எங்கள் மாவட்டத்தைச்சேர்ந்தவர்’ என்று இரு மாவட்டத்துக்காரர்கள் சொந்தம் கொண்டாடுவர். அதற்கு காரணம், எம்.கே.டி. பிறந்தது தஞ்சாவூர் மாவட்டத்தில். வளர்ந்தது திருச்சியில். தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படும் மாயவரம் அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தது. இங்கு, விசுவகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் கிருஷ்ணமூர்த்தி- மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார் எம்.கே.டி. சிறுவயதாக இருந்தபோதே, தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனை, திருச்சி பாலக்கரையில் பழைய கோயில் என அழைகப்படும் ஜபமாலை மாதா கோயில் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார் கிருஷ்ணமூர்த்தி.
எம்.கே.டி. உடன் பிறந்தவர்கள், சகோதரிகள் அமிர்தவல்லி, புஷ்பவல்லி, பங்கஜவல்லி. சகோதரர்கள்: எம். கே கோவிந்தராஜ பாகவதர்,எம். கே. ஷண்முகம். பாகவதரின் மகள்கள்: சுசீலா, சரோஜா மகன்: ரவீந்திரன்.

எதிர்நீச்சல்:
எத்தனையோ எதிர்நீச்சல் போட்டு கலையுலகில் வெற்றி வாகை சூடிய எம்.கே.டிக்கு சிறுவயதில் மிகவும் பிடித்தது பாய்ந்தோடும் நதியும் எதிர்நீச்சலும். தியாகராஜனுக்கு திருச்சியில் உள்ள உய்யகொண்டான் ஆற்றுப்பாலமே பள்ளிக்கூடமாக இருந்தது. பாய்ந்தோடிய ஆற்று நீரும், எதிர்நீச்சலுமே பாடமாக இருந்தன.
வாழ்க்கையில் எம்.கே.தியாகராஜபாகவதர் பல எதிர்நீச்சல்களை போடவேண்டியதிருந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்தான் எம்.கே.டி. அவருக்கு இருந்த சொத்தெல்லாம் அவருடைய பாட்டனார் முத்துவேல் ஆச்சாரி திருச்சி பாலக்கரையில் விட்டுச் சென்றிருந்த ஒட்டுவில்லை வீடு ஒன்றுதான். அதன் மேலும் கடன் வாங்கிக் காலம் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவருடைய தகப்பனார் கிருஷ்ணமூர்த்திக்கு. ஏழ்மையின் நிலைமையை தியாகராஜனின் சம்பளத்தைக்கொண்டு சமாளிக்கலாம் என்ற கோணத்திலும் சிந்தித்து எம்.கே.டி. நாடகங்களில் நடிக்க சம்மதித்தார்.
1926-ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் 'பவளக்கொடி' நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் 'பவளக்கொடி' வேடமேற்று பெண் வேடத்தில் டி.பி.ராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் 'பவளக்கொடி' வேடத்தில் எஸ். டி. சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.
1934-ல் அவர்கள் நடித்த 'பவளக்கொடி' நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ் நாடெங்கும் தியேட்டர்களில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது. இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளில் 9 வெற்றிப் படங்களில் நடித்து சாதனை படைத்தார் பாகவதர். இவர் கன்னடத்து பிரபல பாடகி அஸ்வத்தம்மாவுடன் நடித்த சிந்தாமணி படம் 1937இல் வெளிவந்து வசூலைக் குவித்தது. அந்தப் பணத்தில் கட்டப்பட்டதுதான் மதுரை சிந்தாமணி டாக்கீஸ். இதை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஒய்.வி ராவ்.
1937இல் எம் ஆர் சந்தான லட்சுமியுடன் நடித்த அம்பிகாபதி படத்தின் மூலம் வசனகர்த்தாவாக இளங்கோவன் முதன் முதலாக அறிமுகமானார். படத்தை இயக்கிவர் எல்லிஸ் ஆர் டங்கன் என்ற அமெரிக்கர். ஆங்கிலப் படமான ரோமியோ ஜூலியட்டுக்கு இணையாக எடுக்கப்பட்ட தமிழ் காவியம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
1937இல் வெளிவந்த திருநீலகண்டர் பாடல்களுக்காகவே ஓடிய படம். இவர் பாடிய 'தீன கருணாகரனே நடராஜா' 'மறைவாய் புதைத்த ஓடு ' என்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆயின. அதே வருடம் வெளியான அசோக் குமார் படத்தில்தான் சித்தூர் வி நாகையா, பி கண்ணாம்பா தெலுங்கிலிருந்து முதன் முதலாக தமிழுக்கு அறிமுகமானார்கள். இதில் பாகவதர் பாடிய 'உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ', 'சத்வகுனபோதன்', தியானமே எனது மனது நிறைந்தது' என்ற பாடல்கள் தமிழமெங்கும் பாடப்பட்டவை.
பட்சி ராஜா பிலிம்ஸின் ' சிவகவி' இதே ஆண்டு வெளிவந்தது. திரைக்கதை வசனம் இளங்கோவன். தமிழக திரை உலகின் கனவுக்கன்னி டி ஆர் ராஜ குமாரி முதன் முதலாக பாகவதருடன் நடித்தார் நாட்டியக்காரியாக. தமிழக மக்கள் 20,30 முறை பார்த்த இசைக் காவியம் இந்தப் படம்.

1944 தீபாவளியன்று வெளியான படம் ' ஹரிதாஸ்'. பிரபல பாடகி என். சி. வசந்த கோகிலம் கதாநாயகியாகவும் டி ஆர் ராஜகுமாரி தாசியாகவும் நடித்த படம். பாகவதரின் 9வது தொடர் வெற்றிப் படம். பாடல்கள் பாபநாசம் சிவன். இசை ஜி ராமநாதன்.இயக்கம் சுந்தர் ராவ் நட்கர்னி. மூன்று தீபாவளிகளாக தொடர்ந்து ஓடி வசூலை குவித்த படம்.

இன்னும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதருக்கும் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கலைவாணர் இருவரும் சிறையில் இருந்த காலம் 2 வருடம் 2 மாதம் 13 நாட்கள். சிறையிலிருந்து திரும்பி வந்ததும் 1948இல் ராஜமுத்திரை என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். பிரபல பாடகி எம் எல் வசந்தகுமாரி பாடல்களைப் பாடி இருந்தார். கதாநாயகி வி என் ஜானகி, கதை வசனத்தை புதுமைப்பித்தன் எழுதினார். முடியும் தருவாயில் அவர் திடீரென்று மரணம் அடைந்ததால் மீதி வசனங்களை நாஞ்சில் ராஜப்பா எழுதி முடித்தார். படம் வெளிவரும் முன்னே இசைத்தட்டுக்கள் வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்தன. இசை சி ஆர் சுப்புராமன். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆயின. இதில் எம் ஜி ஆர் எம் ஜி சக்ரபாணி நடித்திருந்தனர். இந்தப் படத்தில்தான் பானுமதி தெலுங்கிலிருந்து தமிழ் திரைப் பட உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனாலும் படம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.10 வாரங்களே ஓடியது. பாகவதர் மனம் தளர்ந்தார். பாகவதரின் திரை உலகின் முதல் தோல்வி இதுவே. இருந்தாலும் தனது 11வது படமான அமரகவியை தயாரித்தார். டி ஆர் ராஜகுமாரி, பி எஸ் சரோஜா ஜோடியாக நடித்தனர். இசை ஜி ராமநாதன். வசனம் பாடல்கள் கவிஞர் சுரதா. இதில்தான் அவர் அறிமுகமானார்.
பாகவதரின் 12வது படம் சியாமளா. தெலுங்கில் எஸ் வரலட்சுமி கதாநாயகியாக நடித்த படத்திலோ கதாநாயகனை நீக்கிவிட்டு பாகவதரை நடிக்கச் செய்து தமிழில் தயாரித்தனர். இதில் பாகவதர் பாடிய ' ராஜான் மகாராஜன்' என்ற பாடல் பிரபலமாகியது. பாகவதர் மீசையுடன் நடித்த ஒரே ஒரு படம் இதுவே. படம் ஓடவில்லை.
பாகவதரின் 13வது படம் 'புதுவாழ்வு'. இதை இயக்கம் பொறுப்பை பாகவதரே ஏற்றார். லலிதா இதில் ஜோடியாக நடித்தார். மாதுரி தேவி, டி எஸ் பாலையா, என் எஸ் கே , மதுரம் இதில் நடித்தனர். படம் சுமாராகவே ஓடியது.
பாகவதரின் கடைசிப் படம் சிவகாமி.இதில் ஜி வரலட்சுமி ஜோடியாக நடித்தார். தெலுங்கில் பிரபல நடிகர் ஜக்கையா, நடிகை ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ இளம் ஜோடியாக நடித்தனர். படம் சுமாராக ஓடியது.

வசீகரன்:
தங்க நிறம், கோதுமை நிறம், நிலவொளி வீசும் முகம், மயக்கும்பார்வை, என்று ஒரு பெண்ணை வர்ணிப்பதுபோலவே எல்லோராலும் வர்ணிக்கப்பட்டார் எம்.கே.டி. அந்த அளவிற்கு வசீகரம் கொண்டிருந்தார்.
எல்லோரையும் வசீகரிப்பதற்கு என்றே அழகுக்கே அழகூட்டும் விதமாக பல மணிநேரம் மெனக்கெட்டிருக்கிறார். தினமும் காலையில் வெந்நீரில் பன்னீர் ஊற்றிக்கலந்து, குளித்திருக்கிறார். அரைத்த சந்தனம், சவ்வாது, புனுகு, அத்தர் போன்ற இயற்கை மணம் நிறைந்த வாசனை திரவியங்களை உடலில் பூசிக்கொண்டு, பட்டுவேட்டி- சட்டை, அங்கவஸ்திரம் அணிவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். தினமும் புத்தாடைதான் அணிவது என்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார் என்ற பேச்சும் இருக்கிறது.
’யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது மாதிரி, காற்றில் கலந்துவரும் நறுமணத்தை வைத்தே எம்.கே.டி. வருகிறார் என்று உணர்ந்துகொள்வார்கள். எம்.கே.டி. வந்துவிட்டு போனபின்னரும் கூட நீண்ட நேரத்திற்கு அந்த இடத்தில் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும் என பூரித்துச்சொல்கிறார்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அழகில் ஆண்களும் பெண்களும் மயங்கிக்கிடந்தார்கள். அந்த எம்.ஜி.ஆரே ஒரு காலத்தில் எம்.கே.டியின் அழகில் சொக்கிக்கிடந்தார். ஆயிரம் பேர் நிற்கும் கூட்டத்தில் ஆயிரம் பேரையும் தன் பக்கம் ஈர்த்துவிடும் எம்.கே.டியின் வசீகரத்தை கவனித்து, தன்னையும் அதைப்போலவே தயார் படுத்திக்கொண்டார் எம்.ஜி.ஆர். எம்.கே.டியின் தீவிர ரசிகராக ஆகிப்போனார். பாகவதரின் ரசிகனாக மாறி, அவரைப் போலவே தன்னை வசீகரமாக வைத்துக்கொண்டவர் எம்.ஜி.ஆர். ரங்கூன் கமலம் கல்லில் செய்த கடுக்கன், சரிகைத்துண்டு, வைரமாலை, சில்க் ஜிப்பா, எட்டுமுழ வேஷ்டி, வைர மோதிரம், அடர்ந்த கழுத்து வரை தொங்கும் முடி, கறுப்புநிற கட்ஷூ, ஜவ்வாதுப் பொட்டு, வாசனையை வைத்தே காரில் வரும் பாகவதரை வெளிப்படுத்தும் உயர்ந்த வகை செண்ட் என பாகவதரின் இந்தப் பாணியில் பாதியைக் கடைப்பிடித்தவர் மக்கள் திலகம்.

காதல் மன்னன்:
அந்தக்காலத்தில் பல பெண்களின் தூக்கத்தை பாழடித்தவர் எம்.கே.டி. தமிழ் சினிமாவின் முதல் காதல் மன்னன் எம்.கே.டி’தான். வெள்ளைக்குதிரை. அதன் மேல் ஒய்யாரமாக பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு பவனி வர, பெண்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஓடுவர். அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்த்து பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள். தன் மனைவி பாகவதரை பார்த்துவிடக்கூடாது, அவர் அழகில் மயங்கிவிடக்கூடாது என்பதற்காக கணவன், மனைவியை முக்காடு போட்டு மறைத்துக்கொண்டே இருப்பான். ஆனால் மனைவி முக்காட்டை நீக்கி பாகவதரை பார்த்து சொக்கிப்போவாள். இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி. படத்தில் மட்டுமல்ல, உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்து, பித்துப் பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம். ’உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார்’ என்கிற ரீதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதர் வீட்டில் குவிந்தன.

பாகவதர் கிராப்:
எம்.கே.டியின் தலைமுடி இயற்கையிலேயே கோதி விட்டபடி, பின்புறமாக இறங்கியிருக்கும். இந்த பாகவதர் கிராப் ஸ்டைல் 1935ம் ஆண்டில் இருந்து 60 வரை நீடித்தது. அதன்பிறகு 80களில் அதே ஸ்டைல் ‘ஸ்டெப் கட்டிங்’ என்று பெயரில் ரசிகர்கள் வைத்திருந்தனர். 90களில் இருந்த ‘பங்க்’ ஸ்டைலும் ஏறத்தாழ பாகவதர் கிராப்தான்.
ஜிப்பா:
எம்.கே.டி அணிந்திருந்த ஜிப்பாவும் அந்தக்காலத்தில் பிரபலம். ’பாகவதர் ஜிப்பா’ என ரசிகர்கள் பெருமையாக அணிந்துகொண்டனர்.
கோல்டன் வாய்ஸ்:
எம்.கே.டியின் குரலை அந்தக்காலத்தில் ‘கோல்டன் வாய்ஸ்’ என்பர். இன்று அக்குரல்தான் ஓல்டு இஸ் கோல்டு. பெண்மையும் ஆண்மையும் கலந்த அவருடைய குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. அவர் பாடல்களில் 41/2 கட்டை (குரல் தடிமன்) சுருதியில் (சுதி) பாடக்கூடியவர். சுருதியின் உச்ச நிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். அவரது பாடல்கள், பாமரர்களும் ரசிக்கும் விதமாக இருந்தன. பல கோடி மக்களின் இதயங்களில் அப்பாடல்கள் இன்னமும் எதிரொலிக்கின்றன.
பாட்டு:
எம்.கே.டி யின் பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஆஸ்தான பாடலாசிரியர் பாபநாசம் சிவன். இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராவார். இவரின் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின; மக்களிடையே பெரும்புகழையும் பெற்றன. ’மன்மத லீலையை வென்றார் உண்டோ’, ’சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே’என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
உன்னை அல்லால், நீலகண்டா, அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்), சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன், ஞானக்கண் இருந்திடும் போதினிலே, பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல், மன்மத லீலையை வென்றார் உண்டோ, போன்றப் பல் பாடல்கள் இவரின் புகழுக்கு சான்றாக உள்ளன.
அவரின் கர்நாடக இசைக்கு சான்றாக தஞ்சை அருகே நடந்த நிகழ்வை சான்றாக கூறுவர். தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில் இசைக் கச்சேரி செய்யும் பொழுது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்காமான அறிவிப்புச் சங்கொலி முழங்கியது, அப்பொழுதும் பாடுவதை நிறுத்தாமால், அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து அது முடியும் வரை பாடினார். மக்களின் கவனம் முழுவதும் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.
அரிதாஸ் படத்தில் வரும் பாடலான மன்மதலீலை என்ற பாடல் சாருகேசி எனும் பாரம்பரிய இசையில் பாடப்பட்டது. அந்த பாடலுக்குப்பிறகே பிற கர்நாடக இசை வித்துவான்கள் சாருகேசி (26 வது மூலராகம்-(மேளகர்த்தா)) இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு "சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர்" என்று தியாகராஜ பாகவதரை வர்ணிக்கின்றார்.
அவரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தனர் அனைவருக்கும் புரியும்படி பாடினார்.
தங்கத்தட்டு :
பாகவதர் திரை இசை உலகின் உச்சத்தில் இருந்தபோது தங்கத்தட்டில்தான் சாப்பிடுவாராம். அவரது பொன்னான மேனி குறித்து பலரும் பேசிக்கொண்ட பேச்சு ஒன்று உண்டு. இவர் சாப்பிடும்போது சூடான சாதத்தில் தங்க ரேக்குகளை வைத்துவிடுவாராம். அவை அந்த சூட்டில் கரைந்து உணவுடன் கலந்து விடுமாம். அதை அப்படியே சாப்பிடுவாராம். அதனால்தான் அவரது மேனி பொன்னிறத்தில் இருந்ததாம்.
ஒரு முறை கவிஞர் சுரதா எம்.கே.டி. இல்லத்திற்கு சாப்பிடச் சென்ற போது அவருக்கு வாழை இலை
போட்டார்கள். ஆனால் பாகவதர், “அவர் என்னுடன் விருந்தாளியாக இருக்கும் வரை அவருக்கும் தங்கத் தாம்பாளத்தில்தான் உணவளிக்க வேண்டும்” எனக் கட்டளை இட்டாராம்.

தமிழிசை :
சென்னையில் 1941ல் கல்கி, ராஜாஅண்ணாமலை செட்டியார், ஆர் கே சண்முகம் செட்டியார் ஆகியோர் தமிழிசை சங்கம் ஆரம்பித்தபோது, அதை ஊக்குவித்ததோடல்லாமல் தமிழ் பண்ணிசை ஆய்விலும் பங்கெடுத்தார் எம்.கே.டி. 1954 வரை தமிழிசை விழாவில் தொடர்ந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு விழாக்களிலும் தமிழில் கீர்த்தனைகள் பாடி தமிழிசையை ஊக்குவித்தார். ‘சொல்லுபாப்பா’ என்ற தலைப்பிட்டு பாரதி பாடல்களை ஒவ்வொரு மேடையிலும் பாடினார்.
ரசிகர்கள்:
பாகவதர் நடந்து வந்த பாதையில் உள்ள மண்ணை எடுத்து வைத்துக் கொள்வார்களாம் அவரது ரசிகர்கள். அவர் தொட்ட பொருட்களை முத்தமிட்டு மகிழ்வார்களாம். ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிப்பர். அந்த அளவிற்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம்.
நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு மட்டுமே சாத்தியமாயிற்று.
அந்தக்காலத்தில் இவரைக்காண கூடும் கூட்டத்தை, ‘ஜவர்கல்லால் நேருவுக்கு கூடும் கூட்டத்தை விடவும் அதிகம் ஜனம்’என்றே விமர்சனம் செய்தனர். ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிபர். அந்த அளவிற்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம். ஒரு சமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க நேரிட்டது. பாகவதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயில் வந்தவுடன் கார்டு, ரயிலை நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர். இன்னொரு சமயம், காரில் போய்க் கொண்டிருக்கும் போது, ரசிகர்கள் இவரைப் பார்த்து விட, ஒரு ரசிகர் அருகிலிருந்த கடையில் சோடா வாங்கிவந்து தர, பாகவதரின் கார் ஓட்டுனர் சுகாதரமற்ற இதை குடிக்கமாட்டார் என்று கூற ஆனால், எம் கே டி உடனே சோடாவை வாங்கி குடித்து விட்டு ரசிகர்களின் அன்பை விட பெரிது வேறொன்றுமில்லை என்றார்.
அன்றைய கால கட்டத்தில் இவரின் கச்சேரிகளை காண மக்கள் மின்சாரக் கம்பத்தில் ஏறி நின்று கொண்டு கேட்டனர். அம்மாதிரி சமயத்திலே ஒரு சிறுவன் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்தது உண்டு. பாகவதர் அச்சிறுவனின் குடும்பத்துக்கு 5000 ரூபாய் நிதியுதவி அளித்தார். இது அன்றைய நாட்களில் மிகப்பெரியத் தொகை.
பி.யூ.சின்னப்பாவும், தியாகராஜ பாகவதரும் சமகாலத்தவர்கள் என்பதால் இருவருடையை ரசிகர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவதுண்டு.
கலைந்து போன மேகங்கள்:
கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு 40களில் எம்.கே.டியின் புகழ் இருந்துள்ளது. ஆனால் 1950களில் அவரது புகழ் சரியத் தொடங்கியது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறைச்சாலை சென்று வந்ததும் அதற்கு ஒரு காரணம்.
புகழின் உச்சத்தில் இருந்தபோது, தென்மாவட்டம் ஒன்றிற்கு போக ரயிலில் ஏற வந்த பாகவதரை மக்கள் அடையாளங்கண்டு, அவரை தரிசிக்க வந்த கூட்டத்தால் பாகவதர் 4 மணிநேரம் தாமதமாக சென்றதாக சொல்வார்கள். தனது காருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த அவரது கையை தொட்டு முத்தமிட மக்கள் திரண்டுவந்ததை ஆச்சர்யம் பொங்க சொல்வார்கள் அக்காலத்தில். அதே பாகவதருக்கு பின்னாளில் ஏற்பட்ட சம்பவம் காலம் செய்த கோலம்.

சென்னை செண்ட்ரலில் முதல் வகுப்பு வண்டி ஏறவந்த பாகவதர் மக்களின் அன்பு வெள்ளத்தில் திணறிப்போன துண்டு. அதே பாகவதர் அதே நீலகிரி எக்ஸ்பிரஸ் வண்டியில், ஒரு கந்த சஷ்டி விழாக் கச்சேரிக்கு இரண்டாவது வகுப்பில் ஏறிச்செல்கிறார். அன்று அவரை அடையாளம் கண்ட ஓரிருவரும் அவரை நெருங்கிப்போகவில்லை. அதே வண்டிக்கு எம்.ஜி.ஆரும் வந்ததால் வந்த கூட்டமெல்லாம் அவரை நோக்கி ஓடியது. எம்.ஜி.ஆரைப்பார்கும் ஆவலில் இளைஞர் ஒருவர் பாகவதரை தள்ளிவிட்டு ஓடியபோது, பாகவதரின் மனம் என்ன நினைத்திருக்கும்? அந்திம வாழ்வின் அர்த்தம் இதுதான் என்று கூட நினைத்து சமாதானப்பட்டிருக்கும்.
திருச்சியில் ‘ஆனந்த பவனம்’ என்று மாளிகை கட்டினார். இந்த மாளிகையின் குடிபுகு விழாவிற்கு தமிழகமே திரண்டு வந்தது. அவருக்குப்பின்னால், அது ஒரு பஸ் அதிபர் மாளிகையாகியது. தற்போது தங்கும் விடுதி மற்றும் உணவகம் உள்ள ஓட்டலாக மாறிவிட்டது. எனினும், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கமும் அதிலே இயங்கிவருவது ஓரளவிற்கு நிறைவை தருகிறது.
சொல்ல முடியாத சோகம் :
இருக்கும் வரை அள்ளி அள்ளி கொடுத்தவர், கடைசி காலத்தில் சிரமத்திற்குள்ளானார். பிறப்பில்தான் அவர் ஏழை. பின்னர், மன்னர் போலவே அரண்மனை கட்டி வாழ்ந்தவர். அப்படிப்பட்டவரின் இறுதி வாழ்க்கை, சொன்னால் நம்ம முடியாத அளவிற்கு மிகவும் வேதனையானது.
அம்பிகாபதியில் தலையை இழப்பது போலவும், ஹரிதாஸ் படத்தில் கால்களை இழப்பது போலவும், நவீன சாரங்கதாரா படத்தில் கைகளை இழப்பது போலவும், அசோக்குமார் படத்தில் கண்களை இழப்பது போலவும் நடித்த பாகவதருக்கு உண்மையிலேயே கண் பார்வை பறிபோனது. சிவகாமி படத்தின் இறுதி காட்சிகள் கோயில்களில் படமாக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிகமாக நலிவடைந்திருந்தார். அவரின் காட்சிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார். நிலைமை மோசமாகி, கண் பார்வை இழந்ததில் விரக்தியுற்றார்.
மன அமைதியை வேண்டி, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரகாரத்தில் அமர்ந்திருப்பதை வழக்கமாக்கிக்கொண்டார். மொட்டை அடித்த, கண்பார்வை பாதிப்படைந்த எம்.கே.டி. அப்படி உட்கார்ந்திருப்பதை காணச்சகிக்காத அன்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, சென்னை பொது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள சம்மதித்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

ஒரு மா கலைஞர் கண் பார்வை இழந்து கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தார் என்பதெல்லாம் அதிர்ச்சியளிக்கிறது என்றால், அந்த மா மனிதருக்கு மணிமண்டபமோ, சிலைகளோ எங்கும் இல்லாதது பேரதிர்ச்சி தருகிறது. தமிழ்சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு மணிமண்டபம் கூட இல்லை. திருச்சியில் உள்ள எம்.கே.டி. நினைவிடம் சாதாரண கல்லறையாகவே இருக்கிறது. அவரது நினைவுநாளில் உறவினர்களும், ஒருசிலரும் மட்டுமே அவரை வணங்கிச் செல்ல வருகின்றனர். ஒரு முன்னோடிக் கலைஞனுக்கு திரையுலகம் காட்டும் மரியாதை இவ்வளவுதானா? என்ற வேதனையை தருகிறது. அதேநேரம், தமிழ்நாடு அரசு சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் தியாகராஜ பாகவதருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூலை மாதம் சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்திருப்பது ஆறுதலைத்தருகிறது.
- கதிரவன்